

இயற்கையின் மீது கொள்ளும் காதலே கவிதைகளாக உருப்பெறுகின்றன. இயற்கையின் மீதான ஆராதனையே கவிதைகளின் பேசுபொருளாகவும் உள்ளது.
இயற்கையின் அழகை மட்டுமல்லாமல், அதன் அழிவையும் காத்திரமாகப் பதிவுசெய்யும் படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் நிறைய உள்ளன. இந்தப் போக்கு சமீப காலமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீரியம் அடைந்திருக்கிறது. இந்த நூலில் ஆசிரியர் அம்சப்ரியா தேர்ந்தெடுத்திருக்கும் சூழலியல் சார்ந்த 100 கவிதைகளும் இதை உறுதிசெய்கின்றன.
கவிஞர்கள் இன்குலாப், பாலா, தமிழச்சி தங்கபாண்டியன், விக்ரமாதித்யன், நக்கீரன் உள்ளிட்டவர்களின் கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மீதான அக்கறையுடன், இயற்கை வளங்களின் சுரண்டலையும் அழிப்பையும் இந்தக் கவிதைகள் உணர்ச்சிபூர்வமாகப் பதிவுசெய்கின்றன.
இந்தக் கவிதைகள் குறித்து ஆசிரியர் எழுதிய கட்டுரைகளும் இத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்கையை அழிவின் விளிம்புக்குத் தள்ளும் தற்போதைய சூழலில், இந்த நூல் முக்கியத்துவம் பெற்றதாக மாறுகிறது.
பசுமைக் கவிதைகளில் ஒரு சூழலியல் பயணம்
க.அம்சப்ரியா
இருவாச்சி
வெளியீடு,
சென்னை.
விலை ரூ.200
தொடர்புக்கு: 94446 40986
- முகமது ஹுசைன்
***
ஒரு காலகட்டப் பதிவு
தெலுங்கில் தும்மல ராமகிருஷ்ணா எழுதிய சிறுகதைகளில் இருந்து 10 கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார், திராவிடப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் க.மாரியப்பன். எல்லை வேறு என்றாலும் வாழ்க்கை ஒன்றுதான் என்பதையே இந்தக் கதைகள் நமக்குக் காட்டுகின்றன.
ஒவ்வொருவிதமான களத்தைக் கொண்ட கதைகள் என்றாலும் சாதியப் பாகுபாடுகளால் மனிதன் அவமானப்படுவதும் அதிலிருந்து மீறத் துடிக்கும் ஆவேசத்தையும் இயலாமையையும் பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. இயல்பான நடையில் எழுதப்பட்டுள்ள இவற்றில் ‘மஹாவித்துவான்’ சிறப்பான கதை. கண்ணதாசு என்கிற நாதஸ்வரக் கலைஞரைக் குறித்த தெளிவான ஒரு சித்திரத்தை இந்தக் கதை உருவாக்குகிறது.
தலைமுறை தலைமுறையாக நாதஸ்வரத்தை வாழ்க்கையாகக் கொண்ட குடும்பத்தின் வாரிசான அவருக்கும் இந்த இசைக் கருவிக்குமான தொடர்பை வைத்துச் சமூக வாழ்க்கையையும் இந்தக் கதை சொல்லிவிடுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்போது, மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வைத் தரவில்லை. அந்த அளவுக்குத் தமிழுக்கு நெருக்கமாகப் பெயர்க்கப்பட்டுள்ளது. இது இந்நூலின் சிறப்பு.
மஹாவித்துவான் (சிறுகதைகள்)
தும்மல ராமகிருஷ்ணா (மொழிபெயர்ப்பு: க.மாரியப்பன்)
வெளியீடு:
நன்னூல் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9943624956
- ஏக்ஜி
***
அறிய வேண்டிய வரலாறு
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையாரைப் பற்றிய பொதுவான சித்திரம், பேயுரு கொண்டு சிவனைப் பாடியவர் என்பதாகவே பெரும்பாலும் சுருக்கப்பட்டுவிட்டது. தன்னை ‘காரைக்காற்பேய்’ என்று அழைத்துக்கொண்ட அம்மையாரின் வரலாறு போதுமான அளவுக்குப் பதிவாகவில்லை.
அதைப் போக்கும்விதத்தில் பிரான்மலைக் குடைவரைக் கோயில் தூண் ஒன்றில் இடம்பெற்றிருந்த காரைக்கால் அம்மையாரின் சிலையில் இருந்து தன் ஆய்வைத் தொடங்கியுள்ளார் தேன்மொழி. சோழர்கள் காலத்திலும் பின்வந்த நாயக்கர்கள் காலத்திலும் புடைப்புச் சிற்பமாகவும் சிலையாகவும் ஓவியமாகவும் இடம்பெற்றிருக்கும் அம்மையார் குறித்த தகவல்களோடு விரிகிறது ஆய்வு.
தகுந்த ஒளிப்படங்களையும் சான்றாகத் தந்திருக்கிறார். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் காரைக்கால் அம்மையார், சமய இலக்கியத்தில் இறைவனை எளியோருக்கு நெருக்கமானவனாகக் கட்டமைத்தவர். ஆடல்வல்லானைப் போற்றி அவர் எழுதிய பாடல்கள் வழியாகவும் காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்த ஆய்வுநூல் உதவுகிறது.
பெண்ணுடல் எப்படிப் பெண்ணுக்கு எதிர்நிலையில் வைக்கப்படுகிறது என்பதையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒலித்த புரட்சிக் குரல் இவருடையது என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.
கனல்வாய் எயிற்றுக் காரைக்காற்பேய்
காரைக்காலம்மையார்: கலை வரலாற்று ஆய்வு
முனைவர்
தேன்மொழி
மணற்கேணி வெளியீடு
விலை: ரூ.700
தொடர்புக்கு: 04146-355746
- பிருந்தா சீனிவாசன்
***
சாதனையாளரும் தோள்கொடுத்த இணையரும்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.சுப்ரமணியத்தின் மகன் டாக்டர் எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஆவணப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.
இவருடைய ஆவணப்படமான ‘இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி’ இந்தியாவின் 5,000 ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது. இவருடைய மனைவி டாக்டர் மோகனா, ஆயுர்வேத மருத்துவத்தில் ஆய்வு மேற்கொள்ள இருந்த வாய்ப்பைக் கைவிட்டுக் கணவருடன் இணைந்து, கிருஷ்ணஸ்வாமி எழுதி இயக்கிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பாளராகச் செயல்பட்டார்.
இந்த வாழ்விணையரின் வாழ்க்கைப் பயணத்தை விரிவாகப் பதிவுசெய்கிறது இந்நூல். ஆவணப்படங்களை உருவாக்குவதில் எதிர்கொண்ட சவால்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட பல்துறைப் பிரபலங்களுடனான அனுபவங்கள் வாயிலாகப் பல அரிய தகவல்களையும் இந்த நூல் அளிக்கிறது. டாக்டர் மோகனாவின் பங்களிப்புகளும் நூலில் பதிவாகியுள்ளன.
கிருஷ்ணஸ்வாமியின் ‘Unlikely Chemistry’ நூலின் மொழியாக்கமே இந்நூல். ஆங்கிலத் தலைப்பை அப்படியே மொழிபெயர்க்காமல் மகாகவி பாரதியின் தாக்கத்தில் தமிழ்த் தலைப்பு வைத்திருக்கிறார்.
வானகம் இங்கு தென்பட வேண்டும் (ஒரு தம்பதியின் சுயசரிதை)
Dr.எஸ்.கிருஷ்ணஸ்வாமி
வெளியீடு: அல்லயன்ஸ், சென்னை.
விலை: ரூ.470
தொடர்புக்கு: 044 2464 1314, 92892 81314
- கோபால்