

கணேசமூர்த்தி என்கிற பெயரில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கால் சட்டையுடன் சுற்றித் திரிந்த பால பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது சிவாஜியின் கலை வாழ்வு என்பதிலிருந்து அவரது குடும்பச் சூழல், அன்னை ராஜாமணி அம்மையாரிடம் மகனுக்கு இருந்த பெரும்பாசம், கூட்டுக் குடும்பத்தின் நெருக்கடிகள், மதுரை பாலகான சபாவில் சேர்ந்து வளர ஆரம்பிப்பது போன்றவை வரை இந்த நூலில் சுவாரசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவாஜியின் கலை ஆளுமையைப் பற்றிய பதிவுகள் மட்டுமல்லாமல் சிவாஜியைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள், அதற்கு அவரிடம் இருந்து எந்த விதமான எதிர்வினைகள் வெளிப்பட்டன என்பன போன்ற செய்திகளும் புத்தகம் முழுக்க நிரம்பியுள்ளன. சிவாஜி தி.மு.க.வோடு இணக்கம், பின்னர் பெருந்தலைவருடனான நெருக்கம், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் இவருக்கு எதிராக நடத்திய உள்ளடி வேலைகள் என்று ஒவ்வொரு கட்டுரையிலும் ஏராளமான தகவல்கள். சிவாஜி கணேசன் என்கிற கலைஞனின் சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஆளுமையின் வெளிப்பாடுகளை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் புத்தகம் இது.
-மானா