

கிராமிய மணம் கமழும் திரைப்படங்களின் இயக்குநராகப் புகழ்பெற்ற கஸ்தூரிராஜா, தான் பிறந்து வளர்ந்த கிராமிய மண்ணை, மக்களை, வாழ்க்கையை விரிவாக இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள மல்லிங்காபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கஸ்தூரிராஜா. இவருடைய இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. நவீன வாழ்க்கை முறை, வேகமான நகர்மயமாதல் ஆகியவற்றால் இன்றைய கிராமங்களின் புறத்தோற்றமும் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறிவிட்டது.
இதனால் தமிழர்கள் இழந்தவை என்னென்ன என்பதை அவர்களுக்குத் தெரியவைப்பதற்காகவே இந்த நூலைப் படைத்திருப்பதாக என்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கஸ்தூரிராஜா.
கிராம மக்கள் ஒருவரை ஒருவர் எப்படி அழைத்துக்கொள்வார்கள் என்பது தொடங்கி கிராம மக்களின் அன்றாட நடவடிக்கைகள், நம்பிக்கைகள், உணவு, தொழில்கள், பழக்க வழக்கங்கள், இல்லற வாழ்க்கை, பொது வாழ்க்கை, உறவு முறை, கொடுக்கல் வாங்கல், பிணக்குகள், அவை தீர்த்துக்கொள்ளப்படும் முறை, நிதி நிர்வாகம் என அனைத்து வாழ்வியல் கூறுகளும் நூலின் 123 அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன.
நூல் முழுவதும் மக்களின் வட்டார வழக்கிலேயே எழுதப்பட்டிருப்பது இந்த நூலின் இன்னொரு சிறப்பு. ‘சல்லிப்பட்டிக்காரென் பருசம் போடப்போறியான்’, ‘களவாணிப்பய மொழஞ்சுட்யான்’, ‘பொம்பளயாத் தூக்க வந்தியாஞ் சூரப்புலி’, ‘கழவாங்கப் போகணும், சவனஞ் சொல்லணுமப்பா’ என அத்தியாயங்களின் தலைப்புகளே கிராமிய மக்களின் பிரத்யேகப் பேச்சுவழக்கின் வாசத்தைச் சுமந்து நிற்கின்றன. 934 பக்கங்களுடன் கெட்டி அட்டையில் வண்ணப் படங்களுடன் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.
பாமர இலக்கியம்
கஸ்தூரிராஜா
வெளியீடு: விஜயலட்சுமி பதிப்பகம்
தி.நகர், சென்னை -
600 017
விலை: ரூ.500
தொடர்புக்கு - 73581 85055, 86681 01669
- கிருஷ்ணா
***
கண்ணைக் கவரும் பயண நூல்
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குப் பரிச்சயமான ந.ராமசுப்ரமணியன் கல்வியாளர், சட்ட, நிர்வாக ஆலோசகர், சமூக ஆர்வலர் எனப் பல முகங்களைக் கொண்டவர்.
இவர் தன் பணிகளின் நிமித்தமாகவும் சுய ஆர்வத்தாலும் தான் தொடங்கி நடத்திவரும் பள்ளியின் மேம்பாட்டுக்காகவும் உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இவர் எழுதிய பயண அனுபவக் கட்டுரைகளைப் பல இதழ்கள் வெளியிட்டுள்ளன.
இவர் எழுதியவற்றில் இலங்கை, ஆஸ்திரியா, ஜார்ஜியா, லாவோஸ், க்ரீஸ், மாண்டெநெகரோ, ஸ்லோவேனியா உள்ளிட்ட 45 நாடுகளைப் பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. தமிழர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இலங்கை குறித்த அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு நாட்டின் பண்பாடு, வரலாறு, வாழ்நிலை சார்ந்த தகவல்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வண்ணமயமான ஒளிப்படங்களுடன் ஏ1 அளவில் கெட்டி அட்டையில் வழுவழுப்பான காகிதத்தில் கண்களைக் கவரும் விதத்தில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடுகள் பற்றிய அரிய தகவல்களுடன் உலகம் குறித்த அறிவையும் விசாலப்படுத்துகிறது இந்நூல்.
நான் சென்ற சில நாடுகள்
டாக்டர் ந.ராமசுப்ரமணியன்
வெளியீடு: நடேசன் சாரிட்டிஸ்
தாம்பரம்,
சென்னை - 600 045
விலை: ரூ.950
தொடர்புக்கு: 044 22266614
- நந்தன்
***
கசபத் பேசும் வாழ்க்கை
வாழ்க்கையின் விசித்திரங்களை ஆராய்வதும் காரண காரியங்களை அலசுவதும் எவ்விதப் பயனுமற்றவை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வதே நமக்கு விதிக்கப்பட்ட ஒன்று. ‘கசபத்’ நாவலில் சாளை பஷீர் கையாண்டிருக்கும் அம்சம் இதுவே. காயல்பட்டினத்தில் வாழும் இஸ்லாமிய சமூகத்தின் வாழ்க்கையே இந்த நாவலின் கதைக்களம்.
பிழைப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்வதை வாடிக்கையாகக்கொண்டிருக்கும் அந்த மக்களின் வாழ்க்கை ஏக்கங்களும் ஏமாற்றங்களுமாக விரிவதே அதன் கதை. 90-களில் மதத்தை வைத்து அரசியலில் களமாடிய பிரபல தலைவரின் வசீகரப் பேச்சும், முரட்டுத் தர்க்கங்களும் எப்படி ஆடியோ கேஸட்களின் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்ய முயன்றன என்பதையும், அதை அந்தச் சமுதாயப் பெரியவர்கள் எப்படி எதிர்த்தார்கள், வெறுத்தார்கள் என்பதைச் சொல்லியிருக்கும் விதம், இந்தக் காலகட்டத்துக்கும் பொருந்தும். காயல்பட்டின வட்டார மொழியில், சார்புகளின்றி ஒரு காலத்தின் கதையை வெகு இயல்பாக இந்த நாவலில் சாளை பஷீர் சொல்லியிருக்கிறார்.
கசபத் (நாவல்),
ஆசிரியர்: சாளை பசீர்,
வெளியீடு: சீர்மை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 88072123326
- முகமது ஹுசைன்
***
வாழ்வியல் வாதைகள்
ஒரு பிரதேச மக்களின் வாழ்வியல் வாதையை, அந்நிலத்தின் பூர்வ கதையைச் சொல்கிறது நாராயணி கண்ணகியின் ‘வாதி’ நாவல். ‘ஜனங்கள் ஆண்டைகளுக்கு நடுங்குவதைப் போல் பனிக்கு நடுங்கியாக வேண்டும்’ என்ற நாவல் விவரிப்பிலிருந்து ஏலகிரி, ஜோலார்பேட்டை பகுதியின் சூழலையும், வாழ்ந்த மக்களின் நிலையையும் நாவல் முதலிலேயே நமக்குச் சொல்லிவிடுகிறது.
இந்த நாவலில் நடராஜன் அசாத்தியங்கள் நிறைந்த நாயகன். தன் உயிரையும் பொருட்படுத்தாமல், ஓடும் கூட்ஸ் ரயிலில் ஏறி உள்ளிருக்கும் மூட்டைகளைத் தள்ளிவிட்டு, அதிலிருக்கும் தானியங்களை மக்களுக்குப் பகிர்ந்தளித்துப் பசியடங்கும் முகம் கண்டு மகிழக் கூடியவன்.
அந்தக் கதை நாயகன் இறந்துவிட்டாலும் நம்முள் அவரைத் திரும்பப் பிறக்கச் செய்யும் சாத்தியத்தை நாவல் செய்கிறது. ‘‘பயத்திலேயே ஒங்கள வெச்சினு இருக்கறான். பயம் போவணும், உங்க எல்லோருக்கும் என்னிக்குப் பயம் போவுதோ, அன்னிக்கு ஜமீன் போயிரும்’’ என்று நாவலில் வரும் வழக்கறிஞர் கிருஷ்ணனின் குரல் இன்றைக்கானதாகவும் இருக்கிறது.
‘‘ஜமீன்தார் எங்கள சாட்டையில அடிச்சான்... தாங்கிட்டோம். ...மீனுங்கள தூண்டி முள்ளுல புடிச்சா தொண்ட வலிக்குமென வல போட்டுத்தான் புடிப்போம். வலிக்குத் துடிக்கக் கூடாது. மீனுங்க எப்புடித் துடிச்சிருக்கும், அவனும் ஒரு நாளைக்குத் துடிதுடிக்கணும்’’ என ஒரு உரையாடல் மூலம் கனன்றுகொண்டிருக்கும் அவ்வூர் மக்களின் கோபத்தையும் நாவல் சித்தரித்துள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்த வாய்வழி வரலாறு இருக்கும். அதைக் கலை வடிவத்துக்குள் கொண்டுவருவது போற்றுதலுக்குரிய செயல். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஜோலார்பேட்டையில் நிகழ்ந்த சம்பவங்களை நாராயணி கண்ணகி ‘வாதி’ நாவலில் வரலாறாக்கியுள்ளது பாராட்டுக்குரியது.
வாதி (நாவல்)
நாராயணி கண்ணகி
ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
விலை: ரூ.320
தொடர்புக்கு:
89250 61999
- ந.பெரியசாமி