

பறவைகள், விலங்குகளின் பால் பண்புகளைப் பற்றி ஆய்வாளர் நாராயணி சுப்ரமணியன் எழுதியிருக்கும் ‘விலங்குகளும் பாலினமும்’ கவனமாக எழுதப்பட்டதொரு நூல்.
பெண்ணாக மாறக்கூடிய ஆண் மீன், தன்பாலின ஈர்ப்பு கொண்ட விலங்கினங்கள், இணைசேராச் சிங்கங்கள் என்று உயிரினங்களின் விந்தையான குணாம்சங்களை எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.
‘இருப்பவற்றிலேயே பெரிதாக ஒரு தலைமைப் பெண் மீன், அடுத்த அளவில் பெரிதாக ஒரு தலைமை ஆண் மீன், பல சிறிய ஆண் மீன்களைக் கொண்ட கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை கோமாளி மீன்கள்’ எளிமையாகத் தெரியும் இந்தச் செய்தியை எழுதிவிட்டு, நுட்பமான பல கேள்விகளை எழுப்பி அழகாகப் பதில் தருகிறார் நாராயணி.
“ஏன் தலைமைப் பெண் மீன் பெரிதாக இருக்க வேண்டும்?” என்னும் கேள்வியை எழுப்பி, பெரிய மீனாக இருந்தால், அதிக முட்டையிடும்; சில மீன்கள் இறந்துவிட்டால்கூட குழு தப்பிப் பிழைக்கும் என்கிறார். அடுத்து, “ஏன் தலைமை ஆண் மீனைத் தவிர மற்ற மீன்கள் சிறிதாக உள்ளன?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டு, “தலைமை ஆண் மீன், பிற ஆண் மீன்களைப் போட்டியாக நினைத்து விரட்டிவிடக் கூடாது என்பதற்காக” என்று பதில் அளிக்கிறார்.
சரி, தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால் என்னாகும்? இந்த மீன்கள் அனைத்தும் பிறக்கும்போதே வளராத சினைப்பையுடன் பிறக்கும். தலைமைப் பெண் மீன் இறந்ததும், தலைமை ஆண் மீனின் உடலில் மாற்றம் ஏற்பட்டு பெண் மீனாக மாறிவிடுமாம். தலைமை ஆண் மீன், பெண் மீனாக மாறிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய மீன், தலைமை ஆணாக வளர்ந்து பொறுப்பேற்குமாம்.
ஒரு வகைப் பெண் சிலந்தி, ஆணுடன் இணைசேரத் தொடங்கும்போது, ஆணின் தலையைத் தின்னத் தொடங்கும். இணை சேர்ந்த பின்பு, புரதத்திற்காக ஆணின் முழு உடலையும் தின்றுவிடுமாம்.
இவ்வகையின் பெயர் கறுப்பு விதவைச் சிலந்தி (black-widow spider). சமூகத்தில் இந்த அறிவியல் தகவல் தவறான பொருளில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இந்தச் செய்தியுடன், நாராயணி இதையும் சேர்த்து எழுதுகிறார்: “இந்தப் பெயரே ஆண் மையச் சிந்தனை கொண்ட ஒரு பெயர்தானே? மேலும், புரதத்திற்காக ஆண் பூச்சியைத் தின்னும் பெண் பூச்சிகள் மோகினிகளும் அல்ல; அதேவேளையில், தங்கள் இனத்திற்காக உயிரைக் கொடுக்கும் ஆண் பூச்சிகள் தியாகிகளும் அல்ல. இவை அந்த இனத்தின் குணங்கள் அவ்வளவே!”
தன்பால் ஈர்ப்புக்கு எதிரான கருத்துள்ளவர்கள் முன்வைக்கும் கருத்து, “அது இயற்கை அல்ல” என்பதே. “ஸ்பைடர் குரங்குகள், ஸ்காரப் வண்டுகள், செங்கால் நாரைகள், வரிக்குதிரைகள், சிங்கங்கள், ஒருவகைப் பழந்தின்னி வெளவால் போன்ற பல விலங்குகளில் தன்பால் ஈர்ப்புப் பண்பு உண்டு” என்கிறார் நாராயணி.
இப்படியாக அறிவியலுடன் சமூகம் சார்ந்த விஷயங்களையும் அக்கறையுடன் எடுத்துரைப்பதால், இப்புத்தகம் சிறந்த சமூக அறிவியல் புத்தகம் என்னும் கோணத்தையும் பெறுகிறது. இது போன்ற ஆழமான அறிவியல் புத்தகங்கள் தமிழில் நேரடியாக வரத் தொடங்கியிருப்பது சமீப காலத்தில் நடைபெற்றுள்ள வரவேற்கத்தக்க மாற்றம்.
- இ.ஹேமபிரபா, அறிவியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com
விலங்குகளும் பாலினமும்
நாராயணி சுப்ரமணியன்
ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9840907398