

எழுத்தாளர் தேவிபாரதி, 20 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவந்த ‘நொய்யல்’ நாவல் இப்போது தன்னறம் நூல்வெளி வெளியீடாக வெளிவர இருக்கிறது. தேவிபாரதியின் தனித்துவமான மொழியில் விரியும் இந்த நாவல், மனித வாழ்க்கையின் உள்ளும் புறமும் நொய்யலைப் போல் ஊடுபுகுந்து செல்கிறது.
600 பக்கங்களிலான இந்த நாவல், முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.500 (அஞ்சல் செலவு உட்பட) சலுகை விலையில் வெளியிடப்படவுள்ளது. கெட்டி அட்டையுடனான புத்தகம் தேவிபாரதியின் கையெழுத்துடன் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனுப்பிவைக்கப்படும் எனப் பதிப்பகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 98438 70059, 99656 89020
வீ.பா.கணேசனுக்கு முதல் பரிசு
காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ் சார்பில் நடத்தப்பட்ட கவிஞர் கி.பி. அரவிந்தன் 7ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு நூல் போட்டியில், வீ.பா.கணேசன் மொழிபெயர்த்த ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ என்ற நூல் முதல் பரிசைப் பெற்றுள்ளது.
இரண்டாவது பரிசு, நாகரத்தினம் கிருஷ்ணா மொழிபெயர்த்த ‘குற்ற விசாரணை’ நூலுக்கும் விஜய பத்மா மொழிபெயர்த்த ‘இஸ்மாத் கக்தாய் கதைகள்’ நூலுக்கும் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. முதல் பரிசுபெற்ற நூலுக்கு ரூ.10,000 இரண்டாம் பரிசுபெற்ற இரு நூல்களுக்கும் தலா ரூ.7,500 அளிக்கப்படவுள்ளது.
தமிழ்த்தடம் ஆய்விதழ்
ஆய்வுலகில் தடம் பதிக்கும் முனைப்போடு ‘தமிழ்த்தடம்’ ஆய்விதழ் இப்போது வெளிவந்துள்ளது. மூத்த அறிஞர்களின் ஆய்வுகளையும் அரும்புநிலை ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் கொண்டு பழமையையும் புதுமையையும் இணைக்கும் பாலமாக இந்த முதல் இதழ் அமைந்துள்ளது.
இலக்கணம், தொல்லியல், மொழியியல், மானுடவியல், சூழலியல், பதிப்பு, அரசுப் பண்பாடு முதலிய பொருண்மைகள் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், ஜமாலன், கோ.ரகுபதி உள்ளிட்ட பலரும் இந்த இதழில் பங்களித்துள்ளனர். இதழ் தொடர்புக்கு: 93828 53646
ஆயிசா நடராஜனுக்கு அங்கீகாரம்!
பால சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஆயிசா நடராஜன், பெங்களூருவில் உள்ள அறிவியல் புனைகதை ஆய்வுகளுக்கான இந்திய சங்கத்தின் (Indian Association for Science Fiction Studies) ஆயுட்கால உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு எளிய முறையில் அறிவியலை அறிமுகம் செய்துவைக்கும் வகையில் தொடர்ந்து எழுதிவருபவர் இவர்.
வா.மு.கோமுவுக்கு விருது
தஞ்சை ப்ரகாஷ் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது - 2021, எழுத்தாளர் வா.மு.கோமுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூ. 10,000 பணமுடிப்பும் பாராட்டுப் பட்டயமும் அடங்கியது. இம்மாதம் இறுதியில் தஞ்சாவூரில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது வழங்கி, வாமுகோமு எழுத்துகள் குறித்துச் சிறப்புரையாற்றுகிறார்.
மொழிபெயர்ப்பாளருக்குக் கெளரவம்!
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ‘war and peace’ நாவலை இதழியல் முன்னோடியான டி.எஸ்.சொக்கலிங்கம் 1957இல் ‘போரும் வாழ்வும்’ என்ற பெயரில் முதன்முதலாக மொழிபெயர்த்தார். சக்தி வை கோவிந்தனின் சக்தி காரியாலயம் இதை வெளியிட்டது.
சொக்கலிங்கம் நடத்திய காந்தி இதழில்தான் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் முதல் கதை வெளிவந்தது. டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அவரது மொழிபெயர்ப்பின் சமீபத்திய மறுபதிப்பின் அட்டையில் அவர் ஒளிப்படத்தை வெளியிட்டு, அவரது இலக்கியப் பங்களிப்பைக் கெளரவித்துள்ளது நற்றிணைப் பதிப்பகம்.
பெருமாள்முருகனுக்கு ஒடிசா விருது!
ஒடிசா எழுத்தாளர் ஃபகிர் மோகன் சேனாபதி பெயரில் ஒடிசாவில் பலசூரில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் இருபத்துநான்காம் ஆண்டை ஒட்டி ‘ஃபகிர் மோகன் தேசிய இலக்கிய விருது’ தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் ரூபாய் 1 லட்சம் சன்மானமும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2004இல் கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு வழங்கப்பட்ட பிறகு, இந்த விருது இரண்டாம் முறையாக இப்போதுதான் வழங்கப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனப் பயிலரங்கம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ‘பெளத்த சமயமும் மணிமேகலை மொழிபெயர்ப்புகளும்’ என்ற தலைப்பில் 7 நாட்கள் (20-07-2022 - 26-07-2022) கட்டணமில்லாப் பயிலரங்கை நடத்தவுள்ளது. இதில் கலந்துகொள்வோருக்குப் பயணப்படியும் தினப்படியும் மதிய உணவும் தேநீரும் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். 20 பேர் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பிக்க: http://surl.li/cldan
நூல் வெளியீடு
தாயுமானவன் எழுதிய ‘தனித் தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ என்னும் நூல், ஜூலை 17 ஞாயிறு அன்று சென்னை வடபழநி பீமாஸ் உணவு விடுதியில் நடைபெற உள்ள விழாவில் வெளியிடப்பட உள்ளது. வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் வெளியிட்டு உரையாற்றுகிறார்.