Published : 22 Oct 2016 10:19 AM
Last Updated : 22 Oct 2016 10:19 AM

என் உலகம்: புகைப்படம் போல் ஒரு வாழ்க்கை- அசோகமித்திரன்

எனக்கு வயது எண்பத்தைந்து முடிந்துவிட்டது. பழைய நினைவுகள் பல, ஒரு ஜுரத்தின்போது அழிந்துவிட்டன. நான் அடிக்கடி பாரதியார் வரிகளை நினைத்துக்கொள்கிறேன். “ஆசை முகம் மறந்து போச்சே, இதை யாரிடம் சொல்வேனடி தோழி?”

என் தாய் தந்தையரின் கடைசி நாட்கள் மிகுந்த துயரத்தில் கழிந்தன. நான் இப்போது சொல்லி என்ன பிரயோசனம்? ஒன்று கூறுவேன்: இந்து சமூகம் திருமண சம்பிரதாயங்கள் விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

என் அப்பாவுடன் கூடப் பிறந்தவர்களில் மூவர் பெண்கள். அதில் இருவர் பால்ய விதவைகள். மதுரையில் ஒரு அத்தை மூலம் எனக்குத் தெரிந்தவர்களில் குறைந்தது நூறு திருமணங்கள் நடந்திருக்கும். என் திருமணமும் அவள் முயற்சியால்தான் நடந்தது.

என் அப்பா அநேகமாக வருடாவருடம் ஒரு குடும்பப் புகைப்படம் எடுத்துக்கொள்வார். அன்று நாங்கள் வசித்துவந்த செகந்திராபாதில் மூன்று நான்கு புகைப்படக் கடைகள் இருந்தன. அன்று எல்லாமே ‘ப்ளேட்’ போட்டோக்கள். புகைப்படக்காரர் அவராக ஒரு மனக்கணக்கு வைத்துக்கொண்டு லென்ஸ் மூடியைத் திறப்பார். ‘ப்ளேட்’டைக் கழுவிய பிறகு ஒரு மெல்லிய பிரஷ் கொண்டு திருத்தங்கள் செய்வார். படச் சுருள், டிஜிட்டல் முறைகள் வந்ததில் இக்கலைகள் மறைந்துவிட்டன.

நான் சிறுவனாக இருந்தபோது நிறைய தெலுங்கு, இந்திப் படங்கள் பார்த்திருக்கிறேன். அவற்றில் சில இன்னமும் நினைவில் இருக்கின்றன. ஒன்று, ‘கனகதாரா’ என்ற படம். கண்ணாம்பா நடித்தது. சோகக் காட்சிகளில் கொட்டகையே அழும்.

கல்லூரிப் படிப்புக்கு நடுவில் அப்பா திடீரென்று போய்விட்டார். ஆனால், நாங்கள் செகந்திராபாதிலேயே வேறிடம் மாறி, மாடு கன்றுடன் நிம்மதியாக இருந்தோம். மாதம் நூற்றைம்பது இருநூறு சம்பாதித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் வசித்த அந்தச் சிறு வீட்டில் மின்சாரம் கிடையாது. ஆனால், அபரிமிதமான தண்ணீர். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் இறந்தோர் கடன் கிரியைகள். பன்னிரண்டு மாதங்கள் யாதொரு குறைவும் இல்லாமல் செய்து முடித்தேன். ஒரு கடிதம் வந்தது. குடும்பத்தோடு சென்னை மேற்கு மாம்பலத்தில் குடியேறினேன். அதன் பின் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகள் என் கதைகளில் உறங்குகின்றன.

எல்லாம் போக இப்போது என் குடும்பத்தில் நான், மனைவி, மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள், நான்கு பெயர்த்திகள். ஒரு மகன், அவன் குடும்பத்தோடு மும்பையில் இருக்கிறான். என் இரு மகன்கள் சென்னையில் தியாகராய நகரிலும் வேளச்சேரியிலும் இருக்கிறார்கள். நானும் இரண்டு ஆண்டுகள் முன்பு வரை வேளச்சேரியில்தான் இருந்தேன். அந்த (மூன்றாவது) மகனுக்கு வேற்றூருக்கு மாற்றலாயிற்று. அதன் காரணமாக நானும் என் மனைவியுமாக என் மூத்த மகனிடம் வந்து சேர்ந்தோம், நாங்கள் வீடு மாறும்போது எல்லாப் பழைய காகிதங்கள், நூற்றுக் கணக்கில் புத்தகங்கள், நாற்பது ஆண்டு டயரிகள், குறிப்புகள், ஏராளமான பழைய பத்திரிகை இதழ்கள், எல்லாவற்றையும் ஜானகிராமன் என்ற பெயர் கொண்ட பழைய பொருள்கள் வியாபாரியிடம் போட்டுவிட்டேன். ஒரு பார்வையில் அவை வரலாறு. இன்னொரு பார்வையில் பழங்குப்பை.

தி.நகர் வந்தவுடன் என் எழுத்துக்களை நூலாகப் பிரசுரித்தவர்களிடம் இரண்டிரண்டு பிரதிகள் கொடுத்தால் போதுமானது, வேண்டுமென்றால் கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். இந்தக் கட்டுரை உட்பட வேறு மூன்று கட்டுரைகளூக்குப் பழைய புகைப்படங்கள் கேட்டார்கள். ஏராளமான ‘நெகடிவ்’ சுருள்களைக் குப்பையில் போட்டேன். அத்துடன் புகைப்படங்களையும் போட்டிருக்கலாம். சரியாக நினைவில்லை.

வயது முதிர்ந்தவர்களைப் புகைப்படம் எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. வயது முதிர்ந்தவர்களால் தங்களைக் காத்துக்கொள்ள முடியாது. சமீபத்தில் நம் மரியாதைக்குரிய தலைவர்களை இழிவுபடுத்துவதாக எடுத்த பல புகைப் படங்களைப் பார்த்தேன். வருத்தம்தான் உண்டாயிற்று. இன்று ஒவ்வொரு கைபேசி யும் புகைப்படம் எடுக்கும் கேமராவாகவும் உள்ளது. இப்படி எடுக்கப்படும் புகைப்படங் களால் எவ்வளவு தற்கொலைகள் நிகழ்ந் திருக்கின்றன? புகைப்படக் கலை மலினப் பட்டுவிட்டது. மனித சமூகமே ஒரு முன்னேற் றம் நிகழ்ந்தால் அத்துடன் ஒரு விபரீதத்தை யும் துணைக்கு அழைத்து வருகிறது. இரு ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் என் மறுப்பை மதித்தார்கள். இணையத்தில் உள்ள படங்களையே பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்கள்.

ஒரு காலத்தில், அதாவது ‘நெகடிவ்’ இருந்த காலத்தில், நான் ஒரு பெட்டி கேமரா வாங்கினேன். ஐம்பது ருபாய். அதில் ஒரே ஃபோகஸ். பெரிய நெகடிவ். ஆதலால் சிறப்பாகப் படங்களைப் பெரிதுபடுத்தலாம். என் உறவினர் பலர் வீட்டில் நான் எடுத்த புகைப்படங்களைச் சுவரில் மாட்டி வைத்தார்கள். அதே தயாரிப்பாளர் விற்ற இன்னொரு வகை கேமராதான் ‘எழுத்து’ சி.சு. செல்லப்பா வைத்திருந்தார். அவருடைய ‘வாடிவாசல்’ நாவலின் அட்டைக்கான புகைப்படம் அவர் எடுத்ததுதான். நானே ஓர் உயர் ரக கேமரா வாங்கியபோது என் உறவினர் திருமணங்கள், சுபகாரியங்கள்போது நான்தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஒரு முறைகூட நானே விதித்துக்கொண்ட கட்டுப்பாட்டை மீறியதில்லை. டிஜிட்டல் முறை வந்த பிறகு என் கேமராவைக் கொடுத்துவிட்டேன்.

(தொடரும்)

- அசோகமித்திரன்,

தமிழின் முக்கியமான, மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x