

சாரு நிவேதிதாவும் தஸ்லிமா நஸ்ரினும்!
சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவல் ஆங்கிலத்துக்குப் போகிறது. ஆனால், தமிழ் தலைப்பையே ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் வைப்பதில் ஒரு சிக்கல். தஸ்லிமா நஸ்ரின் தனது சமீபத்திய நாவலுக்கு ‘எக்ஸைல்’ என்று பெயரிட்டிருக்கிறார். எனவே, ‘எக்ஸைல்’ நாவலின் ஆங்கிலப் பிரதிக்குப் பொருத்தமான தலைப்பு வைக்குமாறு பேஸ்புக்கில் தனது வாசகர்களிடம் கேட்டிருக்கிறார் சாரு. “தலைப்பு என்றால் தமிழில் உள்ளதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக வைக்க வேண்டும் என்று இல்லை” என்றும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
பொருளாதாரத்துக்கு மத்தியில் புத்தகங்கள்!
தமிழ்நாடு பொருளாதார வல்லுநர்கள் சங்கம் கடந்த 37 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இதன் அங்கத்தினர்கள். இந்த அமைப்பின் மாநாடு ஈரோடு கலை-அறிவியல் கல்லூரியில் நவம்பர் 19, 20 ஆகிய இரு நாட்கள் நடக்கவிருக்கிறது. பொருளியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகப் புத்தகக் காட்சியும் நடத்துகிறார்கள். தி இந்து, என்சிபிஹெச், காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், கிழக்கு பதிப்பகம் உள்ளிட்ட முக்கியமான பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. “மாநாட்டில் பங்கேற்பவர் ஒவ்வொருவரும் கட்டாயம் புத்தகம் வாங்க வேண்டும் என்ற உறுதியோடு நடத்தப்படும் புத்தகக் காட்சி இது” என்கிறார் பேராசிரியர் மணி. முன்னோடி முயற்சி! எல்லோரும் பின்பற்றலாம்!
வழக்கறிஞர் கவிஞர்
கோவை வழக்கறிஞர் மு.ஆனந்தன் தொடர்ந்து சட்டப் புத்தகங்களை எழுதிவருவது தெரியும். இப்போது கவிதைகளோடு வருகிறார். அவரது ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’ புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
கடல் காற்றோடு இலக்கியம்!
சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலைக்குப் பின்னால் வெள்ளிக்கிழமைதோறும் (மாலை 5 முதல் 8 மணி வரை) இலக்கியக் கூட்டங்களை நடத்துகிறார்கள் கல்லூரி மாணவர்கள். நெய்தல் அமைப்பு, மாநிலக் கல்லூரி மாணவர்கள், சென்னைப் பல்கலை மாணவர்கள் இணைந்து நடத்தும் இக்கூட்டங்களில் மாணவர்களுக்கு இணையாக வெளி யாட்களும் வருகிறார்களாம்! கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்புகொள்ள: பாக்யராஜ், கைபேசி: 98843 72072.
குட்டி விமர்சனங்களின் காலம்!
பெரிய பெரிய புத்தக விமர்சனங்களின் காலம் முடிந்துவிட்டது போலும். இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப் பற்றி நான்கு வரிகளில் ஃபேஸ்புக்கில் எழுதினால் அதுவே பரவலாகிவிடுகிறது. இந்த ‘மினி’யுகத்துக்கு ஏற்றவாறு ‘எதுவரை?’ இணைய இதழில் உருப்படியான ஒரு காரியம் செய்துவருகிறார்கள். தமிழில் வெளியாகும் முக்கியமான புத்தகங்களைப் பற்றிக் குட்டிக் குட்டிக் குறிப்புகளை இந்த இணைய இதழில் வெளியிடுகிறார்கள். ஒரு பருந்துப் பார்வையை ஓட்டினால் முக்கியமான புத்தகங்களைப் பற்றிய நல்ல அறிமுகம் நமக்குக் கிடைக்கும். இந்த இணைய இதழின் புத்தக அறிமுகப் பக்கத்தின் சுட்டி: >http://eathuvarai.net/?page_id=205