Published : 28 Oct 2016 08:14 PM
Last Updated : 28 Oct 2016 08:14 PM

வெயிலின் பாடல்

கவிதை, கட்டுரை, விமர்சனம் எனத் தொடர்ந்து இயங்கிவரும் தமிழச்சியின் இந்தக் கவிதைத் தொகுப்பு அழகியலாய் நகைக்கிறது; தார்மிகமாய்ச் சீறுகிறது; சில இடங்களில் சிணுங்குகிறது; பிற இடங்களில் ஆவேசம் கொள்கிறது; மரபு – தொன்மங்களுக்குள் ஆழ்ந்து, இக்கணத்துப் பிரக்ஞைத் தெறிப்புக்கு அந்த ஆவேசத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. காதலில் கரையவும் செய்கிறது. சிக்கல்களை முன்வைக்கவும் செய்கிறது.

“கம்பளிப் பூச்சிகளாக வந்தவைகளைப்/ பட்டாம்பூச்சிகளாத்தானே பறக்கவிட முடியும்?” என்றொரு படிமம் ஒரு முரண்நிலையை முன்வைத்தால், “விடுதலையின் சிறகுகளை/ எதில் நெய்தாலென்ன/வானம் கருணை மிக்கது” என்னும் வரிகள் ஒரு நுட்பத்தைப் பேசுகின்றன.

“சேர்தலின் ஈரமும்/ பிரிதலின் உக்கிரமும்/ வெயிலும் வெயில் சார்ந்த/ காதலுமே கரிசல்” எனத் தனது பூமியை அடையாளங்காட்டி, ‘நான் வெயிலுகந்தவள்’ என்று தன் மரபைத் தன்னில் ஏற்றிக்கொள்வது கவிதையின் இயங்குதளத்தை விரிவுபடுத்துகிறது.

தமிழச்சியின் பேச்சி இன்றைய கிராமத்திலும் உலவுகிறாள்; நகரின் நடைபாதையிலும் நாறிக் கிடக்கிறாள்; மரபில் சிறுதெய்வமாய் சிம்ம சொப்பனம் தருகிறாள். தன் கவிதைக் குரலுக்குப் பேச்சி என்று பெயரிட்டு, அபலையாய் பலிகொள்ளப்படும் இன்றைய யுவதியின் ஓலத்திலிருந்து பனங்கிழங்கு ருசிக்கும் அன்றைய மூதாட்டி வரை, தமிழச்சியால் செறிவாகச் சித்தரிக்க முடிவது ஒரு தனித்தன்மை.

நாட்குறிப்பு வரிகளிலிருந்து நாறிப்போகும் வாழ்வின் உக்கிரம் வரை இக்கவிதைகள் நிறையப் பேசுகின்றன. பேசும் கணம் எதுவாயினும் அதில் செறிவு இருக்கிறது. நுட்பம் சேருகிறது. வாசகனால் தொடர்புபடுத்த முடிகிறது.

பேச்சி வாயிலாகப் பெண்ணியக் குரலை முன்வைக்க, தமிழச்சி போன்ற ஒருசிலரால்தான் முடியும். இந்தப் பெண்ணியக் குரல் தொன்மத்தையும் சிறுதெய்வ மரபையும் உள்வாங்கி ‘வெயிலுகந்த அம்மனாய்’ சிரிக்கவல்லது, சீறிப்பாய்வது.

மணிவண்ணனின் ஓவியங்கள் இத்தொகுப்புக்குக் கூடுதல் பரிமாணம்.

- சா.தேவதாஸ்,
மூத்த விமர்சகர்-மொழிபெயர்ப்பாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x