

அறம் சார்ந்து வாழ விரும்புகிற மனிதர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அறம் குறித்த சிந்தனையே இல்லாத இடத்தில் எனக்கான வாழ்க்கை எது? அறத்துக்கும் அன்புக்கும் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் உள்ள இடம் எது? இந்தக் கேள்விகள் உருவாக்கும் வெளி அவற்றின் பதிலைவிட மேலானது. ஜோ டி குருஸின் 'அஸ்தினாபுரம்' நாவல் இப்படியான வெளியில் வாசகர்களைப் பயணிக்க வைக்கிறது.
'அஸ்தினாபுரம்' நவீன வாழ்க்கையின் யுத்த பூமி. இந்த யுத்தம் மறைமுகமானது. ஆகவே சிக்கலானது. எதிரியைத் தனித்து அறிய முடியாத இடத்தில் நடக்கிற வேறு யுத்தம். வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் தவிர்க்க முடியாதவை. அதுபோல அழிவும் ஆக்கமும் உண்டு. யாருக்கு வெற்றி, யாருக்கு வாழ்வு? என்பதுதான் அடிப்படையான கேள்வி.
துறைமுகம் என்ற தலைப்பிலேயே நாவல் வந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிற கதையாடல். துறைமுகத்தின் புற, அகக் கட்டுமானங்களை இந்த நாவல்போல விரித்துச் சொல்லும் வேறொரு எழுத்து தமிழில் இல்லை. கப்பலுக்குச் சரக்குகளை ஏற்றுவது, கப்பலிலிருந்து சரக்குகளை இறக்குவது என்ற வார்த்தைகளுக்கு பின்னால் அதிர்கிற வெளி முடிவில்லாதது. நம் கண்படாத அந்த உலகம் அதிர்ச்சியூட்டுகிறது. தேசம் யாருக்காக என்ற கேள்வியின் வலி வளர்கிறது.
மரணத்தைச் சுமந்துவரும் கிரானைட் கற்களைக் கப்பலின் தளத்தில் பணியாளர்கள் அடுக்குவது குறித்து இந்தப் புத்தகத்தை வாசிக்காமல் ஒரு துளி உணர்வையும் பெற முடியாது. ராட்சத இயந்திரங்கள் தொழிற்சாலைகளுக்காகத் துறைமுகங்களுக்கு வந்து சேர்வது, சாலைகளில் அவற்றின் பயணம் என்று அறியப்படாத ஒரு உலகம் சுவாரசியமாக விரிகிறது. அதைவிட அங்கிருக்கும் அரசியல் மற்றும் ஊழல், நாம் அறிந்திருக்கும் அரசியலைவிட ஊழலைவிடப் பல மடங்காக இருக்கிறது.
துறைமுகம் என்ற சொல் கட்டமைக்கிற உலகம் புதிரானது. இந்தப் புதிய வெளிதான் நாவலின் வெற்றி. நாவலில் வருகிற அமுதன் பணத்தை, புகழைச் சம்பாதிக்கிறான். பணம், அதிகாரம், அறிவு, செல்வாக்கு இவை மட்டுமா வாழ்க்கை? இது அமுதனின் கேள்வி மட்டுமல்ல. வாசிப்பவரின் மனதிலும் எழுகிற கேள்வி. நாவலின் இறுதியில் உள்ள பக்கங்கள் இன்றைய வாழ்க்கையில் உள்ள வலியை, மன அவஸ்தையைப் பதிவுசெய்வதோடு இன்னொரு உயிரை எந்தச் சூழலிலும் வெறுக்காத மனதையும் வாசக மனத்தில் விதைக்கிறது.
ஒழுக்கமற்ற பேராசியரிடமிருந்து விலகி ஓடும் அமுதனின் பயணம் மிக நீண்டது. குடும்பத்தையும் சமூகத்தையும் தனித்து பார்க்கவில்லை அமுதன். சந்திக்கிற ஒவ்வொரு மனிதரையும் அவரது குடும்பத்தோடுதான் தொடர்புபடுத்திப் பார்க்கிறான். இறந்துபோன ஊழியர்களுக்கு கம்பனி வில்லைகளை வைப்பது. பணியாளர்களுக்குப் பொதுவான உடை. வேலைசெய்கிற இடத்தில் பாதுகாப்பு எல்லாமும் அப்படியானதே. குடும்பத்தைக் கட்டமைக்கும்போதும் இப்படியான ஒரு நேர்மையைக் கடைப்பிடிக்கிறான் அமுதன். உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியான வாழ்க்கை. இன்றைய வாழ்தலில் இது அவ்வளவு எளிதல்ல. அவனது உள்மனம் அதற்காக எப்போதும் போராடுகிறது.
அறச்சீற்றம் மைய இழையாக ஓடுகிற கதையாடல் இது. மு.வ., அகிலன், நா. பார்த்தசாரதி கதைகளில் வருகிற கற்பனை மனிதன் அல்ல அமுதன். வாழ்வின் அன்றாடத்தைச் சந்திக்கிற அல்லது சமூக வாழ்வின் சுமையை இறக்க முடியாமல் ஒவ்வொரு கணத்தையும் கடந்துபோகிற நிஜ வாழ்க்கையின் தெறிப்பு அமுதன்.
அனுபவத்தை மென்று நகரும் மனதின் பயணம்தான் எழுத்து. அனுபவமும் அப்படியான மனமும் இணைகிறபோது படைப்பு சூல் கொள்கிறது. ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ எழுதியது அப்படியான மனம்தான். ஒரு நூறு குடும்பங்களின் வாழ்க்கையைப் பின்னி எழுத்தாக்கிய ஜோ, இதில் அமுதனின் ஒற்றைச் சாளரம் வழியாக முடிவில்லாத மனிதவெளியை, வார்த்தைகளில் விளிம்புகட்டுகிற அதிசயத்தை நிகழ்த்துகிறார்.
ஜோ தனது அனுபவத்திலிருந்து எழுதுகிறார். அவரது அனுபவம் கடலும் கடல் சார்ந்த வெளியும்தான். பரதவ வாழ்க்கை மீதான பார்வை அவரது இயல்பானது. வலியும் துயரமுமாக வாழ்கிற பரதவ வாழ்க்கையில் இருக்கும் தொழில் திறனையும் வீரத்தையும் பேசுவது நேர்மையானதே.
கடலில் எந்த நேரமும் தாங்கள் பயணிக்கிற படகு கவிழலாம் என்கிற நிலையில் தேசம் கைவிட்ட அகதிகள் எந்த நம்பிக்கையில் பயணிக்கிறார்கள்? அறவெளி எங்காவது தட்டுப்படாதா என்கிற நம்பிக்கைதான். ஜோவும் அப்படித்தான் பயணிக்கிறார்.
- க.வை. பழனிச்சாமி, எழுத்தாளர்,
தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com
அஸ்தினாபுரம்
ஜோ டி குருஸ்
விலை: ரூ. 380
வெளியீடு: காக்கை, திருவல்லிக்கேணி, சென்னை-05.
தொடர்புக்கு: 044-2847 1890, kaakkaicirakinile@gmail.com