

தலைமைச் செயலக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஞா.சிவகாமி. 1972இல் கல்லூரிப் பருவத்தில் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலைப் படித்ததிலிருந்து தொடர்ந்து பெரியார் எழுத்துகளையும் அவரைப் பற்றி பிறர் எழுதியவற்றையும் படித்துவந்திருக்கிறார்.
அவற்றை வைத்து பெரியாரின் எழுத்துகள், பணிகள், தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக மறுமலர்ச்சி, சமத்துவம் ஆகியவற்றுக்கான அவருடைய அளப்பரிய பங்களிப்புகளை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் விவரித்துள்ளார். பெரியாருக்கான நன்றிக் கடனாக இந்நூலைப் படைத்துள்ளதாகத் தன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பெரியாரின் பேரன்பு, ஞா.சிவகாமி
வெளியீடு: ஏகம் பதிப்பகம், சென்னை: 600 005
விலை: ரூ.100, தொடர்புக்கு: 94449 09194, 97908 19294
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கா.சு.வேலாயுதன் இந்து தமிழ்திசை இணையதளத்தில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதன் முதல் பாகம் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் 60 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. நவீன வளர்ச்சி நடவடிக்கைகளாலும் காடுகளில் வாழும் யானைகள் எதிர்கொண்டிருக்கும் துயரநிலையை இந்தக் கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.
யானைகளின் வருகை: பாகம் 2, கா.சு.வேலாயுதன்
வெளியீடு: கதை வட்டம், கோயம்புத்தூர்
விலை: ரூ.220, தொடர்புக்கு: 99944 98033
குமரி மாவட்டம் கொற்றிகோடு கிராமத்தில் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரான கவிஞர் கொற்றை வளவன் குழந்தைகளுக்கான கவிதைகளை எழுதியுள்ளார். நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் சிக்கலில்லாத மொழி, நேரடியாகச் சொல்லப்படும் நல்ல கருத்துகள், குழந்தைகளை ஈர்க்கும் சந்தநடை ஆகியவற்றுடன் அமைந்திருக்கின்றன.
அழகிய பூவும் ஆடிடும் பிஞ்சும் (குழந்தைக் கவிதைகள்), கொற்றை வளவன்
வெளியீடு: தமிழன் பதிப்பகம், குமாரபுரம்,
குமரி மாவட்டம், விலை: ரூ.150
தொடர்புக்கு: 94428 57089
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத் தமிழ்ப்பிரிவின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் க.அன்பழகன், ஹரணி என்னும் புனைபெயரில் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதிவருகிறார். இவர் கைப்பேசியில் எடுத்த ஒளிப்படங்களை வெளியிட்டு அவை குறித்த ஹைக்கூ கவிதைப் போட்டியை நடத்தியிருக்கிறார். 20 வாரங்கள் நடந்த அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
வானம் விழுங்கும் வானவில்
தொகுப்பாசிரியர்: ஹரணி
வெளியீடு: கேஜி பப்ளிகேஷன்ஸ்
தஞ்சாவூர், விலை: ரூ.80,
தொடர்புக்கு: 94423 98953
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் 200க்கும் மேற்பட்ட சூரணங்களின் செய்முறை, பயன்கள், சாப்பிடும் முறை ஆகியவற்றை
விளக்குகிறது இந்நூல்.
எளிய வகைச் சூரணம், கோவை பாலா,
வெளியீடு: கவின் பப்ளிகேஷன்ஸ்
கோயம்புத்தூர், விலை: ரூ.250,
தொடர்புக்கு: 73958 66699