நல்வரவு: ஒடுக்கப்பட்டோரின் ஒளிக்கதிர்
பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கையைக் கவிதை வடிவில் அறிமுகப்படுத்தும் நூல். நீலகிரியில் பழங்குடியின மக்களுக்காக கர்னல் ஆல்காட்டைச் சந்தித்தது, ‘பறையன்’ பத்திரிகை தொடங்கியது, தென்னாப்பிரிக்கப் பயணம், காந்தியுடன் சந்திப்பு, இரண்டு வட்டமேசை மாநாடுகளில் ஒடுக்கப்பட்டோர் சார்பாகப் பங்கேற்றது என இரட்டைமலை சீனிவாசனின் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
ஒடுக்கப்பட்டோரின் ஒளிக்கதிர் (வரலாற்றுக் காவியம்), கவிஞர் கு.தென்னவன்
வெளியீடு: ஆரல் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.100, தொடர்புக்கு: 89399 28388
கவிஞரும் கட்டுரையாசிரியருமான உதயை மு.வீரையனின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு. நடப்புலகச் சிக்கல்களைப் பேசும் 29 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மக்களாட்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டில், அரசியலின் போக்கு அதற்கு எதிராக இயங்குவதைத் தனது பெரும்பாலான கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறார். காவேரி நதிநீர்ச் சிக்கல், கஜா புயல் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை.
நாடும் நாமும், உதயை மு.வீரையன்
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
விலை: ரூ.140, தொடர்புக்கு: 044-28482441
பவள விழாவை நெருங்கும் சென்னை சமூகப் பணிக் கல்லூரியின் வரலாற்றையும் அதன் பல்வேறுபட்ட பணிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார், அக்கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியரும் கவிஞருமான சி.ஆர்.மஞ்சுளா. சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் தொடங்கப்பட்டுத் தற்போது காசா மேஜர் சாலையில் செயல்பட்டுவரும் இக்கல்லூரியின் நிறுவனர் மேரி கிளக் வாலா ஜாதவ் வாழ்க்கை, போற்றுதலுக்குரிய முன்னுதாரணம்.
சமூகப் பணியில் ஒரு சகாப்தம்
சி.ஆர்.மஞ்சுளா, வெளியீடு: அடித்தள மக்கள் தகவல் ஆய்வு மையம், சென்னை
விலை: ரூ.150, தொடர்புக்கு: 9940408794
‘சிவகாசி முரசு’ என்னும் இதழில் 1972 ஜனவரி தொடங்கி 36 மாதங்கள் சுவாமி விவேகானந்தருடைய கருத்துகளின் அடிப்படையில் புனையப்பட்ட கவிதைகள் ‘கர்ஜனைக் கவித்தொடர்’ என்னும் தலைப்பில் வெளியானது. இப்போது அது நூல்வடிவம் பெற்றுள்ளது.
வீர முழக்கம், வெட்டிவயல் வளவன்
வெளியீடு: வாழ்க்கைச் சட்டம் (பப்ளிகேஷன் - மீடியா), சென்னை. விலை: ரூ.70
தொடர்புக்கு: 044-2376 4556
திருமூலர், அகத்தியர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள்ளிட்ட 27 சித்தர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்யும் நூல். சித்தர்களின் அறநெறிக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நமக்குக் கிடைக்கும் சித்தர் பாடல்கள், இலக்கிய ஆய்வுகள், செவிவழிச் செய்திகள், தலபுராணங்கள் ஆகியவற்றிலிருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
பதினெண் சித்தர்கள் வரலாறு
சி.எஸ்.முருகேசன், வெளியீடு: சங்கர் பதிப்பகம், சென்னை. விலை: ரூ.230,
தொடர்புக்கு: 044-2650 2086
