

நகலிசைக் கலைஞன்
ஜான் சுந்தர்,
விலை: ரூ.130
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
-9677778863
இசையுலகப் பிரஜைகள் தொடர்பான பதிவுகள் தமிழில் குறைவு. இந்தச் சூழலில் ‘ஆர்க்கெஸ்ட்ரா’ கலைஞர்கள் என்று அழைக்கப்படும் மேடை இசைக் கலைஞர்கள் பற்றிய பதிவாக வெளியாகியிருக்கிறது இந்நூல். மேடை இசைக் கலைஞரும் கவிஞருமான ஜான் சுந்தர், சக இசைக் கலைஞர்களின் வாழ்வு, இசைப் புலமை, நகைச்சுவையுணர்வு, பலவீனங்கள் என்று பல விஷயங்களை இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். பல இடங்களில் ஆசிரியரின் திரையிசை ரசனை நுட்பமாக வெளிப்படுகிறது.
ஆச்சி மனோரமா
குன்றில் குமார்,
விலை: ரூ. 200
வெளியீடு: சங்கர் பதிப்பகம், சென்னை 49
044-26502086
திரைச் சாதனையாளர்களுள் ஒருவரான மனோரமாவின் வாழ்க்கைப் பதிவு இந்நூல். இளம் வயதில் அவர் எதிர்கொண்ட வறுமை நிலை தொடங்கி, திரையுலகில் அவர் எதிர்கொண்ட சவால்கள் வரை பல சம்பவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. படப்பிடிப்புகளின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களும், அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளும் இவற்றில் அடக்கம். தேர்தல் பிரச்சாரத்தின்போது ரஜினியை விமர்சித்து மனோரமா பேசியதன் பின்விளைவுகள் உட்பட பல்வேறு சம்பவங்களையும் ஆசிரியர் மறக்காமல் எழுதியிருக்கிறார்.
வளர்பிறைகளும் தேய்பிறைகளும்
கழனியூரன்
விலை: ரூ.100
வெளியீடு:
நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை 17.
044-28343385.
நாட்டார் வழக்காற்றியலில் தொடர்ந்து இயங்கிவரும் கழனியூரன் எழுதியிருக்கும் முதல் நாவல் இது. இலங்கையில் வணிகம் செய்து திரும்பிய பெரிய மைதீன் எனும் செல்வந்தரின் அடுத்தடுத்த தலைமுறை எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களைச் சொல்லும் கதை. வாழ்ந்து கெட்ட குடும்பம், அதைப் பற்றிய ‘ரகசியக் கதைகள்’, நம்பிக்கைத் துரோகங்கள் என்று மனித வாழ்வின் கனத்த பக்கங்களை இயல்பான மொழியில் ஆர்ப்பாட்டமில்லாமல் எழுதியிருக்கிறார் கழனியூரன்.
புத்தாக்க வாழ்வியல் கல்வி
தொகுப்பாசிரியர்: டேல் எம். பெத்தேல்
தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி
விலை: ரூ. 70
நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை - 06
044-28252663
ஜப்பானியக் கல்வியமைப்பை விமர்சித்த கல்விச் சிந்தனையாளர் சுனேஸபுரோ மகிகுச்சி, ‘மதிப்பு மிக்க கல்விச் சங்கம்’ அமைப்பை உருவாக்கியவர். ராணுவ ஆட்சியை விமர்சித்ததால் சிறையில் அடைக்கப்பட்ட அவருடைய கல்விச் சிந்தனையே இந்நூல். கல்வி, மாணவர்களின் வாழ்க்கையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டும், கல்வியில் உடல் உழைப்பு முக்கிய பாகமாக வேண்டும் என்ற அவருடைய கொள்கையை இந்த நூல் பேசுகிறது.
ஈழத்தில் தமிழ் இலக்கியம்
கார்த்திகேசு சிவத்தம்பி
விலை: ரூ. 240
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98
044 26251968
ஈழத்து இலக்கிய விமர்சகர்களில் முதன்மையான இருவரில் ஒருவரான கார்த்திகேசு சிவத்தம்பியின் இந்த நூல், இலங்கையில் 1948-க்குப் பிறகு புதிதாக அடையாளம் காணப்பட்ட தமிழ் இலக்கிய மரபைப் பற்றிப் பேசுகிறது. அங்கு உருவான முற்போக்கு இலக்கிய முயற்சிகளையும் அதற்கான பின்னணியையும் விவரிக்கும் இந்த நூல், தனி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர்த்திருக்கிறது. ‘சரித்திரம் என்பது சாகாத் தொடர்கதை’ என்கிற அவரது சொற்களே இந்நூலை வரையறுக்கின்றன.
இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்கள்,
ஜே.எம்.சாலி,
விலை: ரூ.150
வெளியீடு: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17.
044-2834 3385
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் படைப்புகளைப் பற்றிய நூல் இது. உமறுப் புலவரின் சீறாப் புராணம் தொடங்கி, புதுகுஷ்ஷாம், குத்பு நாயகம் என்று பத்துக்கும் மேற்பட்ட காவியங்களைப் பற்றி இந்நூல் பேசுகிறது. நபிகளின் வாழ்க்கை, அரேபியச் சூழல் போன்றவற்றை வெளிப்படுத்தும் இ்க்காவியங்களில், தமிழ்ப் பண்பாடும் கலந்திருப்பது, சீறாப் புராணம் முற்றுப்பெறாத நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘சின்ன சீறா’ காவியத்தை மூன்று புலவர்கள் இயற்றியது போன்ற தகவல்களும் நூலில் உண்டு.