மக்கள் கவிஞருக்கு வாழ்த்துகள்!

மக்கள் கவிஞருக்கு வாழ்த்துகள்!
Updated on
1 min read

பாடலாசிரியரும் பாப் இசைக் கலைஞருமான பாப் டிலனுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோபல் இலக்கியப் பரிசின் வரலாற்றில் ஒரு இசைக் கலைஞருக்குப் பரிசு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் டலூத்தில் 1941-ல் பிறந்த டிலனின் இயற்பெயர் ராபர்ட் ஆலன் ஸிம்மெர்மேன்; அமெரிக்கக் கவிஞர் டிலன் தாமஸ் மீதுள்ள ஈர்ப்பால் தனது பெயரை டிலன் என்று மாற்றிக்கொண்டார். சிறு வயதிலேயே இசை மீது ஈடுபாடு கொண்டிருந்த டிலன் பள்ளிப் பருவத்தில் இசைக் குழுக்களில் தன்னை ஒன்றிணைத்துக்

கொண்டார். 1961-ல் நியூயார்க்குக்கு இடம்பெயர்ந்தார். 1962-ல் அவரது முதல் இசைத் தொகுப்பான

‘பாப் டிலன்’ வெளியானது. 1966-ல் வெளியான ‘பிளாண்ட் ஆன் பிளாண்ட்’ இசைத் தொகுப்பு அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது.

போர் எதிர்ப்பு, மக்கள் பிரச்சினைகள்

உள்ளிட்டவற்றைத் தன் பாடல் வரிகளில் பேசியதாலும் அமெரிக்க நாட்டுப்புற இசை, கவிதைகளின் தாக்கத்தைத் தனது பாடல்களில் வெளிப்படுத்தியதாலும் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்கிக்கொண்டவர் டிலன்.

எப்போதும் போலவே இப்போதும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது நோபல் இலக்கியப் பரிசு. “டிலன் இலக்கியவாதி அல்ல” என்று பலரும் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதே நேரத்தில், சல்மான் ருஷ்தி, ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் உள்ளிட்ட இலக்கிய மேதைகள் பலரும் டிலன் தேர்வை வரவேற்றுள்ளனர். “சிறு வயதில் டிலனின் பாடல்களைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து என் வாழ்க்கை முழுவதுமே டிலன் எனக்குப் பெரும் உத்வேகமளிப்பவராக இருக்கிறார்… இலக்கியத்தின் எல்லைகள் விரிவடைந்துகொண்டிருக்கின்றன. அதை நோபல் பரிசுக் குழுவினர் அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் சல்மான் ருஷ்தி. “2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமர், சஃபோ போன்ற பெருங்கவிஞர்கள் எழுதியவற்றை நாம் இப்போதும் படித்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் படைப்புகளெல்லாம் இசையுடன் சேர்ந்து நிகழ்த்துவதற்காக எழுதப்பட்டவையே; டிலனும் அப்படியே” என்று சொல்லியிருக்கிறார் சுவீடன் அகாதமியின் நிரந்தரச் செயலரான சாரா டேனியஸ்.

மக்களைப் பொறுத்த அளவில் அவர்கள் எப்போதும்போல டிலனைக் கொண்டாடுகிறார்கள். மக்கள் கவிஞருக்கு வாழ்த்துகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in