Published : 28 Oct 2016 08:53 PM
Last Updated : 28 Oct 2016 08:53 PM

தொடுகறி: வடக்கேயும் பறக்கும் கொடி!

இந்தி புத்தக உலகில் சமீபத்திய ‘பெஸ்ட் செல்லர்’ யார் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நம் பெரியார்தான். ஆம்! ‘பெரியார் கே ப்ரதிநிதி விசார்’ என்ற நூல் கடந்த செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாள் அன்று, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. புதுடெல்லியின் ‘ஃபார்வர்டு பிரஸ்’, ‘காட்டாறு’ இதழ் இரண்டும் இணைந்து வெளியிட்ட இந்த நூல் ஒரே மாதத்தில் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. பெரியார் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவைப்படுகிறார். பகுத் அச்சா!

கே.என்.செந்தில், பத்மபாரதிக்கு நெய்தல் விருதுகள்!

இந்த ஆண்டுக்கான நெய்தல் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக் கின்றன. 2016-ம் ஆண்டுக்கான ‘சுந்தர ராமசாமி’ விருதுக்கு கே.என்.செந்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதேபோல, முதல் கவிதைத் தொகுப்புக்கான ‘ராஜமார்த்தாண்டன் விருது’க்கு பத்மபாரதியின் ‘நீர்ச்சாரி’ நூலுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புக்கர் சிறப்புகள்!

இந்த ஆண்டின் ‘மேன் புக்கர்’ பரிசுக்குப் பல சிறப்புகள் உண்டு! 47 வருஷ வரலாற்றில் முதல் முறையாக ஒரு அமெரிக்கர் பெறும் விருது இது. நாவலாசிரியர் பால் பீட்டி ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்பதும், அவரது ‘செல்அவுட்’ நாவல் அமெரிக்காவில் நிலவும் நிறவெறி அரசியலைப் பற்றியது என்பதும் கூடுதல் சிறப்புகள்!

குடும்ப நாவலில் ஜி.நாகராஜன்!

ஜி. நாகராஜனின் ‘நாளை மற்று மொரு நாளே’ நாவல் தற்போது குடும்ப நாவலின் மலிவுப் பதிப்பாக வெளியாகியிருக்கிறது. கூடவே, சுந்தர ராமசாமியின் ‘திரைகள் ஆயிரம்’ குறுநாவலும் போனஸ்! நாற்பது ரூபாய்க்கு இரண்டு அருமையான இலக்கியப் படைப்புகள், ஒரே நூலாக!

சிறுவர் இலக்கியக் கருத்தரங்கு

சாகித்திய அகாதமியும், ‘தொடரும்’ இதழும் இணைந்து குன்றக்குடியில் ‘சிறுவர் இலக்கியம்’ குறித்த ஒருநாள் கருத்தரங்கினை நடத்தினார்கள். குன்றக்குடி அடிகளார் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக, குன்றக்குடி ஆதீனப் புலவர் மரு. பரமகுரு தொகுத்த ’தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூல் திரட்டு’ எனும் நூலைப் பொன்னம்பல அடிகளார் வெளியிட, ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் செயலர் டாக்டர் சந்திரசேகரன் பெற்றுக்கொண்டார்.

நவீன கவிதை வடிவம் சலிப்பூட்டுகிறதா?

எம்.டி.முத்துக்குமாரசாமி சமீபத்தில் ஒரு நீள்கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். ‘அனாதையின் காலம்’ என்ற தலைப்பிலான இந்தக் கவிதையின் முதல் பகுதி ‘கண்ணிமையின் ஒன்பது அசைவுகள்’ என்னும் தலைப்பில் அவருடைய வலைப்பூவில் வெளியாகியிருக்கிறது. சம்ஸ்கிருத காவிய நடை, சங்க இலக்கியம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றிலிருந்து சில அம்சங்கள், கூறுமுறைகளைக் கலந்தடித்து இந்தக் கவிதை முயற்சி பேசுபொருளாகியிருக்கிறது. நவீன கவிதைகளின் கூறுமுறைகளில் சலிப்புற்றதன் விளைவாகத் தேர்ந்துகொண்ட வடிவம் இது என்கிறார் முத்துக்குமாரசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x