

வடஇந்தியாவில் நடைபெறும் எந்த இலக்கிய விழாவில் கலந்துகொண்டாலும் இன்றைய தமிழ் இலக்கியம் பற்றியோ தமிழ் எழுத்தாளர்கள் பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதைக் காண முடிகிறது.
அதுபோலவே இந்தி இலக்கியம்தான் இந்திய இலக்கியம் என்பது போன்ற பிம்பம் அவர்களால் உருவாக்கப்படுகிறது. அது உண்மையல்ல.
இந்திய இலக்கியம் என்று ஆங்கிலத்தில் எழுதப்படும் படைப்புகளை மட்டுமே ஆங்கில ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. அவர்களுக்குத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் இலக்கியம் வெறும் ‘ரீஜனல் லிட்ரேசர்’ மட்டுமே. இந்த இலக்கிய அரசியலைக் கவனத்தில் கொள்ளாமல், தேசத்தின் இலக்கிய வளர்ச்சியை மதிப்பீடுசெய்ய முடியாது.
எது இந்திய இலக்கியம்? சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் ஒருவர் எழுத்தாளராக, கவிஞராக அறியப்பட வேண்டும் என்றால், அவர் லண்டனில் படித்துத் திரும்பிய, வசதியான உயர்தட்டு வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். எளிய மனிதர்கள் எழுதினால் அங்கீகாரம் கிடைக்காது.
இலக்கியம் புனித பீடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலை மாறி சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும் எவரும் சுதந்திரமாக எழுத முடியும். அதற்கு வரவேற்பும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதே சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முக்கிய மாற்றம். ஆனால், எது இந்திய இலக்கியம் என்ற சர்ச்சை இன்று வரை ஓயவேயில்லை.
இந்திய இலக்கியம் என்பது பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களின் தொகுப்பாகும். இந்த உணர்வும் புரிதலும் சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில்தான் உருவாகின.
காலனிய ஆட்சியில் அச்சு இதழ்களின் பெருக்கத்தால் பொழுதுபோக்குக் கதைகள், நாவல்கள், நகைச்சுவைக் கட்டுரைகள் அதிகம் எழுதப்பட்டன. பிரிட்டிஷ் பாணியில் எழுதப்பட்ட துப்பறியும் கதைகளும் காதல் கதைகளும் தொடர்ந்து வெளியாகி, ரசனையில் புதிய மாற்றம் உருவானது. இதன் காரணமாக இலக்கிய வாசிப்பு ஒரு பிரிவாகவும், பொது வாசிப்பு மறுபிரிவாகவும் உருவானது. இந்த இரட்டை நிலை இன்றும் தொடரவே செய்கிறது.
சுதந்திரத்தால் உருவான கருத்தாக்கம்: சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமும் தனது இலக்கிய மரபு, பண்பாட்டு அடையாளங்கள், வரலாறு, சமகாலப் பிரச்சினைகள், சமூக மாற்றங்கள் ஆகியவை குறித்துப் பேசவும் எழுதவும் ஆரம்பித்தன.
நாடு முழுவதும் ஏற்பட்ட பொருளாதார, அறிவியல் முன்னேற்றம் இலக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நவீன இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியும் வெற்றியும் சுதந்திரத்திற்குப் பிறகான முக்கிய சாதனை.
இன்று பேசப்படும் தலித் இலக்கியம், பின்நவீனத்துவம், பின்காலனியத்துவம், பெண்ணியம், விளிம்புநிலை இலக்கியம், பரிசோதனை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகள், எழுத்துமுறைகள் கடந்த 75 ஆண்டுகளில் உருவானவையே.
இந்தியப் பிரிவினையும் அதனால் ஏற்பட்ட மதக்கலவரமும் வன்முறைகளும் இன்றும் இந்திய இலக்கியத்தின் முக்கியக் கருப்பொருளாக இருக்கின்றன. குறிப்பாக உருது, பஞ்சாபி, இந்தி இலக்கியங்களில் இந்த அம்சத்தைக் காண முடிகிறது. இந்த ஆண்டு புக்கர் பரிசுபெற்ற கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘Tomb of Sand’ நாவலும் பிரிவினையின் நினைவுகளையே பேசுகிறது.
நடுத்தர வாழ்க்கைச் சித்தரிப்பு: இந்திய இலக்கியத்தில் காந்தியின் பாதிப்பைத் தெளிவாகக் காண முடிகிறது. இன்று வரை காந்தி பேசுபொருளாகவே இருக்கிறார்.
காந்தியை மையமாகக்கொண்டு கதைகள், கவிதைகள், நாடகங்கள், ஆதரவு-எதிர்ப்பு என இரண்டு நிலைகளிலும் தொடர்ந்து எழுதப்பட்டுவருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய இலக்கியத்தில் படித்த, நடுத்தரவர்க்க வாழ்க்கை பற்றி அதிகம் எழுதப்பட்டிருக்கிறது.
அதுவரை இலக்கியத்தின் மையமாக விளங்கிய கிராம வாழ்க்கை, நிலப்பிரபுத்துவம் சார்ந்த எழுத்துகளிலிருந்து விலகி நகர்மயமாக்கம். மத்தியதர வாழ்க்கையின் நெருக்கடிகள், பெண் சுதந்திரம், பண்பாட்டுச் சிக்கல்கள், புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை எழுத்தில் இடம்பெறத் தொடங்கியது.
கடந்த ஐம்பதாண்டு கால இந்தியச் சிறுகதைகளை வாசிக்கும் எவராலும் இதனை வெளிப்படையாக உணர முடியும். மாறுபட்ட கதைக்களன்களுடன் கதைகூறும் முறையிலும், வடிவத்திலும் இந்தியச் சிறுகதை பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. அதில் தமிழ்ச் சிறுகதைக்குத் தனித்ததோர் இடம் உண்டு.
புதுக்கவிதையின் பாதிப்பு: காலனிய இந்தியாவில் மரபுக் கவிதையே முதன்மையாக எழுதப்பட்டு வந்தது. ஆங்கில சானட்டுகளைப் பின்பற்றி அப்படியே இந்தியக் கவிகளும் கவிதை எழுதினார்கள். புதுக்கவிதையின் வருகையும் வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் கவிதையின் போக்கைப் புதிய தடத்தில் பயணிக்கச் செய்திருக்கிறது.
நவீனக் கவிஞர்கள் இதுவரை கவிதை பேசாத கருப்பொருள்களை, மொழியைக் கையாளுகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களின் ஆயுதமாகவும் கவிதை மாறியிருக்கிறது.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நாடகம் முக்கியக் கலைவடிவமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்தை வளர்த்தெடுத்ததில் நாடகத்திற்கு முக்கியப் பங்கிருக்கிறது. ஆனால், சினிமாவின் வருகையும் திரையரங்குகள் பெருகியதும் நாடகத்தின் இடத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
நாடகத்தைப் பாடமாகக் கற்பிக்கவும் நவீன நாடகங்களை உருவாக்கவும் தேசிய நாடகப் பள்ளி உருவாக்கப்பட்டதுடன் பல்வேறு மாநிலங்களில் நாடகத் துறையும் நாடகப் பள்ளிகளும் உருவாகின.
இதன் காரணமாக நவீன நாடகம் என்ற புதிய கலைவடிவம் உருவானது. அதுவரை நாடகத்தின் கருப்பொருளாக இருந்த புராணம், பக்தி, தேசவிடுதலை சார்ந்த கதைகளுக்கு மாற்றாக நவீன வாழ்க்கையின் சிக்கல்கள், வரலாற்று நிகழ்வுகள், சமகால அரசியல் பிரச்சினைகள் நாடகமாகின.
சிறந்த மாற்றங்கள்: நாவல் என்பது ஐரோப்பிய இலக்கிய வடிவமாக இருந்தாலும் இந்திய நாவல்கள் தனக்கான தனித்த வடிவத்தை, கதையமைப்பை இயல்பாக உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு இந்திய மொழிகளிலும் நவீன நாவல் சிறப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
யதார்த்தவாத எழுத்திலிருந்து மேஜிகல் ரியலிச நாவல் வரை பல்வகையான நாவல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்கள் தங்களின் வாழ்க்கைத் துயரங்களை எழுதத் தொடங்கியதும், பெண்கள், திருநங்கைகள் தங்களின் உரிமைகளை, துயரங்களை நேரடியாகப் பதிவுசெய்ததும், பழங்குடி மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை வன்முறைகளுக்கு எதிராக எழுத ஆரம்பித்ததும், புதிய சிறார் இலக்கியங்கள் எழுதப்பட்டதும், வரலாற்றை மீள் ஆய்வுசெய்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், புதிய விமர்சன முறைகளும், புலம்பெயர் இலக்கியமும், இணையத்தின் வழியே உருவாகிவரும் புதிய படைப்புகளும் சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய இலக்கியத்தில் நடைபெற்ற சிறந்த மாற்றங்கள் என்பேன்.
- எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர், தொடர்புக்கு: writerramki@gmail.com