நூல் வெளி: தற்காலத் தமிழகப் பொருளாதாரம்: ஒரு துல்லிய அறிமுகம்!
கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் பாதிப்புகளையும் அவற்றைத் தணிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய குறுகிய, நடுத்தர, நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்ஐடிஎஸ்) பேராசிரியர்களும் அவர்களுடன் இணைந்து பணிபுரியும் ஆய்வாளர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் வெளிவந்த அதே வேகத்தோடு தமிழிலும் உடனுக்குடன் இக்கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது.
‘கோவிட்-19 காலத்தில் பொருளாதாரக் கொள்கை’ என்ற தலைப்பிலான தொகுப்பாசிரியரின் அறிமுகக் கட்டுரை, பெருந்தொற்றுக்கு முன்பே உலகளாவிய அளவில், பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சரிந்துவந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்தியச் சூழலில், பணமதிப்பிழப்பும் சரக்குகள் - சேவை வரி அறிமுகமும் இங்கும் அச்சூழலை விரைவுபடுத்தின என்பதையும் கவனப்படுத்துகிறது. தொற்றுப் பரவல் குறித்த அச்சம் நுகர்வோர் மனநிலையிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் மனநிலையிலும் ஏற்படுத்திய மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் இக்கட்டுரை பேசுகிறது. எனினும், இத்தொகுப்பில் 7 பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள 18 கட்டுரைகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பரப்பு என்பது பெரிதும் தமிழகமே.
நூலின் தொகுப்பாசிரியரும் எம்ஐடிஎஸ் இயக்குநருமான ப.கு.பாபு, தனது சக ஆய்வாளர்களுடன் இணைந்து 4 கட்டுரைகளை எழுதியுள்ளார். விகாஸ் குமார், பூனம் சிங் ஆகியோருடன் இணைந்து தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பாபு எழுதியுள்ள கட்டுரை முக்கியமானது.
திறன்மிகுந்த தொழிலாளர்கள் வேலை தேடி அலையும் நிலை, திறன்குறைந்த வேலைகளுக்குப் புலம்பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலை என்ற இரட்டைச் சவாலைத் தமிழ்நாடு எதிர்கொண்டிருப்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
தவிர, பெருமளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கிவரும் தொழில்துறைகள் பன்னாட்டுப் போட்டியையும் சுற்றுச்சூழல் சவால்களையும் ஒருசேரச் சமாளிக்க வேண்டியிருப்பதையும் விரிவாகப் பேசுகிறது.
உதாரணமாக, சுற்றுச்சூழல் காரணங்களைக் காட்டி, திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூடுவதற்கு முன்பு, உள்ளூர்ப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வேலையிழப்பைச் சரிசெய்யவும் போதிய முன்கவனம் அளிக்கப்படவில்லை என்பதை இக்கட்டுரை பதிவுசெய்துள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில் உடனடித் தீர்வுகளுக்கான பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ள முற்படுகையில், தரவுகளின் போதாமையை உணர்வதாகக் குறிப்பிடும் இக்கட்டுரை, அவ்வப்போதைய தேவைகளின் அடிப்படையிலான ஆய்வுகளை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. தொழில்துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கடந்துசெல்வதற்கான ஆராய்ச்சி, மேம்பாடுகளுக்கு அரசே முதலீடுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
விவசாயக் கொள்கைச் சீர்திருத்தங்கள், சுற்றுச்சூழல் கொள்கையும் சந்தைகளும் ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தொழில்துறைக்கு நிகரான முக்கியத்துவத்தை மேற்கொண்ட துறைகளுக்கும் வழங்குகின்றன.
பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் வேளாண் விளைபொருட்களை நேரடிக் கொள்முதல் செய்ய வேண்டும்; விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களும் நுகர்வோர் சங்கங்களும் இணைந்து செயல்பட்டால், இடைச்சேவகர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும்; விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை நிலையை ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தின் துணையோடு பூர்த்திசெய்ய வேண்டும் என்பது போன்ற பல முக்கியமான பரிந்துரைகளை விவசாயத் துறை தொடர்பான கட்டுரைகள் முன்வைக்கின்றன.
வேளாண்மை, சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் சார்ந்து லி.வெங்கடாசலம், நீர் மேலாண்மை குறித்து கி.சிவசுப்பிரமணியன், தொழில்நிறுவனக் குழுமங்கள் பற்றி எம்.விஜயபாஸ்கர், பெருந்தொற்றுக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர் நிலை பற்றி கே.ஜாஃபர், ஏ.கலையரசன், வீட்டுப் பணியாளர்கள் நிலை குறித்து எஸ்.ஆனந்தி, உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உமாநாத் மலையரசன் என்று எம்ஐடிஎஸ் பேராசிரியர்கள் தனித்தும் தங்களது சகாக்களுடன் இணைந்தும் எழுதியுள்ள கட்டுரைகள், அவர்களது நீண்ட நெடிய ஆய்வு அனுபவங்களின் சான்றுகளாக அமைந்துள்ளன.
வரலாற்றாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் கட்டுரை, பதிப்புத் துறையில் பெருந்தொற்றின் பாதிப்புகளை விளக்குகிறது. தொழில்துறையின் நொடிப்பு நிலை குறித்த கவலைகளில் பதிப்புத் துறை பொதுவாகக் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. அவ்வகையில், பிரபல பதிப்பாசிரியருமான அவரது இக்கட்டுரை முக்கியமான கவன ஈர்ப்பு.
சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார். அவற்றில் ஒன்று, தமிழகம் எங்கும் சிறு நகரங்கள் தொடங்கி 25 புத்தகக்காட்சிகளை அரசு செலவில் நடத்தலாம் என்பது. மாவட்டந்தோறும் அரசே முன்னின்று இன்று புத்தகக்காட்சிகளை நடத்திவருகிறது. அதுபோலவே, அவரது மற்ற பரிந்துரைகளும் அடுத்தடுத்து நிறைவேற வேண்டும்.
பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகளைத் துறைவாரியாக அறிந்துகொள்வதற்கான ஆய்வு நூலாக மட்டுமின்றி, தற்காலத் தமிழகப் பொருளாதாரத்தைப் பற்றிய முக்கியக் கருவி நூலாகவும், துல்லியமான அறிமுக நூலாகவும் கொள்ளத்தக்கது இத்தொகுப்பு. உலகமயத்தைத் தழுவிக்கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு, பொருளியல் ஆய்வுகளில் கையாளப்படும் அண்மைய கலைச் சொல்லாக்கங்களையும் உள்ளடக்கிய இந்தத் தமிழாக்கம், அதன் பின்னால் உள்ள உழைப்பை உணர்த்தி மலைப்பை ஏற்படுத்துகிறது.
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும்
தொகுப்பாசிரியர்: ப.கு.பாபு
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
அடையாறு - 600020
விலை: ரூ.350, தொடர்புக்கு: 044 2441 2589
