

தமிழ்ப் பண்பாட்டின் விசேஷமான அம்சங்களில் ஒன்று குலதெய்வ வழிபாடு. இந்தக் குலதெய்வங்களைப் பற்றி இதழாளர் அய்கோ எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு ‘குலம் காக்கும் தெய்வங்கள்’. தமிழகத்தின் பிரபலமான சிறுதெய்வ வழிபாட்டுத் தெய்வங்கள் பற்றிய சித்திரத்தைக் கதைப்பாடல்கள், கதைகள், சங்கப் பாடல்கள் அடிப்படையில் அய்கோ இதில் உருவாக்கியுள்ளார்.
இசக்கியின் தொடக்கம் தேடி வில்லுப்பாட்டு, சிலப்பதிகாரம், சமணக் கதைகள் என நீண்ட வரலாற்றுப் பயணத்துக்கு வாசகர்களைக் கூட்டிச் செல்கிறார் நூலாசிரியர். சாமானியப் பெண்ணாக இருந்து பாலின அடையாளத்தால் பட்டபாடுகளால் தெய்வமானவர்களின் கதைகளைச் சுவைபடவும் சொல்லியிருக்கிறார்.
சமண, பெளத்த சமயங்களுக்குப் பிறகு தமிழில் எழுந்த சைவ சமயம் அந்த இரு மதங்களின் திருவுருக்களை இருட்டடிப்பு செய்ததைப் பற்றி ஆசிரியர் குறிப்பிட மறக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற ஊரில் பஞ்சாயத்துத் தலைவராக (சேர்மனாக) இருந்தவர், ‘சேர்மன் அருணாசலசுவாமி’ எனத் தெய்வமான வரலாறு சுவாரசியம் மிக்கது.
இன்றும் அந்தப் பகுதிகளில் ‘சேர்ம அருணா’, ‘சேர்மத்துரை’ என இந்தத் தெய்வத்தின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம் இருக்கிறது. நாராயண குரு பற்றியும் எழுதியுள்ளார். பத்திரிகையில் தொடராக வந்த இந்தக் கட்டுரைகள், சுவாரசியத்தையும் ஆய்வுப் பண்பையும் ஒருசேரக் கொண்டுள்ளன.
குலம் காக்கும் தெய்வங்கள்
இதழாளர் அய்கோ
வெளியீடு: தனு பதிப்பகம், 16,
காந்தி நகர்
ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி 627007
விலை: ரூ. 300
- ஜெய்
அறியப்படாத சுதந்திரப் போர்
மகாத்மா காந்தி தலைமையிலான அகிம்சை வழிப் போராட்டம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தது. என்றாலும் பிரிட்டிஷ் அடக்குமுறையை எதிர்த்துப் போராளிகள் பலர் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்ததும் வரலாறு. எல்லோருக்கும் தெரிந்த வரலாறாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ‘இந்திய தேசிய ராணுவம்’ (ஐ.என்.ஏ) அமைக்கப்பட்ட வரலாறு இன்றும் நினைவுகூரப்படுகிறது.
ஏறக்குறைய ஐ.என்.ஏ அமைக்கப்பட்ட அதே காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திலும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயரை விரட்டியடிக்க விடுதலை ராணுவம் அமைக்கப்பட்ட வரலாற்றைக் கூறுகிறது ‘நாடு அழைத்தது’. மேஜர் ஜெய்பால் சிங்கின் சுயசரிதைப் பகுதிகளில் பதிவாகியிருக்கும் அந்த வரலாற்றை அருணானந்த் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
ராணுவப் பணியிலேயே தொடர்ந்திருந்தால் கமாண்டர்-இன்-சீஃப் தகுதியும், சீனியாரிடியும் மேஜர் ஜெய்பாலுக்குக் கிடைத்திருக்கும். ஆனால், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக அதைத் துறந்துவிட்டு அயராது பணியாற்றிய அவரது வாழ்க்கை இன்றைய இளம் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமின்றி அனைவரும் வாசித்து அறிய வேண்டியது.
நாடு அழைத்தது
மேஜர் ஜெய்பால் சிங் (தமிழில்: அருணானந்த்)
அலைகள் வெளியீட்டகம், சென்னை
தொடர்புக்கு: 9841775112
விலை: ரூ.160
- அபி
சுவாரசியக் கதைகளின் தொகுப்பு
பெங்களூருவில் வாழ்ந்தபடி 1980களில் கதைகள் எழுதிவந்தவர் இரவிச்சந்திரன். அவருடைய வெவ்வேறு தொகுப்புகளில் இடம்பெற்ற சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தப் புதிய தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுஜாதாவுடன் பத்து ஆண்டுகள் பழகியவரான இரவிச்சந்திரனுக்கு அவருடைய சுவாரசியமான நடையும் கதைப்போக்கில் புதுமைகளைப் புகுத்தி ரசிக்க வைக்கும் உத்தியும் கைவரப்பெற்றிருக்கின்றன.
அதேநேரம் தனது தனித்தன்மையையும் தக்கவைத்துக்கொள்கிறார். சில கதைகள் விடலைப் பருவக் காதல், பிறழ் உறவை மையமாகக் கொண்டவை. ஈழப் போராளிகள் பற்றிய ‘சொந்தச் சகோதரர்கள்’ உள்ளிட்ட சில கதைகள் முற்றிலும் வேறு தளத்தில் இயங்குகின்றன.
‘படுக்கை’ கதை, கணவன் - மனைவி உறவில் இருக்கும் உள்முடிச்சுகளின் அழகான சித்திரத்தை முன்வைக்கிறது. சில கதைகளில் வெளிப்படும் பெண்கள் குறித்த பார்வை இந்தக் காலத்துக்குப் பொருந்தாதது. ஆனால் ‘சுயம்வரம்’ கதையின் நாயகி அதிசயிக்கவைக்கிறார். இலகுவான வாசிப்புக்கு உகந்த சுவாரசியக் கதைகளின் தொகுப்பு.
சிந்துவெளி நாகரிகம்
இரவிச்சந்திரன்
ஜெய்கிரி பதிப்பகம், பெங்களூரு
விலை: ரூ.450
தொடர்புக்கு: 8643842772
- கோபால்
போராட்டக் காதல்!
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் களப் பதிவுதான் வி.எஸ்.முஹம்மத் அமீன் எழுதிய ‘ஷாஹீன்பாக்’ என்ற நாவல். ஜமீல் என்ற இளைஞரும் காதர் மீரா என்ற பெண்ணும் ஒரே பகுதியில் வசிப்பவர்கள். இருவரும் சமூக ஆர்வலர்கள். ஒருவருக்கு மற்றொருவர் நல்ல புரிதலோடு இருக்கும் சூழலில் காதல் அரும்பிய நிலையில் ஷாஹீன்பாக் போராட்டக் களத்தில் பெண்களுக்கு மீரா பொறுப்பாளராகவும், ஜமீல் ஆண்கள் பகுதிக்கான களப் பணியில் இருக்கிறார்கள்.
போராட்டம், உணவு மற்ற ஏற்பாடுகள் தொடர்பாக இருவரும் அடிக்கடிச் சந்தித்துப் பேசுகிறார்கள். ஆனால், போராட்டத்துக்காக இருவரும் காதலைத் தியாகம் செய்கிறார்கள். போராட்டத்தின் உன்னதமான நோக்கம் சிதைவடையக் கூடாது என்பதைக் காதலர்கள் புரிந்துகொண்டு பிரிந்ததை மிக அழகாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். சமகாலப் போராட்டத்தைப் பதிவுசெய்த வகையில் இந்த நாவல் முக்கியமானது.
ஷாஹீன்பாக்
வி.எஸ்.முஹம்மத் அமீன்
வெளியீடு: இஸ்லாமிக் ஃப்வுண்டேசன் டிரஸ்ட்,
விலை: ரூ.50
தொடர்புக்கு: 044 26624401
- புதுமடம் ஜாபர்அலி