

தக்கன பிழைக்கும் என்ற தத்துவம் புத்தகங்களுக்கும் பொருந்தும். இணையம் வந்த பிறகும், புத்தகங்கள் தாக்குப்பிடித்து நிற்கின்றன. பல புத்தகங்கள் இணையத்தையே ஆதிக்கம் செலுத்துகின்றன. ‘அமேசான்’ போன்ற இணையவழி விற்பனை நிறுவ னங்கள் அச்சிடப்பட்ட புத்தகங்களையும், மின்புத்தகங் களையும் கணிசமாக விற்கின்றன என்பது பதிப்புலகத்துக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
புதிய எழுத்தாளர்களை உருவாக்குவது போன்றே, புதிய புதிய வாசகர்களையும் இணையம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இணையத்தில் மட்டுமே உலாவுகிற ஆரம்ப கட்ட வாசகர்களைக் கவரவும், அவர்களை அச்சிடப்பட்ட புத்தகங்கள் பக்கம் திருப்பவும் மின்புத்தகம் போன்ற முயற்சிகள் கைகொடுக்கின்றன என்பது பதிப்பாளர்கள் அனுபவரீதியாக உணர்ந்த விஷயம். அதேநேரத்தில், அந்தப் புத்தகங்களுக்காக உழைத்த எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் சேர வேண்டிய பங்கில் பிரச்சினை இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. தமிழக நிலவரப்படி, ஒரு புத்தகத்தை அமேசான் போன்ற இணைய விற்பனை நிறுவனங்கள் வாயிலாக விற்கும்போது, அந்த நிறுவனத்துக்கு 30% தொகை வழங்கப்படுகிறது. புத்தகம் அச்சிடும் செலவுக்கே 40% வரை போய்விடுவதால், மீதமுள்ள தொகையில் பதிப்பாளருக்குக் கொஞ்சமும் எழுத்தாளருக்குச் சொற்பமும் கிடைக்கிறது. ஆனால், மின்புத்தகமாக வழங்கும்போது, 60% வரையிலான தொகையை இணைய விற்பனை நிறுவனங்களே எடுத்துக்கொள்கின்றன. இதனால், எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் அற்பமான பங்கே கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல், புத்தகங்களை விற்பதற்கு இணைய நிறுவனங்கள் போடும் ஒப்பந்தத்தில் ஒரு தரப்புக்குச் சாதகமான அம்சங்களே பெரும்பாலும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
திரைப்படங்கள் திருட்டுத்தனமாகப் பதிவேற்றம் செய்யப்படு வது போல, புதிய புத்தகங்களும் சூட்டோடு சூடாக இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. இவற்றைத் தடுப்பதற்காகப் பெரிய பதிப்பகங்கள் தாங்களே முன்வந்து, இணைய நிறுவனங்கள் வாயிலாக மின்புத்தகங்களை விற்பனை செய்கிறார்கள்.
புத்தகங்கள் எந்த வடிவத்தில் விற்பனை செய்யப் பட்டாலும், நூலாசிரியருக்கும், பதிப்பாளருக்கும் உரிய தொகை கிடைப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. படைப்பு-பதிப்பு-விற்பனை-இணைய விற்பனை என்ற சங்கிலியில் படைப்பும் படைப்பாளியுமே பிரதானம் என்ற உணர்வு விற்பனையாளர்களுக்கும், முக்கியமாகப் பதிப்பாளர்களுக்கும் ஏற்பட வேண்டியது அவசியம். அரசின் சட்டங்களும் எழுத்தாளர்களைப் பாதுகாக்கும் வகையில் தெளிவாக இருப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணரக் கூடிய மக்கள் இருப்பதே சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிநாதம்.