

நகர இருப்புக்கும் கிராம நினைவுக்கும் இடையில் தள்ளாடும் தன் வாழ்க்கையைப் பாடுபொருளாகக் கொண்டவை கதிர்பாரதியின் கவிதைகள். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்’ என்ற அவரது தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:
அடைக்கலாங்குருவிகள் கொறித்து உமிழ்ந்த
நெல் உமிகளை
காற்று தன்போக்கில் அடித்துக் கொண்டுபோவதென
வார்த்தைகள் என்னை விட்டுப் போய்விட்டன.
முந்தானையில் சும்மாடு செய்து
அடுக்கிய மண் கலயங்களில்
ஊற்றுநீர் சுமந்து போகிறாள் குடியான மங்கையொருத்தி
அதை ஒரேமடக்கில் குடித்துவிடும் அளவு தாகத்தை
உன் வரவுக்காக நீடிக்கவிடுகிறது
கரம்பையின் கோடை.
உலர்ந்த உள்ளாடையை
துணிகளுக்குள் பொதிந்து எடுத்துப்போகும்
எதிர்வீட்டுப் பருவப்பெண்ணால் நினைவூட்டப்படும் நீ
இன்னும் வரவேஇல்லை.
இந்தக் கோடையும் கைவிட்டுப்போய்விட்டது.
இனி கண்கள் உடைந்து
கொட்டப்போகும் பருவமழைக்குத் தப்பி
எங்கு ஓடி ஒளியும் என்னுயிர்?
ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்
கதிர்பாரதி
விலை: ரூ. 85
உயிர்மை பதிப்பகம், சென்னை-18
044-24993448