

இன்று சினிமாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பப் பாய்ச்சல்கள் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சினிமாவின் ரிஷிமூலமான சலனப் படம் உருவான காலத்திலும் அதன் பிறகான பேசும்படக் காலத்திலும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த விதம் பலரும் அறியாத சங்கதிகள்.
அந்தப் பேசும்படக் காலகட்டத்தில் சினிமாவில் அடியெடுத்து வைத்த நாடக ஆளுமை பம்மல் சம்பந்தனார். அவர் காலத்தில் இருந்த தொழில்நுட்பங்களையும் அதன் அனுபவங்களையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல். பதினான்கு அத்தியாயங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பேசும்படக் காலத்தில் பம்மல் சம்பந்தனார் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதிலிருந்து அவர் மீண்டதையும் விவரிக்கிறது.
தொழில்நுட்பங்கள் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தவைதாம். ஆனால், அது நூறாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை அறிகிறபோது, ஒரு துறையின் வரலாற்றை முழுவதும் அறிந்துகொள்ளும் திருப்தி ஏற்படும். பம்மல் சம்பந்தனாரின் தொழில்நுட்ப அனுபவங்கள் அந்தத் திருப்தியைத் தருவதை நூலைப் படிக்கிறபோது உணர முடிகிறது. திரைக்கதை இன்றிப் படம் இல்லை.
அந்தத் திரைக்கதையை ‘சினேரியோ’ என்ற சொல்லாக பம்மல் சம்பந்தனார் பயன்படுத்தியிருக்கிறார் என்று நூலாசிரியர் கோ.பழனி குறிப்பிட்டிருப்பதும், அந்த ‘சினேரியோ’ என்பது என்ன என்பதைப் பட்டியலிட்டு எழுதியிருப்பதும் வாசிக்கச் சுவாரசியம் அளிக்கிறது. சினிமா துறையின் போக்கையும் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு பாடமாக இருக்கும். குறிப்பாக, ‘நாடகத் தந்தை’ என்றழைக்கப்படும் பம்மல் சம்பந்தனாரின் காலத்தில் படங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னணியை அறிந்துகொள்வதன் மூலம் தமிழ்ப் பட உருவாக்கப் போக்கையும் உணரலாம்.
பம்மல் சம்பந்தனார்: பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்
கோ.பழனி
புலம் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98406 03499
- டி.கே
கிரந்தாலயம்?
நூலகவியல் தொடர்பாகத் தமிழில் முதன்முதலாக 1950-களில் வெளிவந்த புத்தகத்தின் மறுபதிப்பு இது. தனது மாணவரின் இம்முயற்சிக்கு முன்னுரை வழங்கி வாழ்த்தியிருக்கிறார் நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன். நூலகம் என்ற சொல், இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
70 ஆண்டுகளுக்கு முன்பு அது கிரந்தாலயம் என்று குறிப்பிடப்பட்டு வந்திருப்பதை, ரங்கநாதனின் முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. நூலாசிரியர் த.கிருஷ்ணமூர்த்தி அதைப் புத்தகாலயம் என்றே தம் நூல் நெடுகிலும் குறிப்பிட்டுள்ளார்.
1950இல் சென்னை நூலகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நூலகங்களின் முக்கியத்துவத்தையும் நூலகவியலின் அடிப்படைகளையும் விளக்கும்வகையில் எழுதப்பட்ட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அச்சுத் தொழில்நுட்பம் பரவலானதற்குப் பின்பு, நூலகப் பயன்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்குகளை விவரிக்கிறது.
‘ஊர்தோறும் நூலகம், அனைவருக்கும் புத்தகம்’ என்ற லட்சியத்தை முன்வைக்கிறது. உள்ளூர்த் தொழிற்சூழலுக்கு உகந்த புத்தகங்கள் அங்குள்ள நூலகங்களில் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. பிரிட்டன் கிராமங்களில் நூலக இயக்கம் பரவ உதவிய அமெரிக்க நன்கொடையாளர் ஆன்ட்ரு கார்னகீ, புத்தகங்களின் உள்ளடக்கத்தைக் காட்ட தனிக் குறியீடுகளை வகுத்த முன்னோடி மெல்வில் டூயி ஆகியோரை நினைவுகூர்கிறது.
பிரிட்டன், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நூலகங்கள் இயங்கும் முறையை விளக்குகிறது. 1933இல் எஸ்.ஆர்.ரங்கநாதன் அறிமுகப்படுத்திய கோலன் பகுப்பு முறையைக் குறித்தும் அதற்கு அடிப்படையான பஞ்சநியதிகளைக் குறித்தும் அறிமுகப்படுத்துகிறது. நூலகவியல் தொடர்பான இது போன்ற முன்னோடி நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்துவரும் ‘88 வயது இளைஞர்’ பா.பெருமாளின் பணி போற்றத்தக்கது.
கலைக்கோயில்,
த.கிருஷ்ணமூர்த்தி,
பதிப்பாசிரியர்: கருடாழ்வார்,
இந்திரா பதிப்பகம், சென்னை.
விலை: ரூ:100
தொடர்புக்கு: 99520 70464
- செல்வ புவியரசன்
கையில் அள்ளிய காவேரி!
கிளாஸிக் என்று போற்றப்படும் புகழ்பெற்ற நாவல்களின் கதைச் சுருக்கங்களைச் சிறுவர்களும் அறிமுக வாசகர்களும் படிக்கும்வகையில் சிறுநூல்களாக வெளியிடும் வழக்கம் ஆங்கிலத்தில் பிரபலமாக இருந்துவருகிறது.
தமிழில் அப்படியான முயற்சிகள் பெரியளவில் இன்னும் தொடங்கவில்லை. அதற்கான ஒரு நல்ல தொடக்கமாக சுவாசம் பதிப்பகத்தின் இந்தப் புத்தகம் அமையக்கூடும். கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’, தமிழில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகிவரும் புத்தகம்.
விரைவில், திரைப்படமாகவும் வெளிவரவிருப்பதால், அந்நாவலைக் குறித்து பெருங்கவனம் உருவாகியிருக்கிறது. அந்நாவலை ஏற்கெனவே வாசிக்காதவர்களுக்கு, முக்கிய கதாபாத்திரங்களையும் கதைத் திருப்பங்களையும் இக்கதைச் சுருக்கம் எளிமையாக அறிமுகம் செய்துவைக்கிறது.
இந்நூலின் அத்தியாயங்கள், நாவலின் முதல் நான்கு பாகங்களுக்கு ஐந்து அத்தியாயங்களின் சுருக்கமாகவும் இறுதிப் பாகத்துக்கு பத்து அத்தியாயங்களின் சுருக்கமாகவும் அமைந்துள்ளன. கல்கியின் எழுத்தோட்டத்தையும் வர்ணனைப் பாங்கையும் இதில் எதிர்பார்க்க முடியாதுதான் என்றாலும் அவரை வாசிக்க ஆற்றுப்படுத்தும் ஒரு நல்ல முயற்சி. கைக்குள் அடங்காது காவேரி. உள்ளங்கையில் அள்ளிய நீரும் காவேரிதானே!
கல்கியின் பொன்னியின் செல்வன்
ஐந்து பாகங்களின் சுருக்கம்
அனந்தசாய்ராம் ரங்கராஜன்
சுவாசம் பதிப்பகம், சென்னை
விலை:ரூ.160
தொடர்புக்கு: 81480 80118
- செ.இளவேனில்
வரலாற்றின் மீதான ஒரு விசாரணை
சுப்ரமணிய சிவா நாடு கடத்தப்பட்டது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது போன்ற இந்த வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்னால், வலி நிறைந்த கதைகளும் அரசியலும் இருக்கிறது என்பதையே ‘தீவாந்தரம்’ நாவலில் அண்டனூர் சுரா முன்வைத்துப் பேசுகிறார்.
தாமிரபரணி ஆற்றங்கரைத் தைப்பூச மண்டபத்தில் சிவா ஆற்றிய உரை, அதன் பின்னர் நடைபெற்ற கோரல் பஞ்சாலை மில்லுக்கு எதிராக நடந்த எழுச்சிமிகு போராட்டம் இவற்றைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆங்கிலேயே அரசின் துப்பாக்கிச்சூடு, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையாகும் பதின்ம வயதுச் சிறுவன் உள்ளிட்ட நால்வர் மரணம், அதனுடன் இணைக்கப்பட்ட மூவர் சதி வழக்கு என வரலாற்றின் பக்கங்களைத் தீவாந்தரம் என்ற புதினத்தின் மூலமாகத் திறக்கிறார் நாவலாசிரியர் சுரா. இந்தியாவில் நிலவும் சாதிய அடுக்குமுறைகளை அப்படியே வைத்துக்கொண்டு தமது அரசியல் அதிகார, சுரண்டல் போக்குகளுக்கு அவற்றைத் துணையாகக் கொண்டு ஆங்கிலேய அரசு எப்படியெல்லாம் செயல்பட்டது என்பதையும் இந்த நாவல் மூலம் ஆசிரியர் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
தீவாந்தரம் (நாவல்)
அண்டனூர் சுரா
சந்தியா பதிப்பகம், சென்னை
விலை: ரூ. 230
தொடர்புக்கு: 044-24596979
– இரா.மோகன்ராஜன்