Published : 09 Oct 2016 12:28 PM
Last Updated : 09 Oct 2016 12:28 PM

விடுபூக்கள்: காத்திருக்கவைத்த எழுத்தாளர்கள்

காத்திருக்கவைத்த எழுத்தாளர்கள்

இந்திய ஆங்கில இலக்கிய வாசகர்களின் இருபதாண்டு ஏக்கம் தீரப்போகிறது. அருந்ததி ராயின் தனது இரண்டாவது நாவலான ‘தி மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ அடுத்த ஆண்டு வெளிவருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அருந்ததி ராயைப் போலவே புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் வாசகர்களைப் பல ஆண்டுகாலம் காத்திருக்க வைத்தவர்கள்தான். ஜேம்ஸ் ஜாய்ஸ் தனது புகழ்பெற்ற நாவலான ‘யுலிஸஸ்’-ஐ எழுதிமுடித்து 17 ஆண்டுகள் கழித்தே அடுத்த படைப்பான ‘ஃபின்னகன்ஸ் வேக்’கை வெளியிட்டார்.

தாமஸ் பிஞ்சன் தனது மூன்றாம் நாவலுக்கும் நான்காம் நாவலுக்கும் இடையே எடுத்துக் கொண்ட இடைவெளி 17 ஆண்டுகள். ‘அன்னா கரீனினா’வுக்கும் ‘புத்துயிர்ப்பு’க்கும் இடையே லியோ டால்ஸ்டாய் கொடுத்த இடைவெளி 22 ஆண்டுகள். ஹார்ப்பர் லீ தனது முதல் நாவலான, ‘டு கில் எ மாக்கிங் பேர்ட்’-க்குப் பிறகு ‘கோ செட் எ வாட்ச்மேன்’ நாவலை வெளியிட 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் எழுதாமலேயே இருந்து மீண்டும் எழுத வந்தது குறிப்பிடத்தக்கது.

போரிடையே ஒரு திருமணம்

இலங்கை இறுதிப் போரின்போது தினேஷ் என்னும் இளைஞன், சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மாட்டிக்கொள்கிறான். மணமாகாதவர்களைவிட மணமானவர்களுக்குக் குறைவான இன்னலே சாத்தியம் என்பதால் தன் மகள் கங்காவைத் திருமணம் செய்துகொள்ளும்படி தினேஷை வேண்டுகிறார் ஒரு முதியவர். போரால் அனாதையாக்கப்பட்ட தன் வாழ்வுக்கு அந்தத் திருமணம் மூலம் தினேஷ் அர்த்தம் தர விரும்புகிறான்.

தினேஷும் கங்காவும் ஒருவரை யொருவர் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். இந்தப் பின்னணியில் இலங்கையின் போர்ச் சூழலை விவரிக்கிறது ‘தி ஸ்டோரி ஆஃப் எ ப்ரீஃப் மேரேஜ்’ நாவல். ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் போர் எப்படி முறித்துப்போடுகிறது என்பதை 208 பக்கங்களில் எழுதியிருக்கிறார் அனுக் அருட்பிரகாசம். கொழும்பைச் சேர்ந்த இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவருகிறார். தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். இவரது முதல் நாவல் இது.

கவித்துவத் திருக்குறள் ஆங்கிலத்தில்

திருவாசகமணி என்று அழைக்கப்படும் தமிழறிஞர் கே.எம். பாலசுப்ரமணி யத்தின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருகிறது. சிவாலயம் ஜே. மோகன் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடுகிறார். இந்த நூல் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பெரியாரின் அணுக்கமான சீடராக இருந்து, சி.என். அண்ணாதுரையுடன் பணியாற்றியவர் இவர்.

தனது பிற்காலத்தில் ஆன்மிகவாதியாகி சைவ இலக்கியத்தில் ஆழக்கால் பதித்தார். திருக்குறளை வீரமாமுனிவர், ஜி.யூ. போப், வ.வே.சு. அய்யர் மற்றும் வி.ஆர்.ராமச்சந்திர தீக்ஷிதர் ஆகியோர் மொழிபெயர்த்திருந்தாலும் திருக்குறளின் முழுமையையும் கவித்துவத்தையும் இவர்தான் சாதித்திருக்கிறார் என்று முன்னுரையில் தமிழறிஞர் கமில் ஸ்வெலபில் புகழ்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x