நூல் வெளி: கல் ஓங்கும் கவிதைக் கைகள்

நூல் வெளி: கல் ஓங்கும் கவிதைக் கைகள்
Updated on
2 min read

சீரும் தளையும் அறுக்கப்பட்டு உருவான புதுக்கவிதை, தன் செவ்வியல் தொடர்பைப் புதுப்பிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. நேரெதிராக ‘எழுத்து’ இதழ் இயக்கமாக வருணிக்கப்படும் இந்தப் புதுக்கவிதை அந்தத் தொடர்ச்சியைத் துண்டிக்கவும் தொடங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியில் மாரி செல்வராஜின் இந்தக் கவிதைகளை வைத்துப் பார்க்கலாம்.

‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு மூலம் கவனம்பெற்றவர் மாரி செல்வராஜ். அதில் தலைப்பட்ட பாடுபொருளைத்தான் இந்தத் தொகுப்பிலும் மாரி, கைக்கொண்டிருக்கிறார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் தன்னிலைக் கவிதைகள். ஆனால், எழுத்துக் கவிஞர்களின் ‘நானு’க்கும் மாரி செல்வராஜின் ‘நானு’க்கும் வெகு தூர இடைவெளி இருக்கிறது. அந்த ‘நான்’ நடுத்தர வர்க்க வீட்டின் செல்லப் பிராணியைப் போல், மணி பிளாண்ட் தாவரத்தைப் போல் மிகத் தன்வயமானது. மாரியின் ‘நான்’ தெருவில் இறங்கும் சூரியனைப் போன்றது.

வரலாறு சொல்லச் சொல்லிக் கேட்க, கறுத்த பெண் கொடுத்த முத்தத்தில் கணக்கெண்ணித் திகைக்கும் என்.டி.ராஜ்குமாரின் கவிதையைப் போல் மாரியின் கவிதைகளில் முத்தங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால், இந்த முத்தங்கள் ஸ்தூலமானவை அல்ல. முத்தம், காதலாகக் கவிதைக்குள் தன் சிறகை விரிப்பதுபோல் ஓர் அரசியலாகவும் தொழிற்படுகிறது.

பறவையாகும் முத்தம், கொலையுண்டவனின் குருதியுடன் நிலத்தில் உறைவும் செய்கிறது. இந்த முத்தங்களின் வழி காலங்காலமாகத் தொடரும் தலித்துகளுக்கு எதிரான சாதியக் கொலைகளின் வரலாற்றை மார்க்சிய அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் போலத் தன் கடமையென மக்களுக்கு ஓர்மைப்படுத்துகிறார் மாரி.

ஒளி, தீக்குச்சியாக, தீப்பந்தமாக, சூரியனாக, அகல் விளக்கில் வெளிச்சமாக வருகிறது. இருள், இரவாக, குருட்டுக் கூகையின் அலறலாக, பறவையின் நிழலாக, காட்டின் அடர்த்தியாக வருகிறது. ஒளியும் இருளும் விடுதலைக்கும் அடிமைப்படுத்தலுக்குமான குறியீடாகக் கவிதைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

மாரியின் ஒரு கவிதை, ஓநாயை, மானாக மாற்றும் ஜாலத்தை நிகழ்த்துவதுபோல் இந்த ஒளியை இருளாக, இருளை ஒளியாக, இரண்டையும் ஒன்றாகக் கவிதைகள் மாற்றிப் பார்க்கின்றன. அதே நேரத்தில், இதைக் கவிதை விளையாட்டாக அல்லாமல் அரசியல் மூர்க்கமாக இந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. ‘இருளின் ஆத்திரத்தில்/ நீங்கள் விதைத்துவிட்டீர்கள்/ ஒளியின் அவசரத்தில்/ நான் முளைத்துவிட்டேன்’ என நீள்கிறது மாரியின் கவிதை ஒன்று.

இந்தக் கவிதைகள் பலவற்றிலிருந்தும் எழும் கைகள் கல்லை எடுத்து ஓங்குகின்றன. ‘ஆயிரம் கோடாரிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் / ஈடானது ஒரு கல்/ எரிந்த எங்கள் குடிசைகளிலிருந்து/ நான் எடுக்கும் கல்’ என்கிறது ஒரு கவிதை. எளிமையான இந்தக் கல்லை, மாரி பிடித்திறுக்குவதில் அது வலிமையான ஆயுதமாகிறது. தப்பிப்பதற்கான வழியாகவும் மாரி கல்லை முன்மொழிகிறார்.

மாரியின் இந்தக் கற்கள், விடுபடுவதற்கு முந்தைய கணத்தில் இருப்பவை. இந்தக் கவிதைகளில் மாரி வெளிப்படுத்தும் ஆதாரமான அம்சமாகவும் இதைப் பார்க்கலாம். அருவியின் உச்சியில் குனிந்து பொறுக்கிய கூழாங்கல்லைப் பற்றிய விவரிப்பும் இந்தக் கவிதையில் உண்டு. தோற்றத்தில் இந்த இரு கற்களும் உண்டான வேறுபாட்டைப் போல் மாரியும் கவிதைக்குள் அதைப் பொருட்படுத்துகிறார்.

உச்சினி, இசக்கி, ஓட்டச்சி என நாட்டார் வழக்காற்றியலின் சில அம்சங்களைக் கவிதைகளில் காண முடிகிறது. இந்த அம்சம், கவிதைச் சூழலில் வெளிப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுடன் காதல் பழகிய ஓர்மைக் காட்சி, கவிதைக்குள் இசக்கியில் கற்சிலைச் சித்திரமாக மாரி கவித்துவமாக வருணிக்கிறார். ஒரு வெள்ளந்திச் சிறுவன், சில கவிதைகளுக்குள் தன் சிறு நம்பிக்கைகளுடன் இருக்கிறான்.

இந்தக் கவிதைகள் வெளிப்படுத்தும் கவித்துவம் கவனம் கொள்ளத்தக்கவை. ‘இன்னும் சூரியனாகியிராத / ஒரு செங்கோளம் போல / நான் இங்கேயே பத்திரமாக / எரிந்துகொண்டிருக்கிறேன்’ என்பதுபோல் கவிதைக்குள் மாரி உருவாக்கும் காட்சி வாசகச் சுவாரசியம் அளிப்பவை. ‘அகால நினைவுகளின் பெரும்பாறை’, ‘மணற்கொண்டைச் சூரியன்’ போன்ற உருவகங்கள் கவிச் சுவை உள்ளவை.

மாரி, தன் கவிச் சொற்களை அதிர்ச்சியை நோக்கி முடுக்கவில்லை. கவிதைகளுக்குள் அவர் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒளி, உண்மையாக இந்தக் கவிதைகளுக்குள் வியாபித்திருக்கிறது. மிமிக்ரி கவிதைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில், தீர்க்கமான தலித் அரசியலை அசலான அனுபவத்துடன் சொல்லும் விதத்தில், முன்னிறுத்தப்பட வேண்டிய விசேஷமான கவிதைகளின் வரிசையில் மாரி செல்வராஜின் இந்தத் தொகுப்பை வைக்கலாம்.

உச்சினியென்பது…

மாரி செல்வராஜ்

வெளியீடு: கொம்பு

விலை: ரூ.130

தொடர்புக்கு: 99523 26742

தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in