நூல்நோக்கு: தமிழக வரலாற்றுச் சித்திரம் 

நூல்நோக்கு: தமிழக வரலாற்றுச் சித்திரம் 
Updated on
3 min read

வரலாற்றுத் துறைப் பேராசிரியரான கே.ராஜய்யனின் இந்நூல் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகான தமிழக வரலாற்றைத் திருத்தமாகச் சித்தரிக்கிறது. ‘மதுரை வரலாறு 1736 – 1801’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தாலும், இந்நூல் வழி தமிழக வரலாற்றின் ஒரு முழுச் சித்திரத்தை வாசகர்கள் உருவாக்கிக்கொள்ள முடியும்.

பொ.ஆ. (கி.பி.) 6-ம் நூற்றாண்டில் கடுங்கோன் முதலாம் பாண்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் தொடங்கி பல்லவர்கள், சோழர்களின் எழுச்சி, பிறகு ஜராவர்மம் இரண்டாம் பாண்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதையும் இந்த நூலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ராஜய்யன். டெல்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கர் ஆட்சி என வாசகர் நுழைவுக்கான சாத்தியத்துக்காக ஒரு முன் வரலாற்றை ஆசிரியர் உருவாக்கித் தந்திருக்கிறார்.

கல்வெட்டுகள், நாள்குறிப்புகள், ஏசு சபை குருமார்களின் கடிதங்கள், மதராஸ் அரசு ஆவணங்கள், தஞ்சை ஆவணங்கள், இதழ்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த வரலாற்றுச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் அடிக்குறிப்புச் சான்றைச் சொல்லியிருப்பது நூலை வலுவானதாக்குகிறது.

உதாரணமாக, ஆங்கிலேயேர் செல்வாக்கினால் பாதிக்கப்பட்ட டச்சுக்காரர்கள் கட்டபொம்மன் உள்ளிட்ட திருநெல்வேலிக் கிழக்குப் பகுதிக் கலகக்காரர்களுடன் இணைந்து ஒரு கிழக்குக் கூட்டணியை அமைத்தனர் என்பதற்கு கிழக்கிந்தியக் கம்பெனியின் படைத்தலைவர் யூசுப் கான், மதராஸ் கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார் ஆய்வாளர்.

அதே வேளை கட்டுரை, வெறும் தகவல்களின் சேர்வையாக அல்லாமல் சம்பவங்களைக் கோத்து ஓர் உயிர்ப்புள்ள வரலாறாக மாற்றப்பட்டிருக்கிறது. பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தில் தோன்றிய எண்ணற்ற சிற்றரசுகளுக்கு இடையில் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலப் படைகள் செய்த சூழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வரலாறு நெடுகிலும் நடந்த சண்டைகளையும் சூழ்ச்சிகளையும் விவரிக்கும் விதத்தில் இந்த நூலை எல்லைக்கு அப்பாற்பட்ட பொதுத் தளத்தில் வைத்துப் பார்க்கலாம்.

மதுரை வரலாறு
1736 – 1801
கே.ராஜய்யன் (மொழிபெயர்ப்பு: சா.தேவதாஸ்)
கருத்து = பட்டறை
விலை: ரூ.450
தொடர்புக்கு: 98422 65884

- ஜெய்

கதையல்ல, உண்மை!

பிரிட்டிஷ் ஆட்சியில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற சமஸ்தானத்து இளவரசர் ஒருவர், பல்லாண்டுக் காலம் கழித்து ஒரு சந்நியாசி உருவில் திரும்பவருகிறார். ஆனால், இதைக் குறித்துச் சமஸ்தானத்துக்குள் முரண்பட்ட கருத்துகள் எழுகின்றன. அதனால், இந்தப் பிரச்சினை நீதிமன்றம் செல்கிறது.

இந்த வழக்கு விசாரணைதான் நூலின் மையம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து நீதிமன்ற நடவடிக்கைகள், இதன் வழியாக விவரிக்கப்படுகின்றன. போர்க் காலத்தில் வீரர்களுக்கு ஏற்பட்ட நினைவு இழப்புடன் இந்த வழக்கை ஒப்பிட்டு, இந்த விஷயத்துடன் ஒரு பரந்துபட்ட அபிப்பிராயத்தை இந்த வழக்கு கைக்கொள்வதையும் நூலாசிரியர் விவரித்துள்ளார்.

குறுக்கு விசாரணைக் காட்சிகள் திரைக்கதைக்கான விறுவிறுப்புடன் எழுதப்பட்டுள்ளன. பேராசிரியர் நீலகண்டன், போலி ஜவ்வரிசி / ஜவ்வரிசி உரிமை கோரி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த வழக்கைப் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை, புனைவைவிடச் சுவாரசியமானது எனச் சொல்லப்படுவதற்கு உதாரணமாக எஸ்.பி.சொக்கலிங்கம் எழுதியுள்ள ‘மர்ம சந்நியாசி’ நூலை முன்மொழியலாம்.

மர்ம சந்நியாசி
எஸ்.பி.சொக்கலிங்கம்
கிழக்குப் பதிப்பகம்
சென்னை
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044-42009603

- குமார்

தேரி மாந்தர்களின் வாழ்க்கைப் பதிவு

தூத்துக்குடி, திருநெல்வேலிப் பகுதிகளில் பரந்து கிடக்கும் செம்மண் பரப்பே தேரி நிலம். அங்கே உயர்ந்து நிற்கும் செம்மண் திரடுகளும் பள்ள வெளிகளும் அதன் தனித்துவ அடையாளங்கள். செம்மண் திரடுகளுக்கும் பள்ள வெளிகளுக்கும் ஊடே தங்கள் வாழ்க்கையைக் கடின உழைப்பின் வழியே முன்நகர்த்திச் செல்லும் எளிய மக்களின் அன்றாடத்தை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் நாவல் இது.

தன் குழந்தைகளுடன் தனி மனுஷியாக வாழ்ந்து காட்டிய சுப்பம்மாவின் வாழ்க்கையின் வழியே, அன்றைய சமூக நிலையும் கல்வி நிலையும் பண்பாட்டுத் தளமும் இந்த நாவல் மூலம் நமக்கு ஓர் அனுபவத்தை அளிக்கின்றன. இந்த நூலின் வட்டார மொழி, இந்த நாவலைத் தனித்துவமானதாக மாற்றுகிறது.

தேரியாயணம்
(நாவல்),
கண்ணகுமார விஸ்வரூபன்
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
விலை: ரூ. 270
தொலைபேசி: 044-28482441

- ஹுசைன்

ஒரு சுவையான உறவுப் பரிணாமம்

எழுத்தாளரும் ‘நவீன விருட்சம்’ இதழின் ஆசிரியருமான அழகியசிங்கர், மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவருடைய கதைகள் தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தையும் முன்வைத்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒரு வாசகருக்கும் அவர் பெரிதும் மதிக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான உறவின் பரிணாமம் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆழகியசிங்கர் வாங்கி வந்து கொடுக்கும் மிளகாய் பஜ்ஜியை விரும்பிச் சாப்பிடுவது, தனக்குப் பிடிக்காதவற்றை மெளனத்துடன் கடப்பது, தள்ளாத வயதிலும் நண்பர்கள், உறவினர் வீட்டு சுப நிகழ்வுகள், சக எழுத்தாளர்கள், மனதுக்கு நெருக்கமானவர்களின் இறப்புக்குச் சென்றது, தனக்கு வரும் அனைத்துக் கதைகளையும் கட்டுரைகளையும் படித்துவிட்டுச் சிரத்தையுடன் அவை மீதான தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது, கவிதை மீது அவருக்கு இருந்த ஒவ்வாமை, அவ்வப்போது வெளிப்படும் பகடி, இறப்பை நெருங்கும் உணர்வைச் சலனமில்லாமல் எதிர்கொண்டது என அசோகமித்திரனின் தனிப்பட்ட ஆளுமைப் பண்புகளை அருகிலிருந்து பார்த்த உணர்வை வாசகருக்கும் கடத்தும் வகையில் எழுதியுள்ளார் அழகியசிங்கர்.

‘தண்ணீர்’, ‘கரைந்த நிழல்கள்’, ‘புலிக் கலைஞன்’ உள்ளிட்ட அசோகமித்திரனின் புகழ்பெற்ற ஆக்கங்கள் குறித்த அழகியசிங்கரின் நுட்பமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அசோகமித்திரனும் நானும்
அழகியசிங்கர்
வெளியீடு: விருட்சம்,
சென்னை
விலை: ரூ.100
தொடர்புக்கு: 044-24710610, 9444113205

- கோபால்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in