

இந்த ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி, இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என விருதுக் குறிப்பு, சாரு நிவேதிதாவைப் புகழ்கிறது. ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்த விருது, டிசம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளது.
முன்வெளியீட்டில் ‘அந்நியமாதல்’
தமிழின் முக்கியமான மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை எழுதிய மார்க்சியத் தத்துவ நூல் ‘அந்நியமாதல்’. இந்நூல் க்ரியா வெளியீடாக 1979இல் வந்தது. இப்போது அந்நூலின் விரிவாக்கித் திருத்திய பதிப்பை முன்வெளியீட்டுத் திட்டத்தில் க்ரியா பதிப்பகமே வெளியிடவுள்ளது. 304 பக்கங்கள் கொண்ட இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.295 (தபால் செலவுடன்) வழங்கப்படவுள்ளது. இதன் அசல் விலை ரூ.350. மேலதிகத் தொடர்புக்கு:
72999 05950.
மலையாளத்தில் உபபாண்டவம்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நாவலான ‘உபபாண்டவ’த்தின் மலையாள மொழிபெயர்ப்பு, மலையாளத்தின் முன்னணிப் பதிப்பகமான டிசி புக்ஸ் வெளியீடாக அதே பெயரில் வந்துள்ளது. டிசி புக்ஸின் 48ஆவது ஆண்டு விழாவை ஒட்டிக் கண்ணூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மலையாள எழுத்தாளர்கள் எம்.முகுந்தன், பி.ராஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர். கே.எஸ்.வெங்கிடாச்சலம் இதை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
எழுத்தாளரின் மரண சாசனம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தரமகாலிங்கம், தன் மரணத்துக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிட்டு, ‘மரண சாசனம்’ என்ற பெயரில் எழுதிவைத்துள்ளார்.
அவர் கடந்த வாரம் இறந்துவிட்ட நிலையில், மதச் சடங்குகள் கூடாது, உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய அவரது மரண சாசனம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. ‘ஜனசக்தி’, ‘தீக்கதிர்’ உள்ளிட்ட இதழ்களில் அவர் எழுதியுள்ளார்.
க்ரைம் நாவல் மன்னனின் வெள்ளந்தி முகம்
தமிழ் க்ரைம் நாவல் மன்னன் என கொண்டாடப்படுபவர் ராஜேஷ்குமார். அவரது நாவலைப் படிக்காமல் வாசிப்புப் படிக்கட்டில் ஏற முடியாது. அவர் தனது இரண்டாவது சிறுகதையை 1969 இல் எழுதிக் கொண்டிருந்தபோது அவர் வீட்டருகில் இருந்த ஒளிப்படக் கலைஞர் எடுத்த ஒரு ஒளிப்படத்தைத் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். தமிழகத்தைத் தன் க்ரைம் எழுத்துக்களால் மிரட்டியவரின் வெள்ளந்தி முகத்தை இதில் பார்க்கலாம்.