

உலகின் புகழ்பெற்ற நாவலான அன்னா கரீனினா பலமுறை படமாக்கப்பட்டுள்ளது. திருமண உறவுக்கப்பாலும் வெளியில் ஒரு உறவை தேடிக்கொண்ட அன்னா எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் மையச் சரடு.
முக்கியக் கதாபாத்திரமான அன்னா கரீனினா இந்த நாவலில் ஒரு அங்கமே. அவளுக்கும் விரான்ஸ்கிக்கும் வேண்டப்பட்ட உறவினர்கள் பலர் நாவலில் வலிமையாக படைக்கப்பட்டுளனர். இந்த நாவல் படமாக்கப்பட்டபோது அன்னா கரீனினாவைச் சுற்றியே திரைக்கதைகள் அமைக்கப்பட்டன.
நாவலோ அன்னா கரீனினாவைச் சுற்றிலும் உள்ள அரசியல் அதிகார வர்க்கத்தின் உயர்மட்ட சமூக வாழ்க்கைமுறை, காதலில் சிக்கித் தவிக்கும் பல்வேறு இளம் மனங்களின் உலகம், ரஷ்ய நிலப்பரப்புகளின் அழகு, குடும்பப் பிரச்சினைகள், கிராம விவசாயம் என ஆயிரம் பக்கங்களுக்குக் கிளைவிரித்துச் செல்கிறது.
மாஸ்கோவின் ரயில்வே ஸ்டேஷன்களும், பனிச்சறுக்கு மைதானங்களும், நடனக் காட்சிகளும் சில படங்களில் அழகுபட வந்திருந்தன. பெரும்பாலான படங்களில் நாடகத்தன்மை அதிகம். அன்னா கரீனினாவை வாசித்தவர்களின் ஒட்டுமொத்தக் கருத்து, நிலப்பரப்பு சார்ந்த பிரக்ஞை திரைப்படங்களில் முழுமைபெறவில்லை என்பதே. புதிய பார்வையாளருக்கோ பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று.
1915 தொடங்கி 2012 வரை 10 முறை இந்த நாவல் சினிமாவாகியுள்ளது. ரஷ்ய மொழியில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் சேர்த்து உலகின் பல்வேறு திரைப்பட இயக்குநர்கள் இதைத் திரைப்படமாக்கியுள்ளனர். நாயகியின் தற்கொலையை எப்படி டால்ஸ்டாய் நினைத்தால்கூட கட்டுப்படுத்த முடியாதோ அதே போலத்தான் அன்னா கரீனினா படங்களின் தோல்வியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ‘அன்னா கரீனினா’ நாவலின் வெற்றியை ‘அன்னா கரீனினா’ திரைப்படங்களின் தோல்வி இந்த உலகுக்குத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறது. தமிழில், நா. தர்மராஜன் மொழிபெயர்ப்பில் ‘அன்னா கரீனினா’ நாவல் வெளியாகியிருக்கிறது. டால்ஸ்டாயின் மேதமையை அறிந்துகொள்ள அவசியம் அந்த நாவலைப் படியுங்கள்.
- பால்நிலவன்