

சோவியத் நாவலாசிரியரும் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளருமான வாண்டா வாஸிலெவ்ஸ்கா, இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் செம்படையின் போலந்து பிரிவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். சோஷலிச யதார்த்தவாதத்தைப் படைப்புகளில் கொண்டுவந்த ஆரம்ப கால எழுத்தாளர்களில் ஒருவரான வாஸிலெவ்ஸ்கா, இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த(1944) காலகட்டத்தில் எழுதிய நாவல் ‘வானவில்’.
சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்த ஹிட்லரின் ஜெர்மானிய நாஜிப் படை, உக்ரைன் கிராமம் ஒன்றை ஆக்கிரமிக்க, கொடிய குளிர்காலத்தில் மரணத்திற்கு அஞ்சாமல் எதிர்த்துப் போர்புரிந்த கிராமவாசிகளின் பார்வையில் கதை விரிகிறது.
இந்த நாவலுக்காக வாஸிலெவ்ஸ்காவுக்கு ‘ஸ்டாலின் பரிசு’ வழங்கப்பட்டது. ரஷ்ய மொழியில் வெளியான, மிகக் குறுகிய காலத்திலேயே ஆங்கிலம்வழித் தமிழில் (1946) மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டிருக்கிறது. அன்று சோவியத் ஒன்றியத்தின் உறுப்பாக, ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்ட உக்ரைனியர்களை காலம், இன்று ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட வைத்திருக்கிறது.
வானவில் வாண்டா வாஸிலெவ்ஸ்கா
(தமிழில்: ஆர்.ராமநாதன், ஆர்.எச்.நாதன்)
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், சென்னை.
விலை: ரூ.240
தொடர்புக்கு: 98417 75112
- அபி
தென்புலத் தெய்வங்கள்
பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் ஒரு சில கட்டுரைகள், நூல் அறிமுகங்களாகவும் திறனாய்வுகளாகவும் அமைந்தவை. சமயம், வழிபாடு, உறவுமுறைகள், கலைச் சொல்லாக்கம், சிறுகதை வரலாறு, தற்கால அகராதிகளின் நுண்ணரசியல், அகழாய்வுகள் என்று இத்தொகுப்பின் ஆய்வுப் பொருட்கள் பல்வகைப்பட்டவை.
பெண் தெய்வ வழிபாடுகளில் ஆண் பூசாரிகள் புடைவையைச் சுற்றிக்கொண்டு பூசனை செய்வது ஏன், அரசியர்க்கு பள்ளிப்படை ஆலயங்கள் எழுப்பப்படாதது ஏன் என்பது போன்று பல கேள்விகளை இக்கட்டுரைகள் எழுப்புகின்றன; செல்லும் ஊர்களில் பிடிமண் கிளைக் கோயில்களைத் தோற்றுவித்தாலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது பொது வழக்கமாக இருப்பதை நினைவூட்டுகின்றன.
குலதெய்வ வழிபாட்டுச் சடங்குகளின் கூறுகள், போர் நெறிகளுடன் தொடர்புள்ளவையாக இருப்பதையும் எளிய மக்கள் எல்லா மதங்களின் இருப்பையும் இயல்பாக ஏற்றுக்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.
பெருந்தெய்வ வழிபாடாக நிலைபெற்றிருக்கும் பல கோயில்களின் தோற்றுவாய்களைத் தாய் தெய்வ வழிபாட்டு மரபோடு முடிச்சிடுகின்றன. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் என்று 100-க்கும் மேற்பட்டோர் இக்கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர். கருத்துச் செறிவான குறுங்கட்டுரைகளுக்கு இலக்கணமாகக் கொள்ளத்தக்கது இத்தொகுப்பு.
தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்
தொ.பரமசிவன்
என்சிபிஎச் வெளியீடு, அம்பத்தூர், சென்னை-50
விலை: ரூ.135
தொடர்புக்கு: 044 26251968
- செ.இளவேனில்
வாழ்வனுபவம் பேசும் கதைகள்
வாழ்வின் பெருவெளி எங்கும் சிதறிக் கிடக்கின்றன கணக்கில்லாத கதைகள். அதன் முகங்களில் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் விரவிக் கிடக்கிறோம். அந்தக் கதைகளில் நம்மையும் நம் வாழ்வையும் காண நேர்ந்தால் அது ஆனந்தக் கூத்து. அப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது, அய்யப்பன் மகாராஜனின் இந்தத் தொகுப்பு. பத்துச் சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன. ‘தொட்டா’ கதையில் வரும் செல்வியைப் போல, பால்யத்தில் அப்படியொரு பயத்தையும் பரிதாபத்தையும் நாம் எதிர்கொண்டிருக்க முடியும்.
அதே போலத்தான், ‘செம்மாங்குளத்தில் ஒன்பது வாத்துக’ளின் ராமசாமியையும், ‘மூஞ்சிரப்பட்டன்’ கதையின் தங்கப்பனையும் ‘சுடலை’யில் வரும் வள்ளியம்மை எதிர்கொண்டிருப்போம். ஆனால், அவர்கள் வழி உலவுகிற கதையும் காட்சிகளும் கொண்டாட்டமாகவும் வெறுமையாகவும் கோபமாகவும் மாறி மாறி எழவைப்பதுதான் ஆசிரியரின் எழுத்தினுடைய பலம். தொகுப்பின் முதல் கதையான ‘விசேஷம்’ வாசித்து முடித்ததும் தரும் அசைவும் ‘கண்ணாடி வீட்டின் திருடன்’ தரும் பாதிப்பும் ஆறாதது. இத்தொகுப்பின் கதைகளும் அவற்றின் நாகர்கோவில் வழக்கும் வாசிப்புச் சுகத்தைத் தருவது இந்நூலின் சிறப்பு.
மூஞ்சிரப்பட்டன் & பிற கதைகள்
அய்யப்பன் மகாராஜன்
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 99400 21472
- ஏக்ஜி
பிறமொழி நூலகம்
நடிகையின் குறிப்புகள்
குப்ரா, ஓர் அசாதாரணப் பெண்மணி. போராட்டக் குணமும் விடாமுயற்சியும் அவருடைய இயல்பான குணங்கள். ஓர் எளிய குடும்பத்தில், சாதாரண முறையில் வளர்க்கப்பட்ட குப்ரா இன்று அடைந்திருக்கும் உயரத்துக்கு அந்தக் குணங்களே இட்டுச்சென்றன.
உலகின் கடுமையான சவால்களை எவ்வாறு கையாள்வது, அவற்றை மீறித் தனது வாழ்க்கையை எவ்வாறு வெற்றிகரமாக வடிவமைப்பது என்பதைச் சிறுவயதில் பள்ளியில் அவர் எதிர்கொண்ட இன்னல்களும் அவமானங்களும் கற்றுக்கொடுத்தன. இந்த அனுபவங்களே, எவ்விதப் பின்புலமும் இன்றி பாலிவுட்டில் போராடித் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு அவருக்கு உதவின.
நெட்ஃபிக்ஸ் ‘சேக்ரட் கேம்ஸ்’ தொடரில் திருநங்கை குக்கூ கதாபாத்திரத்தை நேர்த்தியாகச் சித்தரித்ததன் மூலம் குப்ரா சேட் தனது எல்லைகளை உடைத்துத் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக்கொண்டார். இந்த நூலை அவரின் நினைவுக் குறிப்பு என்றும் கருதலாம், உத்வேகம் அளிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு என்றும் கருதலாம்.
Open Book: Not Quite a Memoir
Kubbra Sait
Harper Collins Publisher India
Price: Rs.399
- ஹூசைன்