

தங்களது புத்தகங்களைத் தாங்களே பதிப்பித்துக்கொள்ளும் எழுத்தாளர்களின் வரிசையில், தற்போது கீரனூர் ஜாகிர்ராஜாவும் இணைந்திருக்கிறார். ‘கீரனூர் புக்ஸ்’ என்ற பெயரில் அவர் தொடங்கியிருக்கும் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, அவரது ஆறாவது சிறுகதைத் தொகுப்பான ‘ஹலால்’ வெளிவந்துள்ளது.
முதல் வெளியீடு வெளியான மூன்று நாட்களிலேயே 100 பிரதிகள் விற்பனையானதில் உற்சாகமடைந்துள்ள ஜாகிர்ராஜா, அடுத்து தி.மரிய கனகராஜ் தொகுத்துள்ள ‘மற்றவர்களின் சிலுவை’ சிறுகதைத் தொகுப்புக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
கவிஞர் அபி 80
கவிஞர் அபிக்கு 80 வயது நிறைவடைந்ததை ஒட்டி, மதுரையில் வரும் ஜூலை 31 அன்று மாலை 5:30 மணிக்கு மதுரை காமராஜர் சாலை, வி.எஸ்.செல்லம் புளூ ஹெவன் பார்ட்டி ஹாலில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் விழா நடைபெற இருக்கிறது. ந.ஜெயபாஸ்கரன், ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் உரையாற்றுகிறார்கள். இந்நிகழ்வில் ஜி.ஆர். பாலகிருஷ்ணன், அபியின் கவிதை குறித்து எழுதிய ‘ஆழங்களின் அனுபவம்' நூல் வெளியிடப்பட உள்ளது.
புதுக்கோட்டை, ஈரோடு புத்தகக்காட்சிகள்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை மாவட்ட புத்தகக்காட்சி, ஜூலை 29 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 7 வரை நடைபெறவிருக்கும் இந்தப் புத்தகக்காட்சியில் முன்னணிப் பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளன.
...
‘ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை’ சார்பில் ஆகஸ்ட் 5இலிருந்து 16 வரை ஈரோடு சிக்கய்ய நாயக்கன் கல்லூரித் திடலில் புத்தகக்காட்சி நடைபெறவுள்ளது. 230 அரங்குகள் அமைக்கப்படவுள்ள இந்தப் புத்தகக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வழியாகத் திறந்துவைக்க இருப்பதாக, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிவித்துள்ளார்.
ஜெயகாந்தனுக்குக் கெளரவம்
‘ஜெயகாந்தன் தோழர்கள்’ என்ற பெயரில் கோவை புத்தகக் காட்சியில் ஓர் அரங்கு (எண் 187) அமைக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சிக்கு வரும் வாசகர்களில் ‘ஜெயகாந்தன்’ என்ற பெயர் உள்ளவர்களை இந்த அரங்குக்கு அழைத்துக் கெளரவித்து, ஜே.கே. நூல்களைப் பரிசளிக்கும் திட்டத்துடன் அமைக்கப்பட்ட அரங்கு இது.
ஜெயகாந்தனின் தீவிர வாசகர்களின் சுவாரசியமான இந்தத் திட்டத்தில் சென்னையைச் சேர்ந்த 57 வயதான ஜெயகாந்தன் என்பவர் கெளரவிக்கப்பட்டார். ஜெயகாந்தன் வாசகரான அவரது அம்மா வைத்த பெயர்தான் இது என்பது
‘ஜெயகாந்தன் தோழர்கள்’ அமைப்பினருக்குக் கூடுதல் மகிழ்ச்சி.
ஆ.இரா.வேங்கடாசலபதி நூல் வெளியீடு
வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908...’ நூல் வெளியீட்டு நிகழ்வு, ஜூலை 31 ஞாயிறன்று மாலை 5:30 மணிக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. காலச்சுவடு வெளியிட்டுள்ள இந்நூலை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட, வரலாற்றாய்வாளர் செ.திவான் பெற்றுக்கொள்கிறார்.