Last Updated : 22 Oct, 2016 09:49 AM

 

Published : 22 Oct 2016 09:49 AM
Last Updated : 22 Oct 2016 09:49 AM

விந்தன் நூற்றாண்டு: பசி கோவிந்தத்தின் படைப்பாளி

கல்கி போன்ற ஜாம்பவான்கள் புகழின் உச்சத்தில் இருந்த போது ஓசையில்லாமல் எழுத்து லகில் நுழைந்து முத்திரை படைத்துச் சென்றவர் விந்தன். கற்பனை மிகுந்த எழுத்துக்கள் நிறைந்திருந்த காலகட் டத்தில், யதார்த்தத்தை, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கான குரலை எழுப்பியவர் அவர்.

1916 செப்டம்பர் 22-ல் பிறந்த விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இந்த ஆண்டு (2016) அவரது நூற்றாண்டு. இதையொட்டி விந்தனின் மொத்தப் படைப்புகளையும் 3 தொகுதியாக வெளியிட்டிருக்கிறது காவ்யா பதிப்பகம். அவரது கட்டுரை கள், கதைகள், நாவல்களைத் தனித் தனியே தொகுத்து சுமார் 3,000 பக்கங் கள் கொண்ட பிரம்மாண்ட நூல் களாக வெளியிட்டிருக்கிறார் பதிப்பாசிரி யர் காவ்யா சண்முகசுந்தரம். பத்திரிகை யாளர், எழுத்தாளர், கவிஞர், திரைப்பட வசனகர்த்தா, கவிஞர் என்று பல முகம் கொண்ட விந்தனின் படைப்புகள் ஒவ்வொ ன்றும் ஒருவித அனுபவம் தருகின்றன.

முதலில் கட்டுரைத் தொகுப்பை எடுத்துக்கொள்வோம். ‘ஓ மனிதா’ என்ற தலைப்பில், நாய், கழுதை, சிட்டுக்குருவி, கரிச்சான் போன்றவை மனிதனைப் பார்த்து பேசுவது போன்ற நகைச்சுவை கட்டுரைகளுடன் தொடங்குகிறது. கிண்டலும் குத்தலுமான நடையில் எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் மனிதனின் மூடப்பழக்க வழக்கங்களையும், சோம் பேறித்தனத்தையும் கேலி செய்கிறது. பிரபலமான ‘எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்’ முழுமையாக இங்கே இடம்பெற்றிருக்கின்றன. அதைப் போலவே, ‘எம்.கே.டி.பாகவதர் திரையும் வாழ்வும்’ எனும் தொடர், எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’க்கு அவர் எழுதிய கதை-வசனம், ‘பஜகோவிந்தம்’ எழுதிய ராஜாஜிக்குப் பதிலடியாக பகுத்தறிவு கருத்துக்களுடன் இவர் எழுதிய ‘பசி கோவிந்தம்’, கிருபானந்தவாரியார் குமுதத்தில் ‘வாரியார் விருந்து’ எழுதிய போது அதன் தாக்கத்தால் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’ ஆகிய வையும் இந்தத் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

‘விந்தன் கதைகள்’ தொகுப்பில் அவர் எழுதிய 67 குட்டிக்கதைகள், 91 சிறுகதைகள், 32 ‘மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள்’ இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் அவற்றின் அடிநாதமாக சமூக முன்னேற்றமே இருக் கிறது. ஏழை, எளிய அடித்தட்டு மக்க ளின் வாழ்க்கை நெருக்கடிகளையே தன் படைப்புகளுக்கான மூலமாக எடுத்தி ருக்கிறார் விந்தன்.

‘விந்தன் நாவல்கள்’ தொகுப்பில், அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ‘பாலும் பாவையும்’ இடம்பெற்றுள்ளது. இது ராமாயண நையாண்டிப் போலி. இந்த நாவலை ஏவி.எம். செட்டியார் படமாக எடுத்தபோது, தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்ட காரணத்தால் விந்தன் அதிலிருந்து விலகினார். இந்நாவலில் அவர் எழுதிய, ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடி னாள்’ வரிகள், பராசக்தி படத்தில் கலை ஞர் பெயரில் பிரபலமானதாகச் சொல்வார் கள். ‘அன்பு அலறுகிறது’ நாவல், பிறன் மனை நோக்குதலைப் பேராண்மையாகக் கருதும் போக்கைப் பரிகாசம் செய்கிறது.

ஒரு தமிழ்ப் பேராசிரியரின் பொய்யான வாழ்க்கையைப் பச்சையாகப் படம் பிடித்துக்காட்டுவது, ‘மனிதன் மாற வில்லை’ நாவல்’. ராணி வார இதழில் விந்தன் தொடராக எழுதிய ‘காதலும் கல்யாணமும்’ நாவலும் இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான நாவல்.

“எழுத்தாளனுக்கு எழுத வராதது என்று எதுவுமில்லை. ஒரு முழு எழுத்தாளனுக்கு கதை எழுதவரும், கவிதை எழுத வரும், விமர்சனம் எழுத வரும். இது எனக்கு வராது என்று சொல்பவன் முழுமையான எழுத்தாளனே அல்ல” என்பது விந்தன் அடிக்கடி சொல்வது. இந்த மூன்று நூல்க ளும் அவர் ஒரு முழுமையான எழுத்தாளர் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.

-கே.கே. மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in



விந்தன் கதைகள், விந்தன் கட்டுரைகள், விந்தன் நாவல்கள்

தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்

3 தொகுப்புகளின் விலை: ரூ.3,000 (சலுகை விலை: ரூ.2,000)

தொடர்புக்கு: காவ்யா பதிப்பகம்,

சென்னை - 24

கைபேசி: 98404 80232

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x