

‘நாடகமே சிந்தனை, நல்ல சமூகமே லட்சியம்’ என்று வாழ்ந்தவர் கோமல் சுவாமிநாதன். கடந்த 18 அன்று அவருக்குச் சிறப்பானதொரு நினைவாஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் முக்கிய அங்கமாக அவரது புகழ்பெற்ற ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் அரங்கேறியது.
ஒரு குடம் தண்ணீருக்காகப் பத்து மைல் தூரம் மக்கள் ஆலாய்ப் பறந்த கதையைச் சொல்கிறது ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம். கிராமத்து மக்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள், அவர்களை அலைக்கழிக்கும் அதிகார வர்க்கத்தினர், அதிகாரப்ப் படிநிலைகளில் பந்தாடப்படும் அவர்களது வாழ்வு எனப் பலவற்றையும் விமர்சித்துச் செல்கிறது நாடகம்.
80-களின் தொடக்கத்தில் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சமும் வறட்சியும் தலைவிரித்தாடின. பல கிராமங்கள் வறண்டு காணப்பட்டன. இப்பிரச்சி னையின் வீரியத்தையும் அதன் வேர்களையும் தன் படைப்பில் சித்தரித்திருக்கிறார் கோமல். திரைப்பட இயக்கு நர், நாடகவியலாளர், சமூகச் செயல்பாட்டாளர், பத்திரிகை யாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட அவரது அனுபவத்தின் கைவண்ணத்தில் எழுதப் பட்ட வசனங்களால் மேடையில் தெறித்த கோபம் அரங்கமெங்கும் படர்ந்தது.
தண்ணீர்ப் பஞ்சம், வறுமை, முதலாளித்துவச் சுரண்டல்கள், அதிகர வர்க்கத்தின் அலட்சியம், அரசியல்வாதிகளின் பாராமுகம் எனத் தெற்கத்தி மக்களின் பாடுகளைச் சொல்லும் இந்நாடகத்தில் வலுவான கதையும் உள்ளது. இரண்டு கொலைகள் செய்துவிட்டு வந்த வெள்ளைத்துரை அத்திப்பட்டிக்கு நாடோடியாக வருகிறான். அந்த ஊர் மக்களுக்குப் பத்து மைல் தொலைவில் உள்ள மலையிலிருந்து தண்ணீர் எடுத்துத் தருகிறான். தொடர்ந்த புறக்கணிப்புக்கு உள்ளாகும் மக்கள், தங்கள் பிரச்சினையை வெளி உலகத்துக்குத் தெரிவிப்பதற்காகத் தேர்தல் புறக்கணிப்பு செய்கிறார்கள். மேலும் பல விதங்களிலும் போராடி அதிகார பீடத்தை எதிர்த்து நிற்கிறார்கள்.
லலிதா தாரிணி
கோமலின் 80-ம் ஆண்டு நினைவாஞ்சலியின் நிறைவு விழாவை முன்னிட்டு அவர் மகள் லலிதா தாரிணி இந்த நாடகத்தை இயக்கியிருந்த விதம், தந்தையின் செய்தியை உலகுக்கு அளிப்பதில் அவரது உற்சாகத்தை வெளிப்படுத்தியது.
வெள்ளைச்சாமியாக ராஜ்மதன், வாத்தியாராக போத்திலிங்கம், அடைகாப்பானாக டி.ரவி, பத்திரிகையாளராக கௌரி சங்கர், எம்எல்ஏவாக தங்க பாண்டியன், செவ்வந்தியாக லஷ்மி, பூசாரியாக கார்த்திக், போலீஸ்காரராக பால்ராஜ் உள்ளிட்ட பலரும் நன்றாக நடித்திருந்தனர். குடிசைகள், திண்ணைகள், கள்ளிச்செடிகள் முளைத்த பொட்டல்காட்டுப் பாதைக்கான பிரத்தியேக திரைச் சீலை என அரங்க அமைப்பு நேர்த்தியாக இருந்தது.
குறிப்பிட்ட நோக்கம் அல்லது செய்தியைத் தாங்கிய ஆக்கங்களுக்கே உரிய பலவீனம் இந்த நாடகத்திலும் தென்பட்டது. பிரச்சினையின் சித்தரிப்பு, வசனங்கள், நடிப்பு எல்லாவற்றிலும் அழுத்தம் இருக்குமளவுக்குக் கலையம்சம் கூடவில்லை. ‘செய்தி’யைச் சொல்வதற்கான ஆவேசம், நாடகம் என்பது கலை வடிவம் என்னும் பிரக்ஞையைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
நாடகம் தொடங்குவதற்கு முன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், முற்போக்கு எழுத் தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத் தலைவர் சிகரம் செந்தில்நாதன், தண்ணீர் தண்ணீர் நாடகத்தைத் திரைப்படமாக்கிய இயக்குநர் கே.பாலசந்தரின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, ஆகியோர் கோமலின் ஆளுமையையும் படைப் பாற்றலையும் நினைவுகூர்ந்தனர்.
கடந்த நூற்றாண்டில் முத்திரை பதித்த ஒரு நாடகம் இன்றைக்குள்ள சமூகப் பிரச்சினை களோடும் பொருந்திப்போவதை அரங்கம் நிறைந்திருந்த பார்வையாளர்களின் கைத் தட்டல்கள் தெரிவித்தன.