

உலக இலக்கியங்கள் மீது புதுமைப்பித்தனும் க.நா.சுப்ரமணியமும் கொண்டிருந்த ஆர்வமும் ஈடுபாடும் எல்லையற்றவை. ஒருவர் இந்திய விடுதலைக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர், விடுதலைக்கு அடுத்த காலத்தைச் சேர்ந்தவர்.
இருவருமே பசியையும் தூக்கத்தையும் மறந்து வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களைப் பற்றிய நினைவோடைக் குறிப்புகளை எழுதிய பல எழுத்தாளர்கள் இச்செய்தியையும் குறிப்பிட்டுள்ளனர். நல்ல இலக்கியங்களுக்கு வாசகர்களாக இருந்தது மட்டுமன்றி, அவற்றைத் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் அவர்கள் விளங்கினர்.
பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலப் படைப்புகளைத் தமிழில் தந்துகொண்டிருந்த காலத்தில் இவ்விருவரும் ஐரோப்பியப் படைப்புகளையும் ரஷ்யப் படைப்புகளையும் மொழிபெயர்த்து ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
க.நா.சு., புதுமைப்பித்தன் தந்தவை: ஆண்டன் செகாவ், அலெக்ஸாண்டர் குப்ரின், ஷோலகோவ், மக்சீம் கார்க்கி, மாப்பசான், அனடோல் பிரான்ஸ், வில்லியம் சரோயன், கால்ஸ்வொர்த்தி, காஃப்கா, ஜாக் லண்டன், தாமஸ் வுல்ஃப் போன்றோர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைப் புதுமைப்பித்தன் தமிழில் மொழிபெயர்த்தார்.
நோபல் பரிசு பெற்ற நார்வே நாட்டு எழுத்தாளரான நட்ஹாம்சன் எழுதிய ‘நிலவளம்’, ஸ்வீடனைச் சேர்ந்த பேர் லாகர்குஸ்ட் எழுதிய ‘அன்புவழி’, செல்மா லாகர்லெவ் எழுதிய ‘மதகுரு’, பிரெஞ்சு எழுத்தாளரான மார்ட்டின் துகார்ட் எழுதிய ‘தபால்காரன்’, ஜெர்மனைச் சேர்ந்த தாமஸ்மன் எழுதிய ‘மந்திரமலை’, போலந்து எழுத்தாளரான பிளடிஸ்லா ரொமான் எழுதிய ‘குடியானவர்கள்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்து அளித்தவர் க.நா.சுப்ரமணியம்.
அவை மட்டுமின்றி டால்ஸ்டாய், துர்கனேவ், தாமஸ்மன், தாஸ்தாயெவ்ஸ்கி, மாப்பசான், சார்லஸ் டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிற நாட்டு நாவலாசிரியர்களின் நாவல் சுருக்கங்களையும் வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். க.நா.சு.வைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புகளில் மிகப்பெரிய பங்காற்றியவர் நாவலாசிரியரான ஆர்.சண்முகசுந்தரம்.
சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத், தாகூர், விபூதிபூஷண் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி போன்ற வங்க மொழி நாவலாசிரியர்களின் படைப்புகளைத் தமிழில் அறிமுகப்படுத்தினார். ‘அபலையின் கண்ணீர்’, ‘அசலா’, ‘பதேர் பாஞ்சாலி’, ‘கவி’, ’பாடகி’, ‘தூய உள்ளம்’ ஆகியவை ஆர்.சண்முகசுந்தரத்தின் முக்கிய மொழிபெயர்ப்புகள்.
வங்க எழுத்துகளின் வருகை: வார இதழ்களில் தொடர்கதையாக வெளிவந்த மொழிபெயர்ப்பு நாவல்களால் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. புகழ்பெற்றார். இவர் இந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்றவர்.
மராத்தி எழுத்தாளரான காண்டேகருக்கு கா.ஸ்ரீ.ஸ்ரீ.யுடைய மொழிபெயர்ப்பு வழியாக ஒரு பெரிய வாசகத்திரளே தமிழ்நாட்டில் உருவானது. ஒருகட்டத்தில் காண்டேகரின் படைப்புகள் சொந்த மொழியான மராத்தியில் வெளிவரும் முன்னரே தமிழில் வெளிவந்தன. அந்த அளவுக்குக் காண்டேகர் வாசக ஆதரவு பெற்றிருந்தார்.
சுதந்திர காலத்தை ஒட்டி உருவான மற்றொரு முக்கியமான எழுத்தாளர் த.நா.குமாரஸ்வாமி. அவர் தன் சொந்த முயற்சியால் வங்கமொழியைக் கற்று ஓர் இலக்கியப் படைப்பை மொழிபெயர்க்கும் அளவுக்குத் தேர்ச்சியடைந்தார். வங்கமொழியின் முக்கிய ஆளுமைகளான தாகூர், பங்கிம் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, சரத்சந்திரர் ஆகியோருடைய படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.
‘கோரா’, ‘வினோதினி’, ‘சாருலதா’, ‘புயல்’, ‘லாவண்யா’, ‘சிதைந்த கூடு’, ‘சதுரங்கம்’, ‘ஆரோக்கிய நிகேதனம்’, ‘கமலினி’, ‘கவி’, ‘ஆனந்தமடம்’, ‘கிருஷ்ணகாந்தன்’, ‘விஷ விருட்சம்’ போன்ற மொழிபெயர்ப்புகள் த.நா.குமாரசாமி பெயர்த்தார். த.நா.குமாரசாமியின் சகோதரரான த.நா.சேனாபதியும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். ‘வனவாசி’, ‘இலட்சிய இந்து ஓட்டல்’, ‘கமலா’, ‘நாலு அத்தியாயம்’ போன்ற பல படைப்புகள் அவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்தன.
டால்ஸ்டாய்: ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய ‘War and Peace’ (போரும் வாழ்வும்) நாவலின் மூன்று பாகங்களையும் டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயர்த்தார். வெ.சந்தானம் ‘Anna Karenina’ (அன்னா கரீனினா) நாவலை மொழிபெயர்த்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் பலருக்குத் தூண்டுகோலாகவும் இருந்த திரிகூடன் என்பவரும் ‘War and Peace’ நாவலை மொழிபெயர்த்தார்.
இந்திய விடுதலைக்கு பின் மொழிபெயர்ப்புப் பணிகள் நிறுவனமயமாகத் தொடங்கின. சோவியத் ஒன்றியம் தொடங்கிய ராதுகா பதிப்பகம் எண்ணற்ற ரஷ்ய நாவல்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் அறிவியல் நூல்களையும் சிறார் நூல்களையும் அழகான செய்நேர்த்தியோடு குறைந்த விலையில் வெளியிட்டது. ரா.கிருஷ்ணையா, நா. முகமது ஷெரீப், நா.தர்மராஜன், பூ.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் அந்த மொழிபெயர்ப்புகளை செய்தவர்கள். தென்மொழிகள் புத்தக அறக்கட்டளை, பேர்ல் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் வழியாகவும் சில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின.
சமகால ஆக்கங்கள்: சாகித்ய அகாடமி கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் தமிழில் வெளியிட்ட அளவுக்கு அதிக மொழிபெயர்ப்புப் படைப்புகள் வேறெந்த மொழியிலும் வெளிவரவில்லை. சரஸ்வதி ராம்னாத், சித்தலிங்கையா, ஜகந்நாதராஜா, குறிஞ்சிவேலன், பானுமதி, தி.சு.சதாசிவம், இளம்பாரதி, புவனா நடராஜன், நிர்மால்யா, குளச்சல் மு.யூசுப், கே.வி.ஜெயஸ்ரீ, இந்திரன், இறையடியான், யூமா வாசுகி உள்ளிட்ட அனைவரும் விருதென்கிற கெளரவத்துக்கும் அப்பால், தமிழ்ச் சமூகத்தின் மதிப்புக்குத் தகுதியுள்ளவர்கள்.
1957 முதல் இயங்கிவரும் 'நேஷனல் புக் டிரஸ்ட்' நிறுவனம் ஆற்றிவரும் பங்களிப்பும் முக்கியமானது. இவ்விரு நிறுவனங்களும் தமிழில் வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்திருக்கும். கே.நல்லதம்பி, கே.வி.ஷைலஜா, எம்.கோபாலகிருஷ்னன், முகையூர் அசதா, அக்களூர் ரவி, சந்தியா நடராஜன், சிவ.முருகேசன் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
வரலாறு சார்ந்த மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் சந்தியா பதிப்பகமும் அரபு நாட்டு இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் சீர்மை பதிப்பகமும் தொடர்ச்சியாக ஆற்றிவரும் பங்களிப்பு தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது. காந்தியின் தன்வரலாற்று நூலான ‘சத்திய சோதனை’, ராகுல சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஆகிய நூல்களை முறையே ரா.வேங்கடராஜுலு, கண.முத்தையா ஆகிய இருவரும் மொழிபெயர்த்துள்ளார்கள்.
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு: பொ.ஆ. (கி.பி.) 2000-க்குப் பிறகு இந்திய மொழிகளில் எழுதப்படும் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் போக்கு தொடங்கியுள்ளது. கதா நிறுவனம் தொடர்ச்சியாக இந்தியச் சிறுகதைகளைத் திரட்டித் தொகுதிகளாக வெளியிட்டுவருகின்றன.
திலீப்குமார், ஜெயந்தி சங்கர் போன்றோரின் தனிப்பட்ட முயற்சியாலும் தமிழ்ச் சிறுகதைகளின் தொகைநூல்கள் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளன. அசோகமித்திரனின் பல தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்.கல்யாணராமன். அனிருத்தன் வாசுதேவன், ஜனனி கண்ணன், நந்தினி கிருஷ்ணன் போன்றோர் பெருமாள் முருகனின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளனர். ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பை ப்ரியம்வதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
உலக மேடைக்குத் தமிழைக் கொண்டுசெல்ல வேண்டிய தேவை இன்றைக்கு உருவாகிவருகிறது. வணிகச் சந்தையும் வாசகர் அதிகரிப்பும் இந்தச் சாதகமான சூழலை உருவாக்கியிருக்கின்றன.
ஆங்கில மனம் மிக இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் கச்சிதமாகவும் கூர்மையாகவும் நிறைவளிக்கும் வகையிலும் மொழியைப் பயன்படுத்தத் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் அதிக அளவில் உருவாகி வரவேண்டும். மொழிபெயர்ப்பின் அடுத்தகட்ட வளர்ச்சியும் சாதனையும் அவர்கள் வழியாகவே நிகழ வேண்டும்.
- பாவண்ணன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: paavannan@hotmail.com