

குழந்தைகளைப் போலானாலன்றி மோட்ச ராஜ்ஜியம் சாத்தியமில்லை’ என்று விவிலியத்தில் மேற்கோள் ஒன்று இருக்கிறது. கடந்த காலத்தின் சுமையோ, எதிர்காலம் குறித்த ஏக்கமோ இல்லாமல் போகும் கணத்தில் வாழ்வதுதான் சொர்க்கம் என்பதே அதன் பொருள். ஆனால், குழந்தைகளால் இயல்பாகப் பயில முடிவதை பெரியவர்களான நாம் எப்படித் தொலைத்தோம்? எப்படித் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்? மீண்டும் அதை எப்படிப் பயிலப்போகிறோம்?
இதையெல்லாம் கற்றுக்கொடுக்கும் உண்மையான சுய விழிப்புணர்வு நூல் இது. எப்போதும் திறந்தே இருக்கும், ஆனால் நம்மில் பெரும்பாலானோர் புக விரும்பாத ‘இப்போதுக்குள்’ நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ஆனந்த். ‘அவரவர் கைமணல்’, ‘காலடியில் ஆகாயம்’ போன்ற கவிதைத் தொகுப்புகளில் எளிமையான மொழியில் அபூர்வ உணர்வுத் தருணங்களை தனது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் ஆனந்த். தற்போது மனநல ஆலோசகராகவும் பணியாற்றிவருகிறார்.
மனம் என்னும் வஸ்து எப்படி இயங்குகிறது? அனுபவத்தையும் காட்சி களையும் மனம் எப்படி கதையாக வகைப்படுத்தி அடுக்கிவைத்துக்கொள்கிறது? கால உணர்வு அதில் என்ன மாதிரியான பங்காற்றுகிறது? மனதுக்குள் சிக்காமல் ‘நான்’ என்ற இருப்பை எப்படி சுதந்திரமாக இயங்கவிடுவது? மனம் எப்படித் தன்னை சுயமாக நினைத்துக்கொண்டிருக்கிறது? மனதின் பார்வை என்பது அனுபவம் என்பதும் முற்ற முழுக்க உண்மையா? ஒவ்வொருவரின் பார்வைக்கோணம்தான் அவரவர் உலகங்களா?
எளிமையான மொழியில், படிக்கும்போது தெளிவாகத் தோன்றும் வகையில் மனித மனம் செயல்படும் விதம் குறித்த சில தெளிவுகளை ஆனந்த் உருவாக்குகிறார். வெளியில் தெரியும் உலகம் ஒன்று என்ற பொது எண்ணத்தைக் கேள்விக்குள்ளாக்கும் ஆசிரியர், இந்த உலகம் எண்ணற்ற மனிதர்களின் பார்வைக் கோணங்களால் எண்ணற்ற உலகங்களாகப் பிரிந்தது என்கிறார். ஒரு நிகழ்வு நடக்கும்போதே உண்மை. நடந்த பிறகு அது கதைகளாகப் பிரிந்து உண்மையற்றதாகிவிடுகிறது என்கிறார்.
மனம் என்பது வெறும் நினைவுக்கோப்புகளின் தொகுதியே என்பதையும் மனம் என்பதும், அது ஏற்படுத்தும் எண்ணங்களும் ‘நான்’ அல்ல என்பதையும் அவர் சொல்கிறார். மனம் என்பது கடலில் ஏற்படுத்தப்படும் அலைதான். மனமே கடல் அல்ல. கடலால், அலைகளை உற்றுப்பார்க்க முடியும். ஒரு ஆழத்தில் அலைகளையே இல்லாமல் ஆக்கி கடலால் மௌனமாக அதன் ஆனந்த துக்க தனிமையில் திளைக்க முடியும் என்பதைச் சில முறைப்பாடுகள் வழியாகக் காட்டிச் செல்கிறார் ஆனந்த்.
எல்லாரும் படிக்க இயலக்கூடிய, ஆனால் எல்லாருக்கும் தனி ரகசியமாக மாறிவிடும் சாத்தியம் கொண்ட நூல் இது. ஒரு வகையில் அமைப்புகள் வரையறை செய்திருக்கும், ஊடகங்கள் தமது நலனுக்காக தடுத்து வைத்திருக்கும், வர்த்தகங்கள் தடுத்துக் கொழித்துக்கொண்டிருக்கும் ‘நான்’ என்ற உயிரியற்கையைத் தேடுவதற்கான யுத்த நூல் இது.
மனிதனின் பரிணாம கதி முடியவில்லை. அவன் மீண்டும் தன் பிரக்ஞையில் பிறக்க வேண்டியிருக்கிறது என்பதை நினைவுபடுத்தும் நூல் இது.
-ஷங்கர்,
தொடர்புக்கு:sankararamasubramanian.p@thehindutamil.co.in