

மும்பையிலிருந்து செயல்படும் அரசியல் பொருளாதாரத்துக்கான ஆராய்ச்சி அலகு (ஆர்.யூ.பி.இ) என்ற ஆய்வு மையத்தின் சமீபத்திய வெளியீடு, அலைகள் வெளியீட்டகத்தால் தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள 10 கட்டுரைகளும் ‘ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியன் எகானமி’ இதழில் 2018-ல் வெளிவந்தவை. இக்கட்டுரைகள், கள ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரைகளில் சில, மஹாராஷ்டிரத்திலும் ஒடிசாவிலும் உள்ள செங்கல் சூளைகளில் தொழிலாளர்கள் வெந்தணலில் வேகும் நிலையை எடுத்துக்காட்டுகின்றன. கான்பூர் தோல்பொருள் தொழிலாளர்களைப் பற்றியும், குர்கானிலும் பெங்களூருவிலும் உள்ள ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழிலாளர்களின் நிலையையும் புள்ளிவிவரங்களுடன் சில கட்டுரைகள் பேசுகின்றன.
முறைசாராத் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதே தொழிற்சங்கங்களின் முன்னால் உள்ள சவால். அதற்கான சில முயற்சிகள் வெற்றிபெற்றுள்ள அனுபவத்தை சுதா பரத்வாஜ் எழுதிய இறுதிக் கட்டுரை பகிர்ந்துகொள்கிறது.
புத்தகத்தின் தலைப்பாக அமைந்த அறிமுகக் கட்டுரை உழைக்கும் வர்க்கம் குறித்த மார்க்ஸியப் பார்வையிலிருந்து தொடங்குகிறது. ‘மூலதனம்’ நூலின் சாராம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. வெளி முகமை வேலைகளின் மூலமாக, மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்கள் சொற்பக் கூலியையும் அந்நாடுகளின் முதலாளிகள் சிறு லாபத்தையும் பெறும் நிலையில், ஏகாதிபத்திய நாடுகளின் பெருவணிகர்கள் சில்லறை வணிகத்தின் வழியாக உபரி மதிப்பைக் களவாடும் தற்போதைய உலகமயச் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இந்த அறிமுகம் உதவுகிறது.
இந்தியாவில் ஒரு சில துறைகள் நீங்கலாக, அனைத்துத் தொழில் துறைகளிலுமே தொழிலாளர்களின் சராசரி ஊதியம், அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது என்பதைப் பொருளாதார ஆய்வறிக்கைகளை ஒப்பிட்டு இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.
தற்காலிக வேலைகளின் காரணமாக, விவசாயிகள் தொழில் துறையினரிடமிருந்து பயனடையவில்லை. மாறாக, தொழிலாளிகள் தங்களது குறைவான ஊதியத்தை, விவசாயத்திலிருந்து கிடைக்கும் சிறுசிறு வருமானங்களிலிருந்து ஈடுகட்டிக்கொள்கிறார்கள். ஒட்டுமொத்த விவசாயத் துறையுமே இவ்வாறு தொழில் துறையின் கூலி குறைப்புக்கும் உபரி மதிப்பு உயர்வுக்கும் உதவியாக இருக்கிறது என்ற மாற்றுப் பார்வை ஒன்றையும் இந்த அறிமுகக் கட்டுரை அளிக்கிறது.
கட்டுமானப் பணிகளிலும் செங்கல் சூளைகளிலும் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பெரிதும் பட்டியலின, பழங்குடியினராகவே உள்ளனர். அமைப்புசார் தொழிலாளர்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே மிகுந்துள்ளனர். உயர்ந்துவரும் கொந்தளிப்பு ஒரு கட்டத்தில் போராட்டமாக வெடிப்பதையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. தொழிற்சங்கங்கள் விலகி நின்று வேடிக்கை பார்க்க, இப்போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடந்து முடிகின்றன.
இந்தியாவில் தொழிலாளர்கள் என்பவர்கள் பெரிதும் ‘அரை விவசாயிகள்’. ஆனால், தொழிற்சங்கங்கள் துண்டுதுண்டாக சிதறிக் கிடக்கும் இந்தத் தற்காலிகத் தொழிலாளர்களுடன் இதுவரை எவ்வித நெருக்கத்தையும் உருவாக்கிக்கொள்ளத் தவறிவிட்டன. ஐரோப்பாவின் உழைக்கும் வர்க்கம்தான் உலகளாவிய சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் என்ற மார்க்ஸியத் தீர்க்கதரிசனத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டு, ஏகபோகத்தின் சிறுசிறு பலன்களை அனுபவிக்க அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள் தலைப்பட்டன. நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்தியத் தொழிற்சங்கங்களுக்கு அந்த வாய்ப்புகூட சாத்தியப்படவில்லை.
இதுவரை நடைமுறையில் இருந்துவந்த தொழிலாளர் நலச் சட்டங்களுக்குப் பதிலாக, தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகள் நான்கும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. அமைப்புசாராத் தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குள் கொண்டுவருவதாகச் சொல்லும் இச்சட்டத் தொகுப்புகள், அமைப்புசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.
எனில், இனிவரும் காலத்தில் தொழிற்சங்க இயக்கம் யாரையெல்லாம் எதிரே நிறுத்தி உரையாடப்போகிறது? எதற்காகப் போராடப்போகிறது? தொழிற்சங்க பலத்தின் மீது எழுந்து நிற்கும் இடதுசாரிக் கட்சிகள் இன்னும் அதற்கான விவாதங்களைத் தொடங்கவில்லை. இந்நிலையில், சித்தாந்தரீதியில் தொழிலாளர் பிரச்சினைகளின் இன்றைய பரிமாணங்களைப் புரிந்துகொள்ளவும் தொழிற்சங்கங்களின் திசைவழிகளைத் தீர்மானிக்கவும் இந்நூல் ஒரு துணைநூலாகக் கொள்ளத்தக்கது.
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
இந்திய உழைக்கும் வர்க்கமும்
அதன் எதிர்காலமும்,
அரசியல் பொருளாதாரத்திற்கான
ஆராய்ச்சி அலகு,
தமிழில்: வான்முகிலன்,
அலைகள் வெளியீட்டகம், சென்னை.
விலை: ரூ.300
தொடர்புக்கு: 98417 75112