

இந்திய ஆய்வு நிலையங்களில் நடைபெற்றுவரும் ஆய்வுகளை ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ நூலில் இஸ்ரோ அறிவியலாளர்கள் மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு ஆகியோர் எளிய முறையில் அறிமுகப்படுத்துகிறார்கள்.
நாடு சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், பல்வேறு ஊடகங்களில் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து அவர்கள் எழுதிய 32 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
உயர் கல்வி, மருத்துவ வசதி, சராசரி ஆயுள், வறுமை ஒழிப்பு என எந்த வளர்ச்சிக் குறியீட்டை எடுத்துக்கொண்டாலும் இந்தியச் சராசரியைவிடத் தமிழகத்து வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அடுத்து என்ன என்பதே நமக்கு முன் உள்ள கேள்வி.
இந்த முக்கியக் கேள்விக்கு விடைகாணும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகளை நூலாசிரியர்கள் பல கட்டுரைகளில் முன்வைக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்பத்தில் தமிழகம் தழைக்கப் பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.
சில பத்தாண்டுகளுக்கு முன்னர் தனிநபர் கணினி (PC) வளர்ச்சி எப்படித் தொலைத்தொடர்பு, தொழில், நிர்வாகம், கல்வி ஆய்வு என அனைத்துத் துறைகளையும் புரட்டிப் போட்டதோ, அதேபோல் இன்று குறு வான்கலம் (drone) பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இதை மனத்தில்கொண்டு ஏறக்குறைய 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், தமிழ்நாடு குறு வான்கலக் கழகத்தை உருவாக்கிட வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதைச் செவிமடுத்து, தமிழக அரசு 2022 ஜனவரி 25 அன்று ‘தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழக’த்தை முறைப்படி ஏற்படுத்தியுள்ளது என்பது சிறப்பு.
அதிநுண் அறிவியல் தொழில்நுட்பம் போர்முனையில் மட்டுமல்ல, ஏர்முனையிலும் தாக்கம் செலுத்தி செழுமைப்படுத்த முடியும் என்பது நூலாசிரியர்களின் கருத்து. விண்வெளித் தொழில்நுட்பம் முதல் நவீன செயற்கை நுண்ணறிவு வரை ஒருங்கிணைந்த நவீனக் கூட்டு விவசாயத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை நமக்கு எளிமையாக விளக்கியிருக்கிறார்கள். தமிழக வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டவர்கள், புதிய செய்திகளை அறிந்து வளர்ச்சி பெற வேண்டும் என விருப்பம் கொண்டவர்கள் படிக்க வேண்டிய நூல்.
- த.வி.வெங்கடேஸ்வரன், விக்யான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி, தொடர்புக்கு: tvv123@gmail.com
இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை
மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு
திசையெட்டு பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9113513768, 044-25976458