

எழுத்தாளர் சுஜாதாவின் பிரபலமான நாவல்களுள் ஒன்று, ‘கனவுத் தொழிற்சாலை’. தமிழ் இளைஞர்கள் பலரின் கனவான தமிழ் சினிமாவின் பின்னணி யதார்த்தத்தைச் சொல்லும் நாவல் அது.
சூப்பர் ஸ்டார் அருண், நடிகை பிரேமலதா ஆகியோரை மையக் கதாபாத்திரங்களாகக் கொண்டு இந்த நாவல் பயணிக்கும். வெளிவந்து நாற்பதாண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நாவலின் மொழிபெயர்ப்பை முன்னணி ஆங்கிலப் பதிப்பகமான ஹார்பர் காலின்ஸ் ‘Dream Factory' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. மாதவன் நாராயணன் மொழிபெயர்த்துள்ளார்.
யுகபாரதியின் புதிய ஆய்வு
திரைப்படப் பாடலாசிரியராகக் கவனம்பெற்ற யுகபாரதி, கவிஞர்; சிறந்த கட்டுரையாளர். வியத்தலும் சொல் உற்பத்தியும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சொற்சிக்கனமும் இயல்பும் கொண்ட அவரது கட்டுரைகள் மனதுக்கு உகந்தவை.
கவிதையியல், இடதுசாரியியல், தமிழியல், மெய்யியல் எனப் பன்முகம் கொண்ட அவரது கட்டுரைகள் தனித்துவமானவை. அறியப்படாத திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய அவரது ஆய்வுக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அந்தப் பாதையில் திரைப்படப் பாடல்களில் தமிழ் இசை ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவான ஆய்வைத் தற்போது எழுதிவருகிறார்.
ஜேசிபி இலக்கிய விருது
இந்தியாவின் பிரபலமான இலக்கிய விருதுகளுள் ஒன்று ‘ஜேசிபி இலக்கிய விருது’. ரூ.25 லட்சம் விருதுத் தொகை கொண்ட இந்த விருது, 2018இல் நிறுவப்பட்டது. நேரடி ஆங்கில ஆக்கம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிராந்திய மொழி ஆக்கங்கள் இந்த விருதுக்காகப் பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் உருது, வங்கம், இந்தி, நேபாளம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன.
தன் இந்தி நாவலுக்காகப் புக்கர் வென்ற கீதாஞ்சலி ஸ்ரீ இந்தப் பட்டியலில் கவனம் கொள்ளத்தக்கவர். வயநாடு பழங்குடிகள் பற்றிய ‘வள்ளி’ என்னும் மலையாள நாவலும் இந்தப் பட்டியலில் கவனம் ஈர்க்கும் ஒன்று. ஷீலா டோமி எழுதியிருக்கும் இந்நூலை, ஜெய களத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவர் எஸ்.ஹரீஷின் ‘மீசை’ நாவல் மொழிபெயர்ப்புக்காக 2020 இல் ஏற்கெனவே இந்த விருதை வென்றவர். பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தேர்வுக் குழுவின் நடுவராக உள்ளார்.
ராஜபாளையத்தில் புத்தகக்காட்சி
ராஜபாளையம் ரயில் நிலையம் செல்லும் வழியில் டி.பி.மில்ஸ் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் மன்றத்தில் செப்டம்பர் 4 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி, இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகக்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.
ஒரு லட்சம் தமிழ், ஆங்கில நூல்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் அனைத்தும் இந்தப் புத்தகக்காட்சியில் கிடைக்கும். அனைத்து நூல்களையும் 10% தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம். தொடர்புக்கு: 90421 89635, 88257 55682.
ஆங்கிலத்தில் பாரதி வரலாறு வெளியீடு
வ.ரா என்றழைக்கப்படும் வ.ராமசுவாமி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ‘மகாகவி பாரதியார்’ என்னும் நூலாக எழுதினார். அந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான அம்ஷன் குமார். ‘சுப்பிரமணிய பாரதி- எ பயோக்ரஃபி பை வ.ரா’ (Subramania Bharathi – A Biography by Va.Ra) என்று இந்த நூலுக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 (திங்கள்கிழமை) அன்று புதுவைப் பல்கலைக்கழகமும் சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் புலம் என்னும் அமைப்பும் இணைந்து ஒருங்கிணைத்துள்ள பாரதி நினைவு விழாவில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.
புதுவைப் பல்கலைக்கழக வளாகத்தின் மனித இயல் புலக் கருத்தரங்கு அறையில் காலை 10.30க்கு விழா தொடங்குகிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் நூலை வெளியிட பல்கலைக்கழக மனித இயல் புலத்தின் புல முதன்மையர் கிளமெண்ட் ச.லூர்து முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார். இந்த விழாவில் அம்ஷன் குமாரின் ‘பாரதியார்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.