

கொங்கணியில் கோகுல்தாஸ் பிரபு எழுதி, கோபிநாத் ஹெக்டே மொழிபெயர்த்த ‘உள்பரிமாணங்கள்’ என்ற சிறுகதை நூலை வாசித்து முடித்தபோது, இந்தியப் புனைவிலக்கியங்கள் அனைத்தும் ஆண் என்கிற அதிகார மையத்தினூடாக ஒன்றிணைவதாகத் தோன்றியது.
1994இல் இந்நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கோவாவின் ஆட்சி மொழியான கொங்கணி மொழியில் கவிதையே முக்கிய இலக்கிய வடிவமாக இருக்கிறது. கோகுல்தாஸ் பிரபு, கொச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர். மலையாள வடிவத்தில் இவர் கொங்கணி மொழியை எழுதிவருகிறார்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பதினான்கு கதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகளின் களம் இந்திய துணைக்கண்டத்துக்குப் பொதுவானதாகவே உள்ளது. நடுத்தரத்துக்கும் கீழான குடும்பங்களில் உள்ள பெண்களின் பிரச்சினைகள் குறித்தே கோகுல்தாஸ் பிரபு எழுதியிருக்கிறார்.
இப்பிரச்சினைகளுக்கு ஆண்கள் நேரடியாகவும் சமூகக் கட்டமைப்பு மறைமுகமாகவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. எந்தக் கதையும் யதார்த்தத்தின் வளையத்தைத் தாண்டவில்லை. பல கதைகள் தமிழ்ச் சிறுகதையுடன் ஒன்றிணைகின்றன. ‘தேமல்’ என்ற சிறுகதையில் வரும் கிழவிக்குப் பதினேழு வயதில் ஒரு பேத்தி உண்டு. திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகுடன் அவள் இருக்கிறாள்.
அவள் கிழவியுடன் ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அந்த வீட்டில் 23 வயதில் ஓர் இளைஞன் இருக்கிறான்’ - இந்தக் குறிப்புகள், அந்த இளைஞனால் கிழவியின் பேத்திக்கு உடல்ரீதியான பிரச்சினை எழ வாய்ப்பிருக்கிறது என்று ஒரு வாசகனாக எனக்குத் தோன்றியது. அப்படித்தான் கதையின் முடிவும் இருக்கிறது. இந்தச் சிந்தனை எனக்குள் எப்படி உருவானது? இந்தக் கேள்வியைத்தான் இந்தக் கதையின் மூலமாக நான் கண்டடைந்தேன். ‘எதிர்பார்ப்பு’ என்ற சிறுகதையை ‘தேமல்’ கதையின் தொடர்ச்சியாக வாசிக்கலாம்.
கோகுல்தாஸ் பிரபு இக்கதைகளுக்குள் வெளிப்படுத்தும் பெண்ணியப் பார்வை மிக இயல்பானது. தன்னைப் பாதித்த நிகழ்வைச் சில கதாபாத்திரங்களின் துணைகொண்டு மொழிப்படுத்தியிருக்கிறார். ‘கோழை’ என்ற சிறுகதையும் ஆண்களின் உள்பரிமாணத்தை நினைவூட்டும் ஒரு கதையாக இருக்கிறது.
ஆண்கள் குறித்த கற்பிதங்களைப் பெண்கள் மீதும், பெண்கள் குறித்த கற்பிதங்களை ஆண்கள் மீதும் மாற்றி விளையாட்டுக் காட்டியிருக்கிறது இக்கதை. கோகுல்தாஸின் புனைவுகளில் சாதியும் பாலினச் சமநிலையின்மையும் நிழலாகப் படிந்திருக்கின்றன.புதுமைப்பித்தனின் ‘கருச்சிதைவு’ கதைக்கு நிகரானது கோகுல்தாஸின் ‘புத்துணர்ச்சி’.
நெருக்கடியில் கதை எழுதும்போது, அக்கதை அடையும் உருவச் சிதைவுகளைத் தனக்கே உரிய எள்ளலுடன் எழுதியிருப்பார் புதுமைப்பித்தன். இதனையே இக்கதை கொஞ்சம் காத்திரமாக முயன்றிருக்கிறது. எழுத்தாளர்களால் எழுதப்பட்டுப் பிரசுரமாகும் ஒவ்வொரு சிறுகதைக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.
அதுதான் கதைகளின் கதை. அப்படியொரு கதைதான் ‘புத்துணர்ச்சி’. புனைவும் கதையும் கூடி முயங்காமல் பிரசுரமாகும் ஒவ்வொரு கதைக்குப் பின்னும் அந்த எழுத்தாளருடைய மனைவியின் சாபம் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
கதையை முடிக்கத் தெரியாமல் சுவரில் முட்டிக்கொண்டு நிற்கும்போது, அந்த எழுத்தாளரின் முகம் ஒரு கொடுங்கனவைவிடக் கொடூரமானதாக இருக்கும். இக்கதையின் எழுத்தாளரும் அப்படித்தான் நடந்துகொள்கிறார். தவிர, ஓர் எழுத்தாளருக்கு எழுதுவதைத் தவிர வேறொன்றிலும் பெரிய ஈடுபாடு இருக்காது.
குறிப்பாக, லௌகீக வாழ்க்கையின் நடைமுறைகள் சுத்தமாகத் தெரியாது. அதனைப் படைப்பாளருக்குரிய தகுதியாகக் கொள்பவர்களும் உண்டு. ‘நான் எழுதுவதற்கு என் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்’ என்பதெல்லாம் வெற்று முழக்கங்கள். அடுத்து, எழுத்தும் எழுத்தாளரும் வேறு வேறு. இவற்றையெல்லாம் இக்கதை அவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
ஓர் எழுத்தாளர் தான் சுமக்க வேண்டிய சுமைகளைத் தன் துணையிடம் கைமாற்றிவிட்டுத்தான், தன்னை ‘ஓர் எழுத்தாளர்’ என்று நிறுவிக்கொண்டிருக்கிறார்; இது அவர் எழுத்தைப் படிக்கக்கூடிய வாசகருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்த எழுத்தாளருக்குத் தெரியும்தானே?
- சுப்பிரமணி இரமேஷ், இலக்கிய விமர்சகர்,
தொடர்புக்கு: ramesh5480@gmail.com
உள்பரிமாணங்கள்
கொங்கணி மூலம்: கோகுல்தாஸ் பிரபு
தமிழில்: கோபிநாத் ஹெக்டே
சாகித்ய அகாடமி வெளியீடு
சென்னை - 18
விலை: ரூ.240
தொடர்புக்கு: 044-24311741