

ஈழத் தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மை, இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தின் விவரிப்பு மொழி இந்த இரு அம்சங்களைச் சுவீகரித்துத் தன் கதைகளைத் தனித்துவமாக்கிக்கொண்டவர் எழுத்தாளர் அகரமுதல்வன்.
அவரது சமீபத்திய ‘மாபெரும் தாய்’ தொகுப்பு, கால் நூற்றாண்டு கால ஈழப் போராட்டம் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் அடையாளத்தையும் உள்ளும் புறமுமாகக் கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதை விவரிக்கிறது. இந்தக் கதை மனிதர்கள் தொடர்ந்து புலப்பெயர்வுக்கு உள்ளாகிறார்கள். நிச்சயமற்ற அம்மக்களின் வாழ்வை ஆசிரியர் சொல்லியிருக்கும் விதம், செளகரியமான இந்தியச் சூழலில் அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கும்.
அதுவரை தாங்கள் கொண்டிருந்த எல்லா விழுமியங்களும் போருக்குப் பிறகு பொருளற்றுப் போனதை இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் திருத்தமாகப் பதிவுசெய்துள்ளன. ‘மன்னிப்பின் ஊடுருவல்’ கதையில், இயக்கத்தால் துரோகியாக அறிவிக்கப்பட்டவளும் அவளைக் கொல்லப் பணிக்கப்பட்ட ‘யாழ்ப்பாணி’யான இயக்கப் போராளியும் புலம்பெயர்ச் சூழலில் கணவன், மனைவி ஆகிறார்கள்.
ஜீவகாந்தன் என்னும் பாத்திரத்தின் மூலம் அகரன் இந்தக் கதைக்குள் ஒரு குறுக்கீட்டை நிகழ்த்துகிறார். இதன் மூலம், ஒரு சம்பவத்தை அவர் இலக்கியமாக மாற்றுகிறார். இந்த அம்சம் அவரை விசேஷமானவராக்குகிறது. ‘புகலி’ல் கதைசொல்லி வழியாக அபத்தமான விழுமியங்களை அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
‘உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு’ என்ற தேய்வழக்குக்கான உண்மைப் பொருளை உணர்த்தும் இந்தக் கதையில், தனுஷ்கோடியில் நாயகன் இறங்கும்போது ‘நீங்கள் யார்?’ என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. இந்த எளிய கேள்வி உண்டாக்கும் அடையாளச் சிக்கலை, இந்தக் கதை மூலம் அகரன் வாசகருக்கும் கடத்திவிடுகிறார். இதை உலகமயமாக்கலுக்குப் பிறகான அரசியலுடன் பொதுமைப்படுத்திப் பார்க்கலாம்.
‘மாபெரும் தாய்’ என்ற தலைப்பைப் போல் இந்தக் கதைகளுக்குள் தாய்மார் பலரும் வருகிறார்கள். தொன்மத்தில் தன் பெருவிருப்பை இந்தக் கதைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் அகரன், அதற்கான தொடர்பை இந்தத் தாய்மார் மூலம் நடத்தியிருக்கிறார்.
ஈழமே ஒரு ‘மாபெரும் தாயா’கச் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதையில், நாட்டிலேயே அந்தத் தாயை விட்டுவிட்டுக் கரையேறும் ஒரு சிறுவனின் களங்கமில்லாக் குற்றவுணர்வை 2009க்குப் பிறகு கடல் கடந்த மொத்த ஈழத்தவருக்குமானதாக ஆசிரியர் பொதுவில் வைக்கிறார்.
இயக்க எதிர்ப்பு / ஆதரவுக் கருத்துகளைத் தன் கதைகளில் கையாளும் விதத்திலும் அகரன் கவனிக்கத்தக்கவர் என்பதை இந்தக் கதைகள் மூலம் உணர முடியும். எல்லாச் சரிகளையும் தவறுகளையும், போர் நந்திக் கடல் தீரத்தில் நிறுத்தியதைப் போல் இந்தக் கருத்துகளை அவர் வாசகர்கள் முன் நிறுத்துகிறார். அவர் பெரிய அளவில் குறுக்கீட்டைச் செய்வதில்லை.
கதைகளின் விவரிப்பில் அகரன் எடுத்துக்கொள்ளும் சிரத்தையை இந்தத் தொகுப்பின் வரிகளில் உணர முடிகிறது. போர்ப் படுகளத்தில் கால்களுக்கு இடையில் ரத்தம் ஓடிய ஒரு காட்சியைக் குருதியில் நிற்கும் கண்டல் (அலையாத்தி) காடுகளாகச் சித்தரிக்கிறார்.
பனை மரங்களைக் கறுத்த வாள் என்கிறார். வியப்பூட்டும் உருவகம் பல, வாசிப்பின் நெடுகப் பூத்துக் கிடக்கின்றன. பனை, பலா, பூவரசம், ஒதியன் என மரங்களும் மாந்தர்களாக கதைக்குள் அசைகின்றன. நிலமும் நீரும் பிடிப்புடன் மனிதர்களைப் போல் ஓடுகின்றன.
ஆயுதங்கள் ஊளையிட்டுச் சிதைத்த தமிழைப் போன்ற செழித்த நிலத்தின் காட்சிகளைத் திறம்பட உருவாக்குவதன் மூலம், சொந்த நிலத்தின் மீதான வேட்கை, மூர்க்கமாக இக்கதைகளில் வெளிப்படுகிறது. சொல்லவரும் கதைக்கான வடிவத்துக்காக ஆசிரியர் மேற்கொள்ளும் தேட்டம் கவனத்தை ஈர்க்கக்கூடிய அம்சம்.
அகரன், தொன்மத்தை, வரலாற்றைத் தன் கதைகளுக்காகப் பதம் பார்த்துப் பழக்கியிருக்கிறார். ஈழத்தில் மடிந்த ஒரு குழந்தையை இயேசு பாலகனாக மாற்றியிருக்கிறார். இயேசு பிறப்பதற்கு முன்னான சோழ மன்னன் குத்திகனை நம் உயரத்துக்கு நந்திக்கடல் வரை இந்தக் கதைக்குள் இழுத்துவந்திருக்கிறார்.
இந்தக் கதைகளின் அரசியல் சம்பவங்களை வைத்துப் பார்த்தால், ஆசிரியர் நேரடிக் கதை கூற்றைத் தவிர்த்திருப்பதற்கான நுட்பத்தை உணர முடிகிறது. அந்தச் சுதந்திரத்தின் வாள் வீச்சை அகரன் இந்தக் கதைகளுக்குள் நிகழ்த்தியிருக்கிறார்.
தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
மாபெரும் தாய்
அகரமுதல்வன்
ஜீவா படைப்பகம், காஞ்சிபுரம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 98413 00250