பிறமொழி நூலகம்: நேசத்தைப் போற்றும் யாஸீன் மௌலானா நாயகம்

பிறமொழி நூலகம்: நேசத்தைப் போற்றும் யாஸீன் மௌலானா நாயகம்
Updated on
2 min read

சீர்காழிக்கும் ஆன்மிகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புக்கு இந்தப் புத்தகம் கூடுதல் வலு சேர்க்கிறது. சீர்காழியில் வாழ்ந்து, மறைந்த யாஸீன் மௌலானா நாயகத்தின் வாழ்க்கை வரலாறே இந்த நூல். முகமது நபியின் (ஸல்) வழியில் வந்த ஞானி அவர்.

அறுதியிட்டுக் கூற வேண்டும் என்றால், நபிகள் நாயகத்தின் 33ஆவது தலைமுறையில் வந்தவர் அவர். எளிய மனிதர்களுடன் வாழ்ந்த இந்தப் பெருமகானின் எளிய வாழ்க்கை நிகழ்வுகளையும், அரிய ஞானத்தையும், சீரிய உபதேசங்களையும் நூலின் ஆசிரியர் நாகூர் ரூமி தன்னுடைய சிக்கலற்ற மொழிநடையின் மூலம் நம்முள் எளிதில் கடத்திவிடுகிறார். மதங்களினால் வெறுப்புகள் பரவும் இன்றைய காலகட்டத்துக்கு, நேசத்தை வலியுறுத்தும் இந்த நூல் தேவையான ஒன்று.

யாஸீன்
மௌலானா நாயகம்
நாகூர் ரூமி
கிழக்கு பதிப்பகம்,
சென்னை
விலை: ரூ.140
தொடர்புக்கு: 044 4200 9603

- நிஷா

அனுபவம் நிரம்பிய பயணம்

பயணங்கள் உள்ளும் புறமும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. பெரும் சமூக மாற்றங்கள் பயணத்தால் நடந்த வரலாறு நமக்குண்டு. இந்தப் பின்னணியில் பத்திரிகையாளர் கி.ச.திலீபனின் இந்த ‘BACK பேக்’ நூலை வாசிக்கலாம். வடகிழக்கு மாநிலங்களில் அவர் தனியாக மேற்கொண்ட பயணங்களைப் பற்றிய விவரிப்புகள்தாம் இந்தக் கட்டுரைகள்.

ஒரு புனைவு எழுத்தாளருக்கு உரிய சுவாரசியமும் ஆய்வாளருக்கு உரிய வரலாற்றுப் பார்வையுடனும் இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். ஜூகு பள்ளத்தாக்கை திலீபன் வருணிக்கும் இடம் கவித்துவமாக வெளிப்பட்டுள்ளது. அங்குள்ள மழைக்கூட்டங்களைத் தவளைகளுடன் ஒப்பிடுகிறார்.

கட்டுரைகளில் அனுபவம் நிரம்பி இருக்கிறது. அங்குள்ள உணவு, தங்கும் இடம், சாலைகள், இன்றைய பண்பாடு என ஒரு முழுமையான சித்திரத்தை இந்தக் கட்டுரைகள் மூலம் வாசகர்களுக்கு கி.சி.திலீபன் தருகிறார்.

BACK பேக்
கி.ச.திலீபன்
வெளியீடு: நடுகல்
விலை: ரூ. 150
தொடர்புக்கு: 98654 42435

- விபின்

திராவிடம் வழி சிந்துவெளி!

கீழடி அகழாய்வின் விளைவாக, சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஓர்மை தமிழர்களின் மனதில் ஆழப்படத் தொடங்கியுள்ளது. கட்டிடக் கலை, மண்பாண்டங்கள், கலைப்பொருட்கள், எழுத்து என சிந்துவெளி நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர், சானூர், சூலூர், பட்டணம் எனத் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடந்த அகழாய்வுகளும் சிந்துவெளித் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளன. இந்திய, வெளிநாட்டு இந்தியவியல் ஆய்வாளர்கள் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே எனப் பல பத்தாண்டுகளாகக் கூறிவருகின்றனர்.

அந்த வகையில், சிந்துவெளி ஆய்வாளர்களான ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு திராவிட மாதிரி வழி சிந்துவெளி நாகரிகத்தைப் புரிந்துகொள்ள இந்தச் சிறு நூல் முயல்கிறது.

Indus Valley Civilization: A Land of the ancient Dravidians
Vaidehi Herbert & Krishnapriya S
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்,
சென்னை.
தொடர்புக்கு:
044 2654 0320
விலை: ரூ.199

- அபி

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in