

கூர்மையாகப் பார்த்தல், நுட்பமாகச் சிந்தித்தல், மொழியின் பன்முகப்பட்ட நிழல் தடங்களைக் கைப்பற்றுதல் ஆகிய மூன்றும் ஒரு மனிதனுக்குள் ஒன்றாய்க் கூடிக்கலந்து, மனித உடம்பின் உச்சபட்ச உற்பத்தி எனக் கருதத்தக்க உணர்ச்சியான கருணைக் கடலுக்குள் கடைபடும்போது, கவிதை என்கிற அமிழ்தம் பிறப்பெடுக்கிறது.
ஆழியாளின் கவிதைகள் பலவும் இவ்வாறுதான் பிறக்கின்றன என்று கருதத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு மொழியாலான அமிர்தமாய் இவர் கவிதைகள் திரண்டுள்ளன. ஆழியாளின் ‘நெடுமரங்களாய் வாழ்தல்’ தொகுப்பிலும் இந்த அம்சம் வெளிப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் சிக்கனமான மொழியால் படிமம், குறியீடு, குறி, தொனி ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. தன்னைச் சுற்றி இயற்கை நிகழ்த்திக் காட்டும் விதவிதமான காட்சிகளைத் தனது கவிதை ஆக்கத்திற்கு அடியுரமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். இயற்கை உரமாக இருப்பதால் கவிதைச் செடிகள் தளதளவென்று வளர்ந்து பூத்துக்குலுங்குகின்றன; கண்கொள்ளாக் காட்சியாக நமக்குள் பன்முகமாக விரிகின்றன.
இருபத்தைந்து கவிதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதல் கவிதையின் தலைப்பு, ‘உப்பு’. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்லத்தக்க உப்பை வழங்கும் கடலெனும் பிரம்மாண்டம் குறித்துப் பலவாறு மொழி ஆடுகிறார். உப்பை மட்டுமா வழங்குகிறது, அழகான கடற்கரை, கரைகளை ஆரத்தழுவும் அலைகள், அக்கரைகளுக்கு வெண்முத்துச் சங்கிலிகளை அணிவிக்கும் அதன் நுரைகள், சோதிச் செம்பிழம்பாக ஒளி கூட்டும் மாலைப் பொழுது, அங்கே ஒலிக்கும் சிறு பறவைகளின் சிறகடிப்பு என்று பலவாறு மனிதர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது கடல். எங்கும் எப்போதும் எந்தக் கடலாவது மேற்கண்டவற்றை வழங்காமல் மறந்துபோய் இருக்கிறதா என்று கேட்கிறவர், சட்டென ‘எந்தத் தாய்/தன் குழந்தைகளைப்/போருக்காகப் பெற்றெடுக்கிறாள்?’ என்று கவிதையை முடிக்கிறார்.
இந்தப் போர் குறித்துக் கவிஞரின் உள்ளம் ஓயாது உலைவதைப் பல கவிதைகளில் பதிவுசெய்துள்ளார். ‘காத்திருப்பு’ என்ற கவிதையில் நிதி அமைச்சரும் ராணுவத் தளபதியும் சேர்ந்துகொண்டு இளைஞர்களின் திரண்ட தோள்களையும் நாடித்துடிப்பையும் உயிர்ச்சூட்டையும் கணக்கெடுத்துப் போருக்கு அனுப்பிக் கருகச்செய்கிறார்கள் என்பதைத் காட்டுவதோடு, இத்தகைய அரச பயங்கரவாதிகளும் மதவாதிகளும் ஒன்று சேர்ந்து கைகோத்து நடத்தும் கொடூரங்களையும் பதிவுசெய்கிறார். போரில் கொல்லப்பட்டவர்களை மாவீரர் என்றும் தியாகிகள் என்றும் புனைந்து புனிதப்படுத்தும் ஏமாற்று வேலைகளை உடைத்துக் காட்டுகிறார்.
‘செங்கம்பளம்’ என்ற கவிதையில் சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அரச பயங்கரவாதம், தொன்மையான கலைச்சின்னங்கள் நிறைந்த அலெப்போ நகரத்தைத் தீச்சுவாலைகளால் எரித்த வரலாற்றைப் பதிவுசெய்ததைக் குறிப்பிட்டுக் கவிதையை இப்படி முடிக்கிறார்: ‘அலெப்போ/ஆறாக் கங்குகளின்/மனக் கிடங்காயிற்று/ஓ.../முள்ளிவாய்க்காலாயிற்று/அலெப்போ.
இவ்வாறு கவிதைக்குள் பலவாறு பயணிப்பதற்கு இன்னும் ஏராளம் இடம் இருக்கிறது. ஆழியாள், தனக்குள்ளும் தான் சார்ந்த சமூக நடப்புக்குள்ளும் சுற்றிக்கிடக்கும் இயற்கைக்குள்ளும் விழித்திருந்து உரையாடுகிறவராக விளங்குவதால், அவர் கவிதைகள் தனக்கான தனித்துவத்தையும் கவித்துவத்தையும் தக்கவைத்துக் கொள்கின்றன.
நெடுமரங்களாய் வாழ்தல்
ஆழியாள்
அணங்கு பெண்ணியப் பதிப்பகம்,
புதுச்சேரி.
விலை: ரூ.66
தொடர்புக்கு: 95993 29181
- க.பஞ்சாங்கம், தமிழ்ப் பேராசிரியர்,தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in