

சங்க காலத் தமிழர்களின் உணவுப் பண்பாடு குறித்த சிறப்பான ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு இது. மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி எழுதியிருக்கிறார். சங்கச் சமூகத்தில் நடைபெற்ற பண்டமாற்றுமுறை குறித்தும் இந்நூலில் விரிவாக ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.
செந்நெல் அரிசியும் வெண்ணெல் அரிசியும் மருத நிலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. குறிஞ்சி நிலத்தவர்கள் மான் இறைச்சியைக் கொடுத்தும் நெய்தல் நில மக்கள் மீனைக் கொடுத்தும் நெல்லைப் பெற்றிருக்கின்றனர். நெய்தல் நில மக்கள் பண்டமாற்று முறையிலேயே தங்களுக்குத் தேவையான பொருட்களைக் குறிஞ்சி நிலத்திலிருந்தும் முல்லை நிலத்திலிருந்தும் பெற்றனர்.
அதே நேரத்தில் உணவுப் பொருளைத் தாராளமாகக் கடனும் கொடுத்திருக்கின்றனர். விருந்தினர்கள் இரவு நேரத்தில் வந்தாலும் சுவையான இறைச்சியைச் சமைத்து அவர்களுக்குப் பரிமாறியிருக்கின்றனர். நெடுந்தூரம் நடந்து வந்த விருந்தினர்களின் களைப்பு தீர அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி ஆகியவற்றைப் புளி கரைத்த உலையில் இட்டுக் குழைத்துக் கொடுத்திருக்கின்றனர்.
கள் குடித்தவர்களின் மயக்கம் தீரப் பழஞ்சோற்றை அளித்திருக்கின்றனர். உணவையே நோய் தீர்க்கும் மருந்தாகவும் அக்காலத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதற்குப் பல சான்றுகளை நூலில் காணமுடிகிறது.
மூங்கில் குழாய்களில் புளி சாதத்தை அடைத்து கால்நடைகளில் கழுத்தில் கட்டிவிட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ‘வெள்ளாட்டுக்கறி பிரியாணி’ முல்லைநில மக்களின் முக்கிய உணவாக அக்காலத்தில் இருந்திருக்கிறது. ‘ஊன்துவை அடிசில்’ என்று பிரியாணிக்குப் பெயர். புளி சாதமும் மட்டன் பிரியாணியும் அதே தன்மையுடன் இன்றும் பயன்பாட்டில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
நெய்யை விற்றுப் பொன்னை வாங்காது எருமையையும் பசுவையுமே வாங்கியிருக்கின்றனர். கலப்புப் பொருளாதாரச் சிந்தனைகள் சங்க காலத்தில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பால் சார்ந்த உணவு வகைகளுடன் இறைச்சியைக் கலந்துண்ணுவது தவறு என்ற கருத்து இன்று சமூகத்தில் பரவியிருக்கிறது. ஆனால், தயிர் கலந்த சோற்றுடன் உடும்பு இறைச்சியை உண்டதைப் புறநானூறு (326) குறிப்பிடுகிறது. சங்க கால உணவுப் பண்பாட்டில் ‘கள்’ உணவின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது.
பெண்களின் உணவு சார்ந்த பொருளாதாரப் பங்களிப்பு சங்க காலத்தில் குறிப்பிடும்படியாக இருந்திருக்கிறது. வேட்டையின் மூலம் தினந்தோறும் உணவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால், பெண்கள் சேகரித்த தாவரம் சார்ந்த உணவுப் பொருட்கள் நாள்தோறும் உறுதியாகக் கிடைத்தன.
இன்றும் பெண்களாலேயே பல குடும்பங்களின் உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஆயர் பொருளாதாரத்தில் பெண்கள் பொருளாதாரச் சுமையாகக் கருதப்பட்டார்கள். இதனால் பெண் குழந்தைகளைக் கொன்றுவிடும் பழக்கம் இருந்தது என்றொரு கருத்தைக் கூறியிருக்கிறார் பாரதி. ஆனால் இக்கருத்துக்குப் போதுமான சான்றுகளோ கூடுதல் தரவுகளோ பிரதியில் இல்லை.
பக்தவத்சல பாரதி, சங்க இலக்கியத்தை முழுமையாகத் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். குறிஞ்சி நிலத்தை வன்புலம், புன்புலம், மேட்டு நிலம், வலிய நிலம், கானம், புனம், புலம், ஏனல், துடவை, முரம்பு ஆகிய வெவ்வேறு பெயர்களால் அழைத்திருக்கின்றனர்.
இச்சொற்கள் சங்க இலக்கியச் செய்யுட்கள் முழுக்க விரவிக் கிடப்பவை. அவற்றை ஓரிடத்தில் திரட்டிக் கொடுத்து வாசிப்பவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இதேபோன்று மருதநிலம், உழவர்கள், சோறு, கள் குறித்துச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் அனைத்துச் சொற்களையும் பாடலடிகளில் இருந்து சேகரித்துக் கொடுத்திருக்கிறார்.
ஐந்நில மக்களின் உணவுச் சேகரிப்பு, உணவுப் பங்கீடு, பண்டமாற்று முறை, மது வகைகள், உண்கலன்கள், உணவுப் பொருளாதாரம் எனச் சங்கச் சமூகத்தின் ஒட்டுமொத்த உணவு சார்ந்த பண்பாட்டுத் தரவுகளையும் சங்க இலக்கியங்களில் இருந்து திரட்டி அளித்திருக்கிறார் பாரதி. இவர், ஒவ்வொரு ஆய்வுக்கும் பயன்படுத்தும் துணை நூல்களின் பட்டியலே இவரது உழைப்பையும் ஆய்வு நேர்மையையும் குறிப்பிடும்.
- சுப்பிரமணி இரமேஷ், இலக்கிய விமர்சகர், தொடர்புக்கு: ramesh5480@gmail.com
சங்க காலத் தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
விலை: ரூ.100, தொடர்புக்கு: 04652-278525, 96779 16696