

தமிழின் முக்கியமான நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள். தமிழ்நாட்டுப் பண்பாட்டு வரலாற்றைக் கதைப் பாடல்கள், அம்மானைகள் போன்ற நாட்டார் அம்சங்களின் வழியே உருவாக்கும் முனைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
கண்ணகி தொடர்பாகக் கேரளத்திலும் தமிழகத்திலும் இன்று புழக்கத்திலுள்ள கதைப் பாடல்கள், வாய்மொழிப் பாடல்கள் முதலான கலை வடிவங்களுக்கான மூலம் புகழேந்திப் புலவரின் ‘கோவிலன் கதை’ என்னும் அம்மானை வடிவத்தை அ.கா.பெருமாள் முன்மொழிகிறார்.
இவர் நளவெண்பா எழுதியவர் அல்ல எனச் சொல்லிவிட்டு, இந்தப் புகழேந்திப் புலவர் பற்றிய மேலதிகத் தகவல்களை வலுவான மேற்கோள்கள் மூலம் நூலாசிரியர் தருகிறார். இன்று கேரளத்தில் கண்ணகி, பகவதி அம்மனாக வழிபடப்படுவதற்கான காரணம் புகழேந்திப் புலவர்தான் என்பதையும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலருக்காக அவர் எழுதிய பழையாற்றைப் பற்றிய கட்டுரையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. சுவாரசியமும் ஆய்வுத் திடமும் கூடிய இந்தக் கட்டுரைகள் மூலம் பண்பாட்டு வரலாறு பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தைப் பேராசிரியர் இதில் உருவாக்குகிறார்.
தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
அ.கா.பெருமாள்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., சென்னை
விலை: ரூ.130
தொடர்புக்கு: 044-26251968, 48601884
- ஜெய்
மொழிபெயர்ப்பு இலக்கணம்
இலக்கியத்தில் மொழிபெயர்ப்பைத் தனிப் படைப்பு எனச் சொல்வோர் உண்டு. அந்த அளவுக்குக் கற்பனை ஆற்றலும் மூல மொழி, பெயர்ப்பு மொழி ஆகியவற்றின் பண்பாட்டுப் பின்புலமும் இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு அவசியம்.
இந்த மொழிபெயர்ப்புக் கலையின் இலக்கணங்களை அனுபவத்தின் அடிப்படையில் விளக்கும் கட்டுரைகளை இந்த நூலில் சு.இராசாராம் தொகுத்துள்ளார். தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ம.இலெ.தங்கப்பாவின் மொழிபெயர்ப்புச் செலவுகள் பற்றிய கட்டுரையில் பாரதியின் பாடல்களை மொழிபெயர்த்த அனுபவத்தைச் சுவைபடப் பகிர்ந்துள்ளார்.
‘வையகம் காப்பவரேனும்/சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும்’ என்ற பாரதியின் வரியை முதலில் மொழிபெயர்த்தபோது keeper of a petty banana shop என்பதை petty vendor by street எனப் பின்னால் திருத்தியதைப் பாடமாக முன்வைக்கிறார். கண்ணனின் கட்டுரையில் ‘கம்பியை நீட்டிவிட்டான்’, ‘rubbed shoulders’ போன்ற தொடர்கள் அப்படியே மொழிபெயர்க்கப்படுவதன் அபத்தத்தை உதாரணத்துடன் சொல்லியிருப்பது வாசிப்புக்குச் சுவாரசியம் அளிக்கிறது.
அரவிந்தனின் கட்டுரை, தொகுப்புக்கு நியாயம் செய்யும் விதத்தில் மொழிபெயர்ப்பு இலக்கணத்தை விரிவாக எடுத்துரைக்கிறது. சுந்தர ராமசாமி, பழ.அதியமான், அமரந்தா உள்ளிட்ட பலரின் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மொழிபெயர்ப்புப் பார்வைகள்
பதிப்பாசிரியர்: சு.இராசாராம்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 04652-278525, 96779 16696
- விபின்
சினிமா பொக்கிஷம்
இன்றைய டிஜிட்டல், ஓ.டி.டி., மல்டிஃபிளக்ஸ் சினிமா காலத்தில் ‘செல்லுலாய்ட் செல்வங்கள்’ என்ற இந்த நூல் டூரிங் டாக்கீஸ் காலத்து நினைவலைகளை மீட்டெடுக்கும் வகையில் வெளியாகியிருக்கிறது. படச்சுருள் காலத்தில் ஒரு சினிமாவை உருவாக்க எவ்வளவு மெனக்கெடல் இருந்திருக்கும்! அவற்றை அலசி ஆராய்ந்திருக்கிறார் ‘செல்லுலாய்ட் செல்வங்க’ளின் ஆசிரியர் குரு.நாகராஜன்.
சினிமா என்ற ஒற்றைச் சொல்லின் பின்னணியில் உள்ள எல்லாப் பகுதிகளையும் பிரித்து, அதில் பல அரிய தகவல்களைக் கோத்து எழுதியிருப்பது வாசிக்கக் சுவாரசியமாக இருக்கிறது. சினிமா எடுக்கும் முறைகள், பல தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகளின் வரலாறு, சினிமா பத்திரிகைகள், சினிமா விருதுகள் என வாசிக்கப் பல தகவல்கள் இந்த நூலில் பொதிந்து கிடக்கின்றன.
செல்லுலாய்ட் செல்வங்கள்
குரு.நாகராஜன்
விலை: ரூ.240
ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்
தொடர்புக்கு: 7708293241
- மிது
ஒரு ஊரின் வரலாறு
மறதி ஒரு பிரச்சினை என்றால், வரலாற்றுத் திரிபு வேறொரு பிரச்சினையாக உள்ளது. இவை இரண்டும் ஏற்படுத்தும் சிக்கல்கள் நமது அடையாளத்தையே அழிக்கும் விதமாக இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. இந்த நிலையில், சமூகத்தின் மீதும் பாரம்பரியத்தின் மீதும் பிடிப்புக்கொண்ட வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தங்கள் ஆற்றலுக்கு ஏற்ப உண்மையான வரலாற்றை ஆவணப்படுத்திவருகிறார்கள்.
பெ.பெரியார்மன்னன் அந்தச் சிலரில் ஒருவர். இந்த நூலில் அவர் ஆவணப்படுத்தும் வரலாறு அவர் வாழும் வாழப்பாடியை மையப்படுத்தி இருக்கிறது. வாழப்பாடியின் தொன்மை, அங்கிருக்கும் கல்வெட்டுகள், அந்த மண்ணின் பெருமை, அங்கே அமைந்திருக்கும் ஆராய்ச்சி மையங்கள் போன்ற சிறப்புகள் இந்த நூலின் மூலம் ஆதாரபூர்வமாக வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
ஊர் வளம்
பெ.பெரியார்மன்னன்
விவேகா பதிப்பகம், வாழப்பாடி
விலை: ரூ.200
தொடர்புக்கு: 04292 22922
- நிஷா