Last Updated : 09 Oct, 2016 12:30 PM

 

Published : 09 Oct 2016 12:30 PM
Last Updated : 09 Oct 2016 12:30 PM

கவிதை மீதொரு உரையாடல்: தேவதச்சன் - நாய்கள் இழுத்துச் செல்கிற சூரிய வெளி

வார்த்தைகள் மூடுகின்றன ஊற்றை

வார்த்தைகள் தடுக்கின்றன காற்றை

வார்த்தைகள் மறைக்கின்றன தழலை

வார்த்தைகள் பறிக்கின்றன காலடி மண்ணை

தேவதச்சனின் கவிதை ஒன்றிலிருக்கும் வரிகள்தான் இவை. இவற்றை வாசிக்கும்போது, சொற்களால் ஆனதோ உலகம் என்று தோன்றியது. சொற்களால் ஆன உலகிலிருந்து நம்மைச் சற்றே விடுவிக்கின்றன தேவதச்சனின் கவிதைகள்.

கவிஞர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வார்த்தல் முறை ஒன்றைத் தேடுகிறார்கள். வாழ்தல்தான் தேவதச்சனின் வார்த்தல். உணர்ச்சியில் சிக்கிக்கொள்ளாத கவிதைகள். உணர்தலின் விளிம்பு தாண்டாத கவிதைகள். அறிவும் சிந்தனையும் எட்டிப் பார்க்காத கவிதைகள். வாழ்வின் ஓசைகளை மட்டுமே அதிரவிட்டு நிரந்தரக் குயிலோசையைக் காதில் ஒலிக்கவிடுகிற கவிதைகள்.

‘பாலபாடம்’, ‘வீடு’ போன்ற பல கவிதைகள் தினசரி வாழ்விலிருந்து உதிக்கிற உதயங்கள். ஒவ்வொரு கவிதையும் வாழ்வதற்கான நகர்வுகள். வெறுமையை ஒருபோதும் பேசாதவர் தேவதச்சன். மாலையில் விளையாட வரும் சிறுவர்களுக்காகக் கரையில் காத்திருக்கிறார். கண்களையும் காதுகளையும், நாசியையும் மறையச் செய்துவிட்டுச் சிறுவர்களுக்காகக் காத்திருக்கிறார்.

“என்னை உள்ளங்கையில் ஏந்தி / ஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என / அப்போது அவர்களிடமிருந்து / விரல்களைப் பரிசுபெறுவேன்/ கண்களை வாங்கிக்கொள்வேன் / நாசியைப் பெற்றுக் கொள்வேன் / கூடவே கூடவே / நானும் விளையாடத் தொடங்குவேன் / ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று”

இதுதான் தேவதச்சன். இத்தகைய கவிதை ஆக்கங்கள் தேவதச்சனின் தனி அடையாளங்கள். வாழ்க்கையை நேரடியாகச் சந்திப்பவர் தேவதச்சன். ஒடிந்த செடிகளை, சாய்ந்த செடிகளை நிமிர்த்தி வைத்துச் செல்கிற வண்ணத்துப்பூச்சியைப் பின் தொடர்கிறவர். நீண்ட கவிதை வரலாற்றில் நாம் சற்றே நின்று பார்க்கிற கவிதைவெளி தேவதச்சன்.

‘இன்னும் தாதி கழுவாத’ என்ற தலைப்பிலிருக்கும் கவிதை தேவதச்சனின் கவிதை அடையாளம்.

“இன்னும் / தாதி கழுவாத / இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் / பழைய சட்டை என்று ஏதும் இல்லை / பழைய வீடு என்றும் ஏதும் இல்லை / மெல்லத் திறக்கும் கண்களால் / எந்த உலகை / புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி அதை / எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி”

புதிய உலகம்

இதுதான் சொற்கள் தீண்டாத உலகம். இன்னும் தாதி கழுவாத இப்போதுதான் பிறந்த குழந்தை மட்டுமே பார்க்க முடிகிற உலகம். இப்படியான குழந்தைகளின் கண் திறப்பில் பார்க்கப்படுகிற உலகம் சொற்களின் உலகமல்ல. அனுபவங்களின் பதிவுகள் தீண்டாத மாசுபடாத உலகம். இன்னும் தாதி கழுவாத என்ற சொற்கள் உலராத பிறப்பின் ஈரத்தை உணர்வெளிக்குக் கடத்துகின்றன. குழந்தை மீதிருக்கும் ஈரம் அது பார்க்கும் பொருள்கள் யாவிலும் படிகிறது. அப்போது புதிதாக மலர்கிறது உலகம். சொற்கள் தீண்டாத அற்புத உலகம். இன்னும் தாதி கழுவாத குழந்தைமீது தேவதச்சன் கொள்கிற பார்வை மொத்த உலகையும் புதுப்பிக்கிறது.

நவீன வாழ்க்கையின் அனுபவ வெளிப்பாடு இவரது கவிதைகள். ‘இரண்டு சூரியன்’ என்ற தலைப்பிட்ட கவிதை...

“உன்னை என்ன பண்ணிலால் நீ / சந்தோசம் அடைவாய் / உனக்கு பிடித்த நகைச் சுவைகள் சொல்லவா / நீ லயித்து உன்னை மறக்கும் இசைத் தட்டுகளை / சுழல விடவா”

சமூக வாழ்வை, தனி மனித வாழ்வை இதுவரையிலும் யாரும் பார்க்காத இடத்திலிருந்து பேசுகிறது கவிதை. கவிதை தனக்குள் வைத்திருக்கும் அரசியல் பிடிபடுகிறது. சூரியன் இரண்டாக உதிப்பதுதான் இங்கே கவிதை. அதனால்தான் தலைப்பு ‘இரண்டு சூரியன்’. மனித வாழ்வின் இரு வெளிகளை ஒரு உதயத்தில் காட்சிப்படுத்துகிறது கவிதை. உள்ளீடில்லாத சொற்களையும் வினைபடாத சொற்களையும் பகடி செய்கின்றன கவிதையின் ஆரம்ப வரிகள். புற அரசியலைப் பகடி செய்துவிட்டு வாழ்வை நேரடியாகச் சந்திக்கிறது கவிதை. அடுத்து வரும் வரிகள்...

“இந்தியாவில் இரண்டு சூரியன்கள் உதிக்கின்றன / பினாமிகளுக்கு ஒன்றும் / சாதாரணர்களுக்கு ஒன்றும் / சாதாரண நம் சூரியனை இழுத்துச் செல்வது / ஏழு குதிரைகள் அல்ல / ஏழு நாய்கள் / தெருத்தெருவாய் வீதிவீதியாய் ஊர்ஊராய் / நாடுவிட்டு நாடாய்”

அடையாளத் துறப்பு

நவீனக் கவிதைகள் இரண்டு நிகழ்வுகளால் ஆனவை. ஒன்று கவிஞனுக்குள் நிகழ்வது. மற்றது கவிதைக்குள் நிகழ்வது. கவிஞனுக்குள் நிகழ்வது கவிஞனின் அடையாளம். கவிதைக்குள் நிகழ்வது அடையாளம் துறப்பது. அன்றாட வாழ்க்கையில் எல்லா நேரமும் அடையாளங்களைச் சுமந்துகொண்டே இருக்க முடியாது. ஆண், பெண் என்கிற அடையாளமாக இருந்தாலும், சாதி, மத, தேச அடையாளங்களாக இருந்தாலும் சதா சுமந்து அலையும் சாத்தியமில்லை. அகதி மீதிருக்கும் அடையாளம்தான் வாழ்வதற்கான மண் தர மறுக்கிறது. நாய்கள் இழுத்துச் செல்கிற சூரிய வெளியைச் சேர்ந்த மனிதர்களிடம் என்ன செய்து சிரிக்க வைப்பேன் என்கிறார்.

“நான் என்ன செய்து உன்னை சிரிக்க வைப்பேன் / ஒரு நதியைப் போல் ஊரெங்கும் / நிறைய வைப்பேன்”

மாசிலா மனத்தின் வெளிப்பாடு. இந்த எண்ணம்தான் கவிதையை ஆக்கிய வரிகள். இந்த வரிகளில்தான் கவிதையின் மொத்தப் பயணமும் நிகழ்கிறது. கவிதையின் உயிர்வெளி என்றுகூடச் சொல்லலாம். இரண்டு சூரியனை அறிந்திருக்கும் மனதின் அவஸ்தையே கவிதை. நீள்கிறது கவிதை...

“ஒரு கம்பளிப்பூச்சி வண்ணத்துப் பூச்சியாய் / சந்தோசம் அடைவதை / ஒரு தடவையாவது / பார்த்திருக்கிறாயா”

கவிதையில் கவிஞனையும் மீறிக் கவிதையின் ஆற்றல் வெளிப்படுகிறது. கவிதைக்குள்ளாக நடக்கும் வினை கவிதையின் உள் நிகழ்வு. இந்த உள் நிகழ்வுதான் அனுபவத்தைக் கவிதையாக மாற்றுகிறது. கல் சிற்பமாவது போல. கவிதையைக் கவனமாக வாசித்து வரும்போது அதன் இறுதி வரிகள் கவிஞனின் வரிகளல்ல என்று உணர்கிறோம். முந்தைய வரிகளின் கூட்டு நிகழ்வு. வர்க்க பேதங்களைச் சுட்டுகிற அடையாளத்தோடு தொடங்குகிற கவிதை, பிறகு அதையும் துறந்து தன் அளவில் வாழ்க்கையைச் செப்பம் செய்துகொள்ளும் வழி ஒன்றைத் தேடுகிறது. அவனுக்கான வாழ்வை அவனே அறியும் இடம் நோக்கி நகர்த்துகிறது.

மரத்தைப் பார்க்கிறபோதே மனம் சட்டென்று வேர்களில் தோய்கிற உணர்வு. வேர்களில் ஊடாடுவதுதான் கவிதையின் உள்வினையோ என்று தோன்றுகிறது. கண்படாத இடத்தில் பார்வை கொள்ளவைக்கும் முயற்சியாக விரிகிறது. கவிதை சமூக வெளியில் பிரசங்கம் செய்யாது தனிமனிதனிடம் அக்கறையோடு நெருங்குகிறது. ஒரு புள்ளியோடு இன்னொரு புள்ளியை இணைக்கத் துடிக்கிறது. எல்லாப் புள்ளிகளையும் இணைப்பதற்கான ஒரு மன அதிர்வை உண்டாக்க முயல்கிறது. அறிவை, புலமையைத் தூர எறிந்துவிட்டுத் தன் உலைக்களத்திலேயே தனக்கான கருவியைக் கண்டடையத் தூண்டுகிறது.

கவிதையின் இறுதி வரிகள் தேவதச்சனின் தனித்த மொழி. வார்த்தைகள் உணர்வின் விளிம்பிலிருந்தே அதிர்கின்றன. உணர்ச்சியின் எல்லைக்குள் நுழைவதில்லை தேவதச்சனின் வார்த்தைகள். இந்தச் சொல்முறைதான் தேவதச்சனின் கவிதை மொழி. வாழ்தலின் பேரோசையை ஒரு இசைக் கருவிக்குள் புகுத்தி வாழ்வின் இசையைக் கண்டடைகிறார். கவிஞனின் அடையாளம் மறைந்து கவிதையின் அடையாளம் பிறக்கிறது.

தினசரி வாழ்வின் எளிய சப்தங்கள், சில தருணங்கள், பயன்பாட்டிலிருக்கும் பொருள்கள், சில வாழ்வெளிகள் ஆகியவை தேவதச்சனுக்குப் போதுமானவை. மரண வீட்டிலும் வாழ்தலின் ஒளியைப் பார்க்கிற எழுத்து இவரிடம்தான் உண்டு. இது தத்துவ விசாரத்தில் கரைந்துபோகாதது.

கட்டுரையாளர், கவிஞர், நாவலாசிரியர் தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x