Published : 22 Oct 2016 10:36 AM
Last Updated : 22 Oct 2016 10:36 AM

நூல் நோக்கு: பெருங்கனவுகளின் சிறை உலகம்

புன்னகை போன்ற இயல்பான எழுத்து

பாஸ்கர் சக்தியின் எழுத்துகள் மிகவும் இயல்பானவை. நமக்குத் தெரிந்த, நம் பக்கத்தில் இருக்கிற, நம்மைப் போன்ற எளிமையான மனிதர்கள்தான் இவரின் படைப்புலகில் நடமாடுகிறார்கள்.

இவரின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு 'முயல் தோப்பு'. மொத்தம் 12 கதைகள், பின்னுரையையும் சேர்த்து. அது ஒரு கட்டுரை என்று நாம் கடந்துவிட முடியாதபடி, நிறைய கதைகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. எல்லா கதைகளும் 'ஆனந்த விகட’னில் வெளியானவை. அவற்றைத் தொகுத்திருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ். 'நான் நம்பரை எல்லாம் மாத்த மாட்டேன். மெம்பரை மாத்திருவேன்' என்ற வரியில் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி தெரிகிறார் என்றால், 'இங்கிலீஷில் எக்ஸைட்டட் என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். தமிழில் நிறைய வார்த்தைகள் தேவைப்படுகின்றன என்று ஒரு சப் எடிட்டர் யோசனை மனதுக்குள் ஓட அவளிடம் சென்றான்' என்ற வரியில் பத்திரிகையாளர் பாஸ்கர் சக்தி தெரிகிறார்.

அவரே சொல்வதுபோல இந்தக் கதைகளை 'சுயவிமர்சனம்' என்று சொல்லலாம். ஆம், ஒவ்வொரு கதைகளைப் படித்து முடித்தபின் விசும்பலோ புன்னகையோ உங்களிடமும் தோன்றினால், உங்களுக்கும் அந்த விமர்சனம் பொருந்தலாம்.

-ந.வினோத் குமார்

என் வீட்டிற்கா நீ மந்திரி?

காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மஜூத்… விருதுநகரிலுள்ள காமராஜரின் வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் போனார். அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாவைச் சந்தித்தார். காமராஜரின் தங்கை நாகம்மாள்… தண்ணீர் பிடிக்க தெருவிற்கு போயிருப்பதாக சிவகாமி அம்மாள் கூறினார்.

“வீட்டில் தண்ணீர்க் குழாய் இணைப்பு இல்லையா?” என ஆச்சரியப்பட்ட அமைச்சர்… 24 மணி நேரத்தில் காமராஜரின் வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தார்.

இதைக் கேள்விப்பட்ட காமராஜர், மஜூத் சென்னை திரும்பியதும், “உங்களை நாட்டுக்கு மந்திரியாக இருக்கச் சொல்லியிருக்கிறேனா? இல்லை, என்னுடைய வீட்டிற்கு மந்திரியாக இருக்கச் சொல்லியிருக்கிறேனா? விண்ணப்பம் செய்யாத நிலையில் குடிநீர் இணைப்புக் கொடுத்தது அதிகார துஷ்பிரயோகமில்லையா?” என்ற காமராஜர் விருதுநகரில் தனது வீட்டிற்குப் புதிதாகப் போடப்பட்ட குடி நீர் இணைப்பைத் துண்டித்தார்!

புத்தகத்திலிருந்து ஒரு பதிவு

பெருங்கனவுகளின் சிறை உலகம்

சல்மாவின் முதல் நாவலான ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’யின் சொல்லப்படாத தொடர்ச்சி என்று இந்த நாவலைச் சொல்லலாம். மனாமியம் என்ற அரபிச் சொல்லுக்குத் தூக்கம் என்று அர்த்தம். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் அண்டை மாவட்டங்களிலும் முஸ்லிம் பெண்கள் மீது இன்னமும் சுமத்தப்படும் சமூக ஒழுங்கு சார்ந்த கருதுகோள்கள் குறித்த விமர்சனமும் இன்னும் அறியப்படாத அவர்களது மனவேதனைகளும் நாவலில் விரிகின்றன.

இஸ்லாமியப் பெண்களின் துயர் சுழலும் விசனவெளியில் குடும்ப வலைப்பின்னலாகக் கதை நகர்கிறது. இளவயதுத் திருமணம், வரதட்சணை, உடை, சொத்துரிமை, ஆண் பெண் உறவு முறை, வீட்டில் சகஜமற்ற தன்மை, கல்வி-வேலை உரிமை பறிப்பு போன்ற பல விவகாரங்கள் இந்த நாவலை அதன் மையம் நோக்கிய கேள்விகளாக நகர்த்துகின்றன. ஆண்களின் பிற்போக்குத்தனத்தையும் விடுதலைக்கான பெண்களின் ஏக்கத்தையும் போராட்டத்தையும் நாவல் உணர்ச்சிகரமாகப் பேசுகிறது.

பெருங்கனவுகளைச் சுமந்துகொண்டு நிஜவெளியில் அதனைத் தாண்ட முடியாமல் தூக்கத்தில் மட்டுமே அதைப் பிம்பமாகக் காணும் பெண் சித்திரத்தைக் கலையுணர்ச்சி சார்ந்த யதார்த்தத்தோடு விவரிக்கும் இந்த நாவல் முக்கியமான வரவு.

-எச்.பீர்முஹம்மது

ஈழப் போராட்டத்தின் ஒரு சுடர்

இந்த நூல்... ஈழப் போராட்டத்தின் இன்னொரு பக்க வரலாற்றைப் பேசியிருக்கிறது. வெறுமனே விடலைத் தனமான தேசியவாதச் சிந்தனைகள் மட்டுமே ஈழப் போரட்டத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக விசுவானந்ததேவன் போன்ற தீவிர இடது சிந்தனையாளர்களும் சனநாயகவாதிகளும் சுத்த இராணுவவாதத்தை நிராகரித்தவர்களும் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்றுப் பதிவு இந்நூல்.இந்நூலில் எம்.ஏ. நுஃமான், எஸ்.வி. ராஜதுரை, அ. யேசுராசா, அ. மார்க்ஸ், சமுத்திரன், வ. அழகலிங்கம், பா. பாலசூரியன் உள்ளிட்ட பலர் விசுவானந்ததேவனுடனான தங்களுடைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கொம்யூனிஸ இயக்கத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடக்கிய விசுவானந்ததேவன், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை நோக்கி நடந்து, 1986 -ல் கடலில் 'மர்மமாக' மறைந்ததுவரையான அவரது அரசியல் வாழ்க்கைச் சித்திரத்தை இந்நூல் சற்றேறக்குறைய முழுமையாகவே பதிவு செய்திருக்கிறது.

- ஷோபாசக்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x