

சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கத்துக்கு அனைத்துத் துறைகளிலும் தமிழ் வளர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக 1946ஆம் ஆண்டில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலத்திலுள்ள Encyclopaedia போன்று தமிழிலும் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதையே இக்கழகம் முதன்மைப் பணியாக மேற்கொண்டது.
இந்திய விடுதலை நாளில் (15.08.1947) இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்திற்கு 14 லட்சம் ரூபாய் செலவாகுமென மதிப்பிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எம்.அழகப்பர், எம்.ஏ.முத்தையா, கருமுத்து தியாகராயர் போன்றோர் நிதியுதவி அளிக்க முன்வந்தனர். தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பதி தேவஸ்தானம் போன்ற அமைப்புகளும் இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்தன. மத்திய நிதி அமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம், ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் வீதம் நான்காண்டுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்தார்.
கலைக்களஞ்சியப் பணிகளுக்காகச் செயற்குழு, பதிப்பாளர் குழு, அலுவலர் குழு, பொருட்பட்டி அமைப்புக் குழு, ஆய்வுக் குழு, கலைச்சொல் குழு எனப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏ.எல்., மு.வரதராசனார், ரா.பி.சேது, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், டி.கே.சிதம்பரநாதர், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி எனப் பலர் இக்குழுக்களில் இடம்பெற்றனர். கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கு முன்பே அப்பணி குறித்த தெளிவான திட்டமிடல் இக்குழுவிடம் இருந்தது.
பத்துத் தொகுதிகளாகக் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட வேண்டும்; ஒவ்வொரு தொகுதியும் ஏறக்குறைய 750 பக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்; பொது மக்களுக்கு நன்கு விளங்க வேண்டும் என்பதால் நான்கில் ஒரு பகுதி படங்கள் அமைய வேண்டும்; தேவையான இடங்களில் வண்ணப் படங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டனர். அச்சிடப்படும் தாளின் தரம், எழுத்துருக்கள், மொழிநடை, வாக்கிய அமைப்பு, கலைக்களஞ்சியத்தில் இடம்பெற வேண்டிய சொற்கள் என ஒவ்வொன்றையும் கூடுதல் கவனத்துடன் செய்தனர்.
கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி 1954ஆம் ஆண்டு 742 பக்கங்களுடன் வெளிவந்தது. அடுத்த ஆண்டே இதன் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. இதனிடையே, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராக இருந்த கல்கி உடல்நலக் குறைவின் காரணமாக (டிசம்பர் 5, 1954) இறந்துவிட்டார். அதனால் இரண்டாம் தொகுதி அவரது நினைவாக வெளியிடப்படுவதாக தி.சு.அவினாசிலிங்கம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். 1956இல் அதற்கடுத்த இரு தொகுதிகளும் வெளியாயின. இப்படியாக, ஒன்பது தொகுதிகள் 1963ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்பட்டன. இதில் ஐந்தாம் தொகுதியை (1958) அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்துள்ளார்.
கலைக்களஞ்சியத்தின் பத்தாவது தொகுதி இணைப்புத் தொகுதியாக 1968இல் வெளிவந்துள்ளது. முதல் ஒன்பது தொகுதிகளில் விடுபட்ட சொற்கள், பத்து தொகுதிகளுக்குமான பொருட்குறிப்பு அகராதி ஆகியன இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
தமிழின் ஒப்பற்ற ஆக்கமான இக்கலைக்களஞ்சியம் ஏன் இதுவரை மறுபதிப்புகூடச் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
> இது, கலை இலக்கிய விமர்சகர் சுப்பிரமணி இரமேஷ் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்