

நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு பெயர் வண்ணதாசன். ஐம்பதாண்டுக் காலமாகத் தொடர்ந்து எழுதிவருபவர். கல்யாண்ஜி என்னும் பெயரில் தமிழ்க் கவிதை உலகிலும் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர்.
1970களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனின் இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதுமைப்பித்தனைத் தொடர்ந்து எழுத வந்தவர்கள் ஒரு கிளை என்றால் அதன் மற்றொரு கிளையில் தளிர்த்து வந்தவர் வண்ணதாசன். தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கு.ப. ராஜகோபாலனின் வழிவந்தவர் என வண்ணதாசனைக் குறிப்பிடலாம். அதாவது புறக் காட்சிகளைப் பிரதானமாகக் கொண்ட கதைகளிலிருந்து மாறுபட்டு, உறவுகளுக்குள்ளான அம்சங்களைக் களமாகக் கொண்ட கதைகளை எழுதிய மரபைச் சேர்ந்தவர். கு.ப.ரா., தி. ஜானகி ராமன் ஆகிய எழுத்தாளர்களை வண்ணதாசனின் முன்னோடிகளாகக் கொள்ளலாம்.
வண்ணதாசன் ஓவியக் கலையில் ஆர்வம் உள்ளவர். கலாப்ரியா, வண்ணநிலவன், பூமணி போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அட்டை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அவரது கதைகளும் கவிதைகளும் ஓவியத் தின் நீட்சி என்றும்கூடச் சொல்லலாம். கதை களில் மனிதர்களை, காட்சிகளை உருவாக்கும் போது ஒரு ஓவியருக்குரிய ஆற்றல் வண்ண தாசனின் எழுத்துக்கு வந்துவிடும். அவருக்குள் இருக்கும் ஓவியர், காட்சிகளின் மூலைமுடுக் கெல்லாம் பயணித்துக் கதையை உயிர்ப்புள்ள சித்திரங்களாக மாற்றிவிடுகிறார். இந்த நுண்சித் தரிப்பு வண்ணதாசனிடத்தில் முன்னிறுத்திக் காட்டக்கூடிய சிறப்பான அம்சம். தமிழின் முக்கிய மான விமர்சகரும் எழுத்தாளருமான ஜெயமோக னும் இதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
ஆண் பெண் உறவுகளைச் சித்தரிப்பது வண்ணதாசன் கதைகளில் பிரதான அம்சமாகத் தொழிற்படுகிறது. அப்படிச் சித்தரிக்கும்போது அவர்களின் தனித்துவமான முகச் சாடைகளையும் சப்தங்களையும்கூட உணர்ச்சிகளுடன் எழுப்பிக்காட்டக்கூடிய அபூர்வமான குணம் அவரது எழுத்துக்குண்டு. மனிதப் பற்று நலிந்துவரும் இன்றைய சூழலில் மனிதத்துவத்தின் மீதான நம்பிக்கையைத் தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்திவருபவர் வண்ணதாசன்.
சிறுகதை என்னும் வடிவத்துக்கு முன்மாதிரி யான சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தவர் எனப் புதுமைப்பித்தனை முன்னிறுத்துவதுண்டு. அதற்கடுத்தபடியாக, மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் முன்மாதிரியான சிறுகதைகளை உருவாக்கியவர் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
- மண்குதிரை
கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி ஆகிய வண்ணதாசனின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்புகள், சந்தியா பதிப்பக வெளியீடாகவும் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆழி வெளியீடாகவும் வந்துள்ளன.