

விவசாயத்தோடு மல்லுக்கட்டி நிற்கும் காவிரிப் பாசன சம்பாரிகளின் வாழ்க்கைப் பாடுகள்தான் ‘கறிச்சோறு’ நாவலின் களம். உழைப்பை மட்டுமே தூக்கிச் சுமக்கிற அந்த மக்களுக்குள் ஊடாடும் கோபங்கள், பகைமைகள் மட்டுமின்றி, பெருக்கெடுத்தோடும் அன்பும் ஈரமாய் பாய்கிறது சி.எம். முத்துவின் எழுத்து வழியாக.
முத்துக்கண்ணு, தருமையா, பூரணி, கமலா என்றெல்லாம் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சக மனிதர்களை நாவலின் நாயகர்களாக்கி, நம் முன்னே நிறுத்தியிருக்கிறார் சி.எம். முத்து.
‘…வூட்டுக்குள்ளே தானியத்துக்கு ஒண்ணும் கொறச்சல்ல. ஒரு பக்கத்துல கடலரிசி ஒடச்சி பட்டறையா கெடக்கு. இன்னொரு பக்கத்துல கம்பரிசி அடிச்சி வெகுசா குமிச்சிக் கெடக்கு. சோளரிசி மூட்ட வேற…’ இப்படியாக, நாவல் முழுக்க கொட்டிக் கிடக்கும் சொற்குவியலுக்குள் மணத்துக் கிடக்கிறது தஞ்சை வட்டார மக்களின் வாழ்வு.
- மு.மு