

தஞ்சை தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளியில் 1970-களில் 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த நினைவுகளை ‘நெஞ்சம் நிறைந்த நினைவுகள்’ என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான எம்.ஏ.கிளமெண்ட்.
தஞ்சைப் பகுதியில் கிறிஸ்துவப் பள்ளிகள் ‘சாதி, மத பேதம் பாராது’ ஆற்றிய கல்விப் பணிகளையும் அவற்றின் நிர்வாக முறைகளையும் பற்றிய ஆவணம் இந்நூல்.
பள்ளியின் முன்னாள் மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான ஜி.எம்.அக்பர் அலி, வகுப்பாசிரியர் விக்டர் வீட்டில் தங்கிப் படித்த நினைவுகளை நூலின் அணிந்துரையில் நினைவுகூர்ந்திருப்பதே அதற்கான உதாரணம். 1886இல் தஞ்சையில், ‘மென்மேலும் உயர’ என்ற குறிக்கோள் வாசகத்துடன் இயேசு சபை ஊழியர்களால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 135 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணிகளைத் தொடர்கிறது.
பாடம் எடுத்த ஆசிரியர்கள், உடன்பயின்ற மாணவர்கள் பற்றிய நினைவுச் சித்திரங்களில், பள்ளி அலுவலக உதவியாளர் கன்னியப்பனுக்கும் தூய்மைப் பணியாளர் பெருமாளுக்கும் இடமளித்திருப்பது சிறப்பு. சிவகங்கைப் பூங்கா, சுவார்ட்ஸ் ஆலயம், திலகர் திடல் போன்ற தஞ்சையின் பண்பாட்டு மையங்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் எழுபதுகளின் வாழ்க்கை முறையையும் இந்நூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் எம்.ஏ.கிளமெண்ட்.
- செல்வ புவியரசன்
பயணத்தில் பெண்கள்
வழக்கமான பயண இலக்கியங்கள் கூறும் இயற்கை அழகியலையும் வரலாற்றுச் சிறப்பையும் பயணத்தில் சந்தித்த மனிதர்களையும் சித்தரிக்கும் போக்கிலிருந்து விலகிய புதுமையான நூல், அருண் எழுத்தச்சனின் ‘புனிதப் பாவங்களின் இந்தியா’. ஆசிரியர் அருண் மங்களூருவில் தொடங்கிய பயணத்தில் அவர் சந்தித்த பெண்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுகிறது இந்நூல்.
மதம் என்னும் பெயரால் நம் நாட்டில் பெரும்பாலான பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் அவர்கள் சந்திக்கும் துயரங்களையும் விவரித்துக் கூறுகிறது. தேவதாசிகள் என்று அடையாளப்படுத்தப்படும் பெண்கள், எவ்வாறு பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற விளக்கத்தையும் அந்தப் பெண்களிடமிருந்தே பெற்றிருக்கிறார் அருண்.
‘வாழ்க்கை வரலாற்று இலக்கியங்களின் தொகுப்பு’ (Collection of Biographies) என்று ஆங்கிலத்தில் கூறப்படுவதைப் போன்று நூலாசிரியர் அருண் தன்னுடைய பயணத்தில் சந்தித்த பெண்களின் வாழ்க்கைச் சரிதத்தின் திரட்டாய், படிப்பதற்கு மேலும் வாஞ்சையூட்டும் விதமாகவும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
நாம் வாழும் இந்தச் சமூகத்தில் நம்மைச் சுற்றி மதத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதிகளைப் படிக்கும்போது பேரதிர்ச்சியாய் இருக்கின்றது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு என்று தெரியாத அளவிற்கு மொழியாக்கமாகவே யூமா வாசுகி படைத்துள்ளார்.
- கு.அகில் ராஜ்