நோபல் விருது: போருக்கெதிரான பாடல்!

நோபல் விருது: போருக்கெதிரான பாடல்!
Updated on
1 min read

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் பாடலாசிரியர் பாப் டிலனின் பாடல் ஒன்றின் மொழிபெயர்ப்பு இங்கே…

போர் வியாபாரிகள்!

வாருங்கள்! போர் வியாபாரிகளே!

துப்பாக்கிகளைப் படைத்தவர்களே

மரண விமானங்களைக் கட்டமைத்தவர்களே!

வெடிகுண்டுகள் யாவையும் உருவாக்கியவர்களே!

சுவர்களின் பின்னால் மறைந்துகொண்டிருப்பவர்களே!

மேசைகளின் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பவர்களே!

உங்கள் முகமுடிகள் ஊடாக என்னால் பார்க்க முடியும்

என்பதைச் சொல்ல விரும்புகிறேன் உங்களுக்கு, அவ்வளவுதான்!

அழிவுக்காகப் படைப்பதைத் தவிர

வேறேதும் செய்திராதவர்களே!

உங்கள் பொம்மையைப் போல

விளையாடுகிறீர்கள் நீங்கள் என் உலகுடன்.

என் கையில் துப்பாக்கியைத் திணித்துவிட்டு

என் பார்வையிலிருந்து ஓடி ஒளிகிறீர்.

சரஞ்சரமாய்த் தோட்டாக்கள் சீறிப்பாயும்போது

திரும்பியோடுகிறீர்கள் தூரதூரமாய்!

அந்தக் கால யூதாஸ் போல

பொய்யுரைக்கிறீர்கள், ஏய்க்கிறீர்கள்,

உலகப் போரை வென்றுவிடலாம்

என்று நான் நம்ப வேண்டும்

அதுதான் உங்கள் விருப்பம்.

ஆனாலென்ன, உங்கள் கண்களினூடாகப் பார்க்கிறேன் நான்

உங்கள் மூளையினூடாகப் பார்க்கிறேன் நான்

என் வீட்டுச் சாக்கடையில் ஓடும் நீரினூடாகப்

பார்ப்பது போல.

மற்றவர்கள் சுடுவதற்காகத்

துப்பாக்கிகளில் விசைகளைப் பொருத்திவிட்டு

பலிகள் எண்ணிக்கைக் கூடக்கூட

வேடிக்கை பார்க்கிறீர்கள் ஒதுங்கி நின்று.

இளம் உயிர்களின் இரத்தம்

அவர்கள் உடலிலிருந்து வெளியேறி

அவர்கள் உடல்களெல்லாம் சகதியில் புதைபடும்போது

நீங்கள் பதுங்கிக்கொள்கிறீர்கள்

உங்கள் மாளிகையில்.

நீங்கள் தூவியிருப்பது

மிகமிக மோசமானதொரு பயத்தை

இவ்வுலகில் புதிதாய்க் குழந்தைகளைப்

பிறப்பிக்கக் கூடாதென்ற பயத்தை.

இன்னும் பிறக்காத, இன்னும் பெயரிடப்படாத

என் குழந்தையையும் அச்சுறுத்துபவர்களே,

உங்கள் நாளங்களில் ரத்தம் ஓடுவதற்குத் தகுதியற்றவர்கள் நீங்களெல்லாம்!

குறுக்கிட்டுப் பேசும் எனக்கு

என்ன தெரியும்

நான் ரொம்பவும் சின்னப் பையன் என்று நீங்கள் சொல்லக்கூடும்.

ஒன்றும் தெரியாதவன் என்று நீங்கள் சொல்லக்கூடும்.

உங்களைவிட இளையவனாக இருந்தாலும்

ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரியும் எனக்கு,

நீங்கள் செய்யும் காரியங்களுக்காக

அந்த ஏசு கூட உங்களை மன்னிக்க மாட்டார் ஒருபோதும்.

உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டும் நான்!

எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கட்டுமே உங்களிடம் பணம்,

உங்களுக்கான பாவமன்னிப்பை அது பெற்றுத்தருமா?

அப்படி அது வாங்கித்தரும் என்று நினைக்கிறீர்களா?

மரணம் உங்களைப் பலிகொள்ளும்போது

நீங்கள் தேடிய செல்வமனைத்தும்

கொடுத்தாலும் உங்கள் ஆன்மாவை

திரும்பப் பெற முடியாது உங்களால்.

நீங்களும் இறந்துபோவீர்கள் ஒருநாள்.

மரணம் உங்களுக்கு விரைவில் வந்துதீரும்.

அந்த வெளிரிய மதியப் பொழுதில்

உங்கள் சவப்பெட்டியை நிச்சயம் பின்தொடர்வேன் நான்.

உங்கள் மரணப் படுக்கையை நோக்கி

நீங்கள் கீழே இறக்கப்படும்போது

உங்கள் கல்லறையைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருப்பேன்

நீங்கள் இறந்துபோய்விட்டீர்கள் என்று உறுதியாக எனக்குத் தெரியும் வரை!

(1963-ல் வெளியான ‘த ஃப்ரீவீலிங் பாப் டிலன் இன் த ஸ்பிரிங்’ என்ற ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்)

தமிழில்: ஆசை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in