

மக்கள் கூட்டம் மிகுந்த தெரு அது. 'ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ், எங்க இருக்குங்க?' என்று யாரிடம் கேட்டாலும், சிறிதும் யோசிக்காமல் கைகாட்டுகிறார்கள். தமிழர்களின் கலாச் சாரத்தில் ரத்தின நாயகர் அண்ட் சன்ஸுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் வெளியிடும் 'பஞ்சாங்கம்' இல்லாத தமிழக வீடுகளே இல்லை என்று சொல்லிவிடலாம்.
அந்தத் தெருவின் சந்து ஒன்றின் உள்ளே சென்றால், புத்தகங்கள் சூழ அமர்ந்திருக்கிறார் புருஷோத்தமன். 'பி. ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ்' பதிப்பகத்தின் நான்காவது தலைமுறை பதிப்பாளர்.
“1920-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாப னம் இது. இன்னும் நாலு வருஷத்துல நூற்றாண்டு காணப்போகுது. நம்பர் 26, வெங்கட் ராம தெரு, கொண்டித்தோப்பு, சென்னை, அப் படிங்கிற முகவரிகூட ரொம்ப வருஷமா மாறாம இருக்கு” என்று புன்னகைத்து வரவேற்கிறார். வரலாற்றின் பக்கங்களுக்குள் நுழையும் உணர்வு நமக்கு.
1870-களில் பி. ரத்தின நாயகர் என்பவரின் முயற்சியால்தான் இந்தப் பதிப்பகத்துக்கான முதல் விதை விழுந்தது. அப்போது கந்தகோட் டத்தில் புத்தகக் கடை ஒன்றை ஆரம்பித்தார் அவர்.
“அப்ப கந்தகோட்டத்தில் துறைமுகம் இருந்தது. கப்பலிலிருந்து வரும் பொருட்கள் எல்லாவற்றையும் கந்தகோட்டம் வழியாகத்தான் மற்ற பகுதிகளுக்குக் கொண்டுபோகணும். அப்ப, அந்தப் பகுதியில நிறைய ஜனக் கூட்டம் இருந்துச்சு. அதனால அங்க புத்தகக் கடை வைத்தார் எங்கள் கொள்ளுத் தாத்தா. நல்ல வியாபாரம்!” ரங்கூன், யாழ்ப்பாணம் எனப் பல பகுதிகளிலிருந்து மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் உள்ளிட்ட புத்தகங்களைத் தருவித்து, விற்பனை செய்துவந்திருக்கிறார் ரத்தின நாயகர்.
“1920-ம் வருஷத்துல எங்க தாத்தா ரங்கசாமி நாயகர்தான் முறையாகப் புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அவரின் அப்பா திடீரென்று காலமாகிவிட்டதால், தனது பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, முழு மூச்சாகப் பதிப்புத் துறையில் இறங்கினார்”.
ரங்கசாமி நாயகர் பதிப்பித்த முதல் புத்தகம் ஆத்திச்சூடி. அதற்குப் பிறகு, 15 சித்தர்களின் 'ஞானக் கோவை' எனும் 800 பக்க புத்தகத்தைப் பதிப்பித்தார். இன்றும் விற் பனையில் சாதனை படைக்கும் புத்தகம் அது.
“அப்ப எல்லாம் மின்சார வசதி இல்ல பாருங்க. அரிக்கேன் விளக்குதான். புத்தகங் களில் இருக்கிற எழுத்துகளும் ரொம்பவும் சின்னதா இருந்ததால, நிறைய பேர் படிக்க முடியலைன்னு வருத்தப்பட்டாங்க. அவங்க கவலையைப் போக்கும் விதமா 12 பாயின்ட் அளவில், 'பெரிய எழுத்து கருட புராணம்', 'பெரிய எழுத்து மகாபாரதம்'னு அட்டைகள்ல அச்சிடப்பட்ட 'பெரிய எழுத்து' புத்தகங்களை எங்க தாத்தா வெளியிட்டார். இந்த உத்தியைப் பின்னாட்களில் இதர பதிப்பாளர் களும் பின்பற்றினாங்க” என்கிறார் புருஷோத்தமன்.
'வைத்திய வித்துவான் மணி' சி. கண்ணுசாமிப் பிள்ளை, சித்த வைத்தியம் தொடர்பாக எழுதிய 7 புத்தகங்கள் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாட நூல்களாகவும் இருக்கின்றன. அதேபோல கர்ண மோட்சம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகப் பிரதிகளும் ஆய்வுகளுக்காகப் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.
தவிர, 1935-ம் ஆண்டு, 5-ம் ஜார்ஜ் பேரரசர் மற்றும் ராணி மேரியின் 'வெள்ளி விழா' நினைவாக, 'ஜூபிலி' எனும் பெயரில் தமிழ்ப் பேரகராதி ஒன்றையும் ரங்கசாமி நாயகர் வெளியிட்டிருக்கிறார். மகாபாரதத்தின் 18 பர்வங்களும் இங்கே முழுமையாகக் கிடைக்கின்றன.
“கொசுவுக்காக ஒரு புலவர் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். இப்படி அங்கங்கே சிதறிக் கிடந்த பல பாடல்களை '200 பல பாட்டு சில்லரைக் கோவை' என்ற தலைப்பில் புத்தகமாக்கி இருக்கிறோம்” என்று சொல்லிப் புன்னகைக்கிறார்.
“எங்கள் தாத்தாவுக்குப் பிறகு எங்கள் அப்பா இந்தப் பதிப்பகத்தைப் பார்த்து வந்தார். நான் அரை டவுசர் மாட்டிய காலத்தில் என் விடுமுறைக் காலம் இந்த இடத்தில்தான் கழிந்தது. அப்போது நாங்களே அச்சகமும் வைத்திருந்தோம். புக் பைண்டிங் செய்வது, மெஷின் ஆப்பரேட்டராக இருந்தது என என் இளமைக் காலம் பதிப்பகத்தோடுதான் கழிந்தது.” இந்தப் பதிப்பகம் தொடங்கி பல ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்கள் 2009-ம் ஆண்டுதான் முதன்முதலில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றனர்.
“நாங்க ஆரம்பத்திலிருந்தே விளம்பரம் தேடிக்கலை. அப்ப போட்டியாளர்களும் ரொம்பக் குறைவு. 1940-களில் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி காலத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, புத்தகங்களைக் காட்சிக்கு வைத்து விற்பனை செய்துவந்தார்கள். அப்புறம், அந்தப் பழக்கம் விட்டுப்போனது. புதுப் புத்தகங்களுக்குக்கூட நாங்கள் விளம்பரம் செய்வதில்லை. ஒருவர் படித்துவிட்டு, இன்னொருவருக்குச் சொல்வார். அவர் எங்களைத் தேடி வந்து புத்தகம் வாங்கிப் போவார். இப்படி வாசகர்களோடு சேர்ந்தே வளர்ந்தது எங்கள் வியாபாரமும்!” என்று நெகிழ்கிறார் புருஷோத்தமன்.
- தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in