

மதுரையைச் சுல்தான்கள் ஆட்சியிலிருந்து விடுவிக்க வந்த மாமணி என குமார கம்பணன் வர்ணிக்கப்படுவது உண்டு. விஜய நகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பணனின் வீரத்துக்கும் வெற்றிக்குமான ஆதாரம், அவரது மனைவியருள் ஒருவரான கங்கதேவி சமஸ் கிருதத்தில் எழுதிய குமார கம்பணனின் ‘மதுரா விஜயம்' நூல். ஆனால், இந்த நூலுக்கும் நிஜத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நூலாசிரியர் செ.திவான் விரித்துக் காட்டுகிறார்.
இந்துக்களுக்கு ஆட்சியை நிலைநாட்டுவதுதான் குறிக்கோள் என்றால், தொண்டை மண்டலத்தை ஆண்ட சம்புவரையரை வீழ்த்தியது எதனால் எனக் கேள்வி எழுப்புகிறார் திவான். மேலும், தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி 8 ஆண்டுகள் கழித்துத்தான் குமார கம்பணன் மதுரையை முற்றுகையிடுகிறார் என்ற வரலாற்றுத் தகவல்களையும் சுட்டிக்காட்டுகிறார். மதுரா விஜயத்தைக் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார் திவான். வரலாற்று ஆர்வலர்களுக்கு நல்ல விறுவிறுப்பு தரும் நூல் இது.
மதுரா விஜயம்
வரலாற்றாசிரியர் செ.திவான்
வெளியீடு: ரெகான் - ரய்யா பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 0462 2572665
- ஜெய்
கிராவின் எடக்குகள்
எழுத்தாளர் கி.ராஜ நாராயணன், தன் கடிதங்களுக்காகப் பேர்பெற்றவர். கிராமத்து வெள்ளந்தித்தனமும் கிண்டலும் அவர் எழுத்துகளைப் படிக்கும் வாசகர்களுக்கு ஈர்ப்பை அளிக்கும்.
நாட்குறிப்பு எழுதும் பழக்கமெல்லாம் தனக்கு இருந்ததில்லை என்று தொடங்கி எழுதப்பட்டுள்ள நாட்குறிப்புகள் பற்றிய முதற்கட்டுரை அவ்வளவு சுவாரசியம். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் கிராவின் ‘எடக்கு’ வெளிப்படுகிறது.
எது தமிழின் முதல் நாவல் என்ற சர்ச்சையில் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் ‘ஆதியூர் அவதான சரித்திரம்’ என்னும் நூலை முன்மொழிகிறார். ஆனால், இது கவிதை நூலாகும். அதனால் என்ன? கவிதை வடிவிலான நூலாக இருந்தாலும் அதுதான் முதல் தமிழ் நாவல் என நிறுவ முயலப்பட்டது.
கிரா தன் பாணியில் இளங்கோ அடிகளை முதல் நாவலாசிரியர் எனச் சொல்கிறார். ஆங்கிலத்தில் நடந்துவந்த சாகித்ய அகாடமி தமிழ்க் கிளைக் கூட்டத்தைத் தமிழில் நடத்த கிரா, அன்றைய சாகித்ய அகாடமி செயலாளராக இருந்த கே.சச்சிதானந்தனிடம் பேசியது பற்றிய ஒரு பதிவும் இதில் உள்ளது.
கி.ரா நாட்குறிப்பிலிருந்து...
கி.ராஜநாராயணன்
வெளியீடு:
அகரம், தஞ்சாவூர்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 75983 06030
- வா.ரவிக்குமார்
உள்ளூர் முதல் உலக சினிமா வரை
சமூகத்தின் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. அது அவரவர்களுக்கான நியாயங்களுக்கு உட்பட்டது. அப்படித்தான், தான் சந்தித்த, தனக்கு நேர்ந்த, அனுபவித்த, ஆச்சரியப்பட்ட விஷயங்களை ஒரு ரசிகனின், விமர்சகனின், சாமானியனின் பார்வையில் இந்த நூலில் கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் அப்சல். பாலிவுட் நட்சத்திரம் தர்மேந்திரா, அப்சலுக்கு அனுப்பிய வாழ்த்து வீடியோ ஆச்சரியம்.
தர்மேந்திராவின் ரசிகராக, அவர் பற்றி புத்தகம் எழுதியது, எதிர்பாராத நேரத்தில் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, திடீரென போனில் பேசியது என விரியும் நட்பை, அப்சல் எழுதும்போது அவரைப் போலவே நமக்கும் வியப்பு. இயக்குநர் அம்ஷன் குமார், எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் நீண்ட நேர்காணல்கள் எனச் சுவாரஸ்யமான கலவையாக இருக்கிறது, இந்தப் புத்தகம்.
புதிய நகரில் ஒரு பழைய மனிதன்
அப்சல்
விலை: ரூ.300
ஹார்சென்ஸ் பதிப்பகம்
தொடர்புக்கு: 63807 98360
- ஏக்நாத்
சிறைச்சாலை அனுபவங்கள்
மதுரை நம்பி எழுதியுள்ள ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ புத்தகம் சிறைச்சாலையின் பரந்துபட்ட பார்வையை வாசிப்பவர்களுக்குத் தருகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சம்பவமும் ஒரு திரைப்படத்துக்கு நிகரான விறுவிறுப்பான நடையுடன் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இடதுசாரி ஆதரவாளரான மதுரை நம்பி, தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் 40 ஆண்டு காலம் சிறைக் காவலராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
காவல் பணியில் இருந்தபோது சிறையில் தான் சந்தித்த பிரபலங்கள், எளிய மனிதர்கள் அவர்களின் சிறை அனுபவங்கள் என்று விரிந்துகொண்டே ஒரு பரபரப்பான சிறுகதையைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. இவரது எழுத்து. பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு 80-களில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய ஆட்டோ சங்கர், அவரது கூட்டாளியின் மரண தண்டனை விவரிப்பு, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி அப்போது விசாரணைக் கைதிகளாக இருந்த முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் சிறை நடத்தைகள், திரைப்படங்களில் வந்த கதை மாந்தர்களின் நிஜ வாழ்வு என்று விரித்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் சிறப்பு.
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
மதுரை நம்பி
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.330
தொடர்புக்கு: 99404 46650
- ரா.மனோஜ்
மார்க்சியத்தின் வழிநின்று...
சமீபத்தில் காலமான பன்முக மார்க்சியச் சிந்தனையாளர் அய்ஜாஸ் அஹ்மத்துடன் (1941-2022) பேராசிரியர் விஜய் பிரசாத் நடத்திய நீண்ட உரையாடல் இந்த நூல். மார்க்சியத் தத்துவத்தின் வழிநின்று உலக நிகழ்வுகளை, உரிமைப் போராட்டங்களை, இடதுசாரி இயக்கங்களின் சாதக-பாதக அம்சங்களை அலசுவதில் தன்னிகரற்ற சிந்தனையாளராக அய்ஜாஸ் அஹ்மத் செயல்பட்டார்.
உலகின் வரலாறு, சமூகவியல் பற்றிய அய்ஜாஸின் தெளிவான பரந்த வாசிப்பு, நீண்ட வரலாற்றின் முரண்பாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள நமது புதிய காலத்திற்குத் தேவையான உலகளாவியச் சூழலை வழங்கும் சிந்தனைகளைத் தன் கேள்விகளின் வழி விஜய் பிரசாத் கைப்பற்றியுள்ளார்.
மார்க்ஸ் 1865-ல் தனது குழந்தைகளுக்காக எழுதிய ‘ஒப்புதல்க’ளில் (Confessions) இடம்பெற்றிருக்கும் Nothing Human is Alien to Me என்ற வரி, அய்ஜாஸ் அஹ்மத்தின் வாழ்க்கை, நூல்கள், கருத்துகளின் சாரமாக அமைந்துள்ள இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பாக அமைந்துள்ளது.
மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல
அய்ஜாஸ் அஹ்மத், விஜய் பிரசாத்
தமிழில்: ராஜசங்கீதன்,
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
விலை: ரூ.260
தொடர்புக்கு: 044 24332924
- அபி