

கவிஞர் எம்.டி.முத்துக்குமாரசுவாமியின் கவிதைகளை, கூத்துப்பட்டறை நாடகமாக நிகழ்த்தவுள்ளது. இன்று (20, ஆகஸ்ட்) தொடங்கி ஆகஸ்ட் 26 வரை மாலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி சென்னை கூத்துப்பட்டறை பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். தொடர்புக்கு: 90032 90306.
ஆய்வாளர்களுக்கு நிதிநல்கை
தி நியூ இந்தியா பவுண்டேசன் அமைப்பு சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியா என்ற தலைப்பில் ஆய்வுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆண்டுக்கு ரூ.18 லட்சம் நிதிநல்கை வழங்கப்படும். ஆய்வுப் புத்தகமாக்கலுக்கு இந்த அமைப்பு உதவும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு மட்டுமான இந்தத் திட்டம் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் பொருந்தக்கூடியது. 5இலிருந்து 10 வரை இதில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தாண்டு டிசம்பர் 31க்குள் ஆய்வுக்கான முன்வரைவைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலதிகத்
மலையாளத்தில் தமிழ்ச் சிறுகதைகள்
கவிஞர் அ.வெண்ணிலா ‘மீதமிருக்கும் சொற்கள்’ என்னும் தலைப்பில் தொகுத்த கதைகளில், 28 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாத்ருபூமி பதிப்பகம், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ் மலையாளத்தில் ‘தமிழ் பெண் கதைகள்' என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
கே.எஸ்.வெங்கடாசலம் மொழிபெயர்த்துள்ளார். எழுத்தாளார் வை.மு.கோதைநாயகி அம்மாள் தொடங்கி சந்திரா வரையிலான பெண் எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கன்னடத்தில் ஜெயலலிதா மொழிபெயர்க்கவுள்ளார். ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவுள்ளது. இதில் தொகுக்கப்படாத கதைகள் இரண்டாம் பாகமாக வெளிவரவுள்ளது.
புதிய முகவரியில் டிஸ்கவரி புக் பேலஸ்
டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடை, தி.நகர் நியூ புக் லேண்ட்ஸுக்குப் பிறகு தமிழ்ச் சிற்றிலக்கியத்துக்காக உருவான இலக்கிய வெளி. புத்தகக் கடைக்குள் வெளியீடு, இலக்கியக் கூட்டங்களுக்கான சிற்றரங்கு என ஆங்கில இலக்கியத்துக்கு இணையாகத் தமிழில் டிஸ்கவரி ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியது.
இப்போது இந்தக் கடை கே.கே.நகர் முனுசாமி சாலையிலேயே 1055-B, முனுசாமி சாலை (நெசப்பாக்கம் சாலைக்கு எதிரில்) என்ற முகவரிக்கு மாறியுள்ளது. பெரிய புத்தகக் கடை, கூட்டங்களுக்கான சிற்றரங்கு, அரங்கு, திரையிடலுக்கான அரங்கு, ஆர்ட் கேலரி, சிற்றுண்டிக் கடை, வாகனங்கள் நிறுத்தும் இடம், இளைப்பாறும் இடம் என விசாலமான வளாகமாக இது உள்ளது.
வாசக சாலை விருதுகள்
வாசக சாலை, ‘தமிழ் இலக்கிய விருதுகள் - 2022’க்கான பரிந்துரைகளை வரவேற்கிறது. நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, சிறார் நாவல், அறிமுக எழுத்தாளர், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. பரிசீலனைக்குப் புத்தகங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: வாசக சாலை, 1, டாக்டர் அம்பேத்கர் நகர் முதல் தெரு, வடபழனி, சென்னை - 26. தொடர்புக்கு: 99426 33833.
பத்மபாரதிக்கு தூரன் விருது
கரசூர் பத்மபாரதி, ‘நரிக்குறவர் இன வரைவியல்’ , ‘திருநங்கையர் சமூக வரைவியல்’ ஆகிய ஆய்வுகள் மூலம் தமிழ் மானுடவியலுக்குப் பங்களிப்புச் செய்தவர். அவரது ஆய்வுப் பணியைக் கெளரவிக்கும் வகையில் இந்தாண்டுக்கான தமிழ் விக்கி-தூரன் விருது அவருக்கு ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
எழுத்தாளர் ஜெயமோகன், ஆய்வாளர்கள் அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விக்கிபீடியா பங்களிப்பாளர்களுக்கு விருதுகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் தன்னார்வமாக எழுதிவரும் மூத்த பயனர்களான செங்கைப் பொதுவன் (வயது 87), உலோ.செந்தமிழ்க்கோதை (வயது 78) ஆகிய இருவருக்கும் விருதளிக்கப்பட்டது. 6 ஆயிரம் கட்டுரைகள் எழுதியுள்ள கி.மூர்த்தி, 5 ஆயிரம் கட்டுரைகள் எழுதிய எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி, கு.அருளரசன் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.
விக்கியில் சுமார் 35 ஆயிரம் திருத்தங்கள் செய்த தகவலுழவன், பாலாஜி ஜெகதீஷ் ஆகியோருக்குச் சிறப்புப் பங்களிப்பாளர் விருதளிக்கப்பட்டது. மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்வை விக்கிமேனியா என்ற அமைப்பு ஒருங்கிணைத்தது.